‘’நீயொன்னும் அவ்ளோ பெரிய புட்டாப்பு இல்ல’’ – எலான் மஸ்க்!

‘’நீயொன்னும் அவ்ளோ பெரிய புட்டாப்பு இல்ல’’ – எலான் மஸ்க்!

லான் மஸ்க் ஏன் டிவிட்டரை வாங்கினார் என்பது இன்னமும் மர்மமாகவே இருக்கிறது. அதற்கு பல்வேறு புனைசுருட்டுகள் கட்டவிழ்க்கப்படுகின்றன. ஆனால் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய நாள்தொடங்கி ட்விட்டர் சந்து தீபாவளி காலத்து இரவு ரயில்போல பரபரப்பாக இருக்கிறது. ட்விட்டரை வாங்கிய மஸ்க்கின் அதிரடி அறிவிப்புகளில் ஒன்று நீலக்குறிக்கு  எட்டு டாலர் காசு வசூல் பண்ணப்போகிறேன் என்கிற அறிவிப்புதான். பிரபலங்களுக்கும் மீடியா ஆட்களுக்கும் மட்டுமே வழங்கிக்கொண்டிருந்த இந்த ஓசி நீல ரிப்பனை இப்போது கட்டணத்தில் எல்லோருக்கும் வழங்கப்போகிறாராம் எலான். இது பிரபலங்களுக்கு மத்தியில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபலமல்லாதவர்களுக்கும் நீலக்குறியற்றவர்களுக்கும் ஒரே ஜாலியாக இருக்கிறது. எல்லோருக்கும் குடுத்துட்டா எங்களுக்கும் அவர்களுக்கும் என்ன வேறுபாடு என்று துடியாக துடிக்கிறார்கள். இப்படி துடிப்பவர்கள் யார் என்று பார்த்தால் கஸ்தூரி, சுமந்த்ராமன் என ஒரே டைப் ஆட்களாக இருக்கிறார்கள். எலான்மஸ்க் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து ட்விட்டரை வாங்கி இருக்கிறார். அவ்வளவு பணம் கொடுத்து வாங்கியது என்னமோ இந்த நீல ஆம்ஸ்ட்ராங்குகள் எல்லாம் ஓசியிலேயே புரட்சி போராட்டம் பண்ணுவதற்கு என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. எலான் ஒரு வியாபாரி. அவன் கொடுத்திருக்கிற தொகை மிகமிகப்பெரியது 44பில்லியன் டாலர் என்று சொன்னால் குறைவு போல இருக்கிறது. நான்கு லட்சம் கோடி ரூபாய் என்றால் எவ்வளவு பெரிதாக இருக்கிறது. அவ்வளவு காசையும் கொண்டுபோய் ஒரு கம்பெனியில் கொட்டிவிட்டு சும்மாவா இருப்பான் சுந்தர மஸ்க். நீலக்குறிக்கு அவன் முன்வைக்கிற துட்டுக்கு லட்டு திட்டம் என்ன செய்யும். இதுநாள் வரை பெருமையாக ‘’பாருங்க பிரண்ட்ஸ் நான் நீல ரிப்பன் போட்டிருக்கேன். இந்த சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறேன்’’ என்று தன்னை வியந்தோதிக் கொண்டிருந்தனர். சாதிய பின்னொட்டைபோல.

மஸ்க் செய்திருப்பது, ‘’நீயொன்னும் அவ்ளோ பெரிய புட்டாப்பு இல்ல’’ என்று எல்லோரையும் ஒரே அளவீட்டில் நிறுத்தியது. நீலத்தை எல்லோருக்குமானதாக மாற்றியது. ‘’டேய் நானும் நீயும் சமம் இல்லைடா கஷ்டப்பட்டு நான் வாங்கினதும் நீ வச்சிருக்கிறதும் ஒன்னா’’ என்கிற பதட்டம்தான் பலருக்கும். அதற்கெல்லாம் காதுகொடுக்கிற ஆளாகத்தெரியவில்லை மஸ்க். எதிர்ப்பு குரலா குடுத்துக்கோ குடுத்துக்கோ ஆனா எட்டு டாலரை எடுத்துவைடா அயோக்கிய பிரபலமே என்கிறான். இரண்டுவிதமான ஆட்களை இந்த நீலக்குறி விவகாரம் பாதித்திருக்கிறது. ஒன்று பிரபலாக இருந்து நீலக்குறி பெற்றவர், இன்னொறு ரகம் நீலக்குறியை எப்படியோ உள்ளடி வேலைகள் பார்த்து பெற்று நீலக்குறியால் பிரபலமானவர்கள்.

ட்ராக்கர்கள் எனப்படும் சினிமா வசூல் விபரங்கள் சொல்லியும் விமர்சனம் பண்ணியும் தயாரிப்பாளர்களிடம் காசு வசூல் பண்ணுகிற ஒரு பிரிவினர் சில ஆண்டுகளாக எங்கிருந்தோ முளைத்துவந்தனர். வரும்போதே லட்சக்கணக்கில் பாலோயர்கள், நீலக்குறி என அவதரித்தனர். இவர்கள் பிறக்கும்போதே சோஸியல் மீடியா இன்ப்ளூயன்ஸர்களா பிறந்தவர்கள். காசு கொடுத்து அதிக பாலோவர் உள்ள ஐடியும் நீலக்குறியும் வாங்கி பிரபலமானவர்கள். இந்த தரப்புகள் மொத்தமே இப்போது பதட்டத்தில் இருக்கிறார்கள். இதைவைத்துதான் பேரம் பேசி சினிமா கம்பெனிகள், விளம்பர நிறுவனங்களிடம் வசூல் பண்ணிக்கொண்டிருந்தவர்களுக்கு ஆப்பு இல்லையா இது. ஆனால் இவர்களை காட்டிலும் பதட்டமாக இருக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. சங்பரிவாரங்கள்.

இவர்கள் ஏன் பதட்டமாகவேண்டும். பிறகு கவனித்து பார்க்கையில் இந்த நீலக்குறி சங்கிகளில் முக்கால்வாசி பேர் பொய் செய்தி பரப்பிகளாக இருக்கிறார்கள். கட்சியின் செல்வாக்கை பயன்படுத்தி நீலக்குறி வாங்கியவர்களாக இருக்கிறார்கள். நீலக்குறிக்கும் பொய்செய்திக்கும் என்ன தொடர்பு? இருக்கிறது. சாதாரண சங்கி பகிர்கிற செய்தியைவிட நீலக்குறி கொண்ட ஒரு பிரபல சங்கி பகிர்கிற செய்திக்கு இயல்பிலேயே ஒரு நம்பகத்தன்மை கூடிவிடுகிறது. காரணம் இவர் ஒரு வெரிபைட் ஆள். இவர் சொன்னால் உண்மையாக இருக்கும் என்பதாக வெகுஜனங்களால் புரிந்துகொள்ளப்படுகிறது. இது பொய்செய்தி பரப்புவதற்கு வாகான ஒன்றாக அமைகிறது. இதை முதன்முதலில் கண்டுபிடித்து பயன்படுத்தியது சங்கிகள்தான். வடக்கில் இப்படி பொய் செய்தி பரப்புகிற பெருவாரியான ட்விட்டர் கணக்குகளுக்கு நீலக்குறி உண்டு.

ட்விட்டர் மட்டுமல்ல ஃபேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் என எல்லா பக்கமும் சங்கிகளுக்கு நீலக்குறிகள் ஏராளம். ஓசிதானே காசா பணமா… இப்படி நீலக்குறி பெற்றுத்தரவும் நிறைய நிறுவனங்கள் உண்டு. காசு கொடுத்தால் தேவையான டாகுமென்ட்களை உருவாக்கி உங்களுக்க்கு வாங்கித்தருகிறார்கள். தற்கால அரசியல் சூழலில் இணையம் நம் மீது செலுத்துகிற செல்வாக்கு அடிப்படையில் சங்கிகளின் இந்த Strategy மிகமிக திறன்மிக்க ஒன்று. அதனால்தான் அவர்களுக்கு காது துடிக்கிறது. நமக்கு காமெடியாக இருக்கிறது. மஸ்க்கு நல்லா போடு அவன் தலைலயே என்று துள்ளுகிறது.

சரி பேஸ்புக்கிலும் இந்த நீலக்குறி இருக்கிறதே அதற்கும் காசு கேட்டால்… ட்விட்டர் நீலக்குறிக்கு இருக்கிற மரியாதை இங்கே கிடையாது. இங்கே யாரும் அதை ஒரு மண்ணுக்கும் மதிப்பதில்லை என்பதால் காசு கேட்டாலும் யாரும் கவலைப்படப்போவதில்லை.

அதிஷா

Related Posts

error: Content is protected !!