நிறைவேறியது ஜல்லிக்கட்டுக்கான சட்ட முன்வடிவு! ஆனால் கலவரம் ஏன்?
மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் வன்முறை, போலீஸார் தடியடி, கண்ணீர் புகை வீசியது உட்பட பல்வேறு கறார் நடவடிக்கை மேற்கொண்டது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள், கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் சென்னை கமிஷனர் ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, வன்முறையில் ஈடுபட்டது மாணவர்கள் அல்ல. காவல் துறையினர் மற்றும் வாகனங்கள் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கலவரத்தில் 94 காவலர்கள் காயம் அடைந்தனர்.
51 காவல் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. சமூக விரோத சம்பவத்தில் ஈடுபட்ட 40 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மிகவும் பொறுமையாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.
போராட்டம் துவக்கத்தில் அமைதியாக அறவழியில் சென்றது. அதை காவல் துறை தரப்பிலும் பாராட்டினோம். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள்.ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர், என்றார்.
முன்னதாக் ஜல்லிக்கட்டு நடத்த தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசரச்சட்டத்திற்கு பதிலாக புதிய நிரந்தர சட்டத்தை இயற்றுவதற்கான சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணியளவில் தொடங்கியது. விலங்குகள் வதைத் தடுப்பு சட்ட திருத்த முன் வடிவினை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து மசோதா குறித்து பேசினார். இந்த சட்ட முன் வடிவை , சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராமசாமி ஆகியோர் வரவேற்றுப் பேசினர். உறுப்பினர்களின் விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலமாக புதிய சட்ட முன்வரைவு ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர் நீதி மன்ற நீதிபதி தலைமையில் விசா ரணை நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநரை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு அளித்த மனு விவரம்: ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்திய மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் செய்த கெடு பிடிகள், அவர்களைக் கலைக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம் மாநிலம் முழுவதும் சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் போரா டியவர்கள் மீது கண்மூடித்தனமான தடியடி நடத்தப்பட்டு, பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. சட்டமுன்வடிவு நிறைவேற்றிய பிறகும் இன்னும் மாநிலம் முழுவதும் போராட்டக்காரர்கள் கைது, அவர்கள் மீது தடியடி எல்லாம் தொடர்கிறது. மெரினா கடற்கரையே போர்க்களம் போல காட்சியளிக்கும் அளவுக்கு காவல் துறையினர் அடக்குமுறையில் ஈடு பட்டிருப்பது கவலையளிக்கிறது.
இளைஞர்கள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதுடன், கைது செய்யப்பட்டவர்களையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டத்தில் காவல்துறை தாக்குதல் நடத்தியது குறித்து பணியில் இருக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.