நாட்டில் சூட்டைக் கிளப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்!
உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகமே இல்லை என்றும் கடந்த ஒரு சில மாதங்களாக நடக்கும் நிகழ்வுகள் ஏற்புடையதாக இல்லை என்றும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் கூட்டாக இன்று பகீர் புகார் கூறியுள்ளனர். நம் நாட்டைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பத்திரிகையாளர்களை என்றும் சந்தித்ததில்லை. முதன்முறையாக இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், மதன் பி லோகூர் ஆகியோர் இன்று டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது பகீர் புகார் கூறினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
“இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எங்கள் கவலையை மக்களுக்கு கூற விரும்பியதால் செய்தியாளர்களை சந்தித்தோம்.
உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை சில காலத்திற்கு முன்னதாக நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். இதுதொடர்பாக கடிதம் எழுதினோம். ஆனால் எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. நாட்டு மக்களுக்கு சில விவரங்களை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே தான் செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
நீதித்துறையில் நீதிமன்ற விதிகள் சரியாக பின்பற்றப்படவில்லை. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஜனநாயகம் இல்லையென்றால், நீதிமன்றம் மட்டுமின்றி நாடே பாதிக்கப்படும்” எனக்கூறினார்.
இதன் பின், தலைமை நீதிபதி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நீதிபதிகள ‘‘இதை நாட்டின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்’’ எனக்கூறினர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை வெளியிடுவதாகவும் அவர்கள் கூறினர். அந்த கடிதம் வெளியான பிறகே, நீதிபதிகளின் பேட்டியின் விவரங்கள் முழுமையாக வெளியாகும் என தெரிகிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பிரதமர் மோடி சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை உடனடியாக அழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். நீதித்துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமமர் மோடி ஆலோசித்து வருகிறார். இதில் நீதிபதிகள் குற்றச்சாட்டு குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக கூறப்படுகிறது.