நல்ல முன்மாதிரி கட்டமைப்பாக ஆட்டோ சவாரி கிடைக்குமா?

நல்ல முன்மாதிரி கட்டமைப்பாக ஆட்டோ சவாரி கிடைக்குமா?

ன்முகம் கொண்ட சென்னை நகரின் ஓர் முக்கிய அங்கமாக இருப்பது ஆட்டோக்கள் ஆகும். பல நகரங்களில் விரும்பி உபயோகிக்கப்படும் இந்த மூன்று சக்கர ஆட்டோக்கள் சென்னையில் அச்சுறுத்தும் அம்சமாகவே இருக்கிறது. பெட்ரோல் விலை ஏறினாலும் கடும் மழை பெய்தாலும் கடுமையான அக்னி வெயில் காலத்திலும் ஆட்டோவில் பயணிப்பது ஒருவகையில் அவசியமானது, ஆனால் டிரைவருடன் உரிய விலைக்காக விவாதித்து, கார சார விவாதத்திற்கு பிறகு ஒருவழியாக பயணித்தாலும் ஓட்டுனர் மகிழ்ச்சியாக பயணம் செய்தவரை இன்முகத்துடன் பார்ப்பது இல்லை! வாகன உரிமை பெற பரீட்சைகள் இருக்கிறது. பிறகே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.

ஆனால் பொது வாகன ஓட்டி யாருக்கும் பயணிகளை எப்படி ஆனந்தமாக பயணிக்க வைப்பது என்பது பற்றி பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டதே கிடையாது! ரூ.50 க்கு சவாரி என்றால் அவர் கேட்பதோ ரூ.100, இறுதியில் ரூ.60க்கு வர ஒப்புக்கொண்டாலும் ஏனோ அவருக்கு திருப்தி கிடைத்து பயணியை அழைத்துச் செல்வது மிக அபூர்வமாகும். ஓலா, ஊபர் முதலிய கார் சேவைகள் ‘ஆப்’ வழியாக அழைக்கப்பட்டது. அதனால் ஆட்டோக்களில் சவாரி குறைய துவங்கியது. ஆனால் சமீபமாக எல்லா வாகன அழைப்பு ஆப்களிலும் ஆட்டோக்களும் இணைக்கப்பட்டுள்ளது. அட, குறிப்பிட்ட தொகைக்கு வந்துவிட்டதே ஆட்டோ என்று மகிழ்ந்த சில நாட்களில் ஆட்டோகாரர் வந்தவுடன் கூடுதலாக ரூ.10 அல்லது ரூ.20 தந்தாக வேண்டும் என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.

சமீபமாக அந்த வரிசையில் ஊபர், ஓலா கார் டிரைவர்களும் சேர்ந்து விட்டனர். ஆப்பில் அழைத்தாலும் நம்மிடம் தொலைபேசியில் அழைத்து எங்கே போக வேண்டும்? சவாரி தொகையை பணமாக தர முடியுமா? அதாவது டிஜிட்டல் பரிவர்த்தனை வேண்டாமே எனக்கூறிவிட்டு பணமாக தராதவர் பயணத்தை ரத்து செய்து விடுகின்றனர்.

குறிப்பாக விமான நிலையமோ, ரெயில் நிலையமோ செல்பவர்களுக்கு நேரத்துக்கு சென்றாக வேண்டுமே. அவர்களிடம் இப்படி கோரிக்கை வைத்து மிரட்டுவது சரிதானா?

சென்ற வாரம் இப்பிரச்சனைக்குத் தீர்வு காண இந்நிலையில் ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் குறித்து ஆட்டோ தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் நுகர்வோர் நல அமைப்பினரிடம் போக்குவரத்துத் துறை ஆலோசனை நடத்தியது. அந்தப் பேச்சு வார்த்தையின் முடிவில் அரசுக்கு போக்குவரத்துத் துறை தந்திருக்கும் பரிந்துரையின்படி கட்டண விவரம் பின்வருமாறு இருக்க வேண்டுமாம்.

* முதல் 1.5 கிலோமீட்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 40.

* பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.18.

இது தற்போதைய குறைந்தபட்ச கட்டணமாக இருக்கும். ரூ.25 மற்றும் ஒரு கிலோமீட்டருக்கு ரூ.12 என்ற கட்டணத்தை விட அதிகம் தான். அவை 2013–ல் நடைமுறைக்கு வந்தவையாகும்.

இன்றைய பெட்ரோல் கட்டணமாக லிட்டருக்கு ரூ.100, வாகன நெரிசல்களும் விலைவாசி உயர்வையும் கணக்கில் கொண்டு பார்த்தால் பரிந்துரைக்கப்பட்ட கட்டணம் சரியானதுதான்.இதுதவிர, ஜிபிஎஸ் மீட்டர் வழங்குதல், அரசு சார்பில் முன்பதிவு செயலி வடிவமைத்தல் போன்ற அவர்களது கோரிக்கைகள் குறித்தும் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள்.

எது எப்படியோ சென்னை நகரில் ஆட்டோ ஓர் முக்கிய அம்சமாகும். அதை ஓட்ட உரிமம் தரப்படுவது முதல் அவர் வாகனத்தில் அமர்ந்து ஓட்டும் முறை மற்றும் பயணிகளிடம் பழகும் அணுகுமுறை வரை எல்லாவற்றிலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புபவர்கள் இருப்பதை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மனதில்கொண்டு மறுசீராய்வு செய்து நல்ல முன்மாதிரி கட்டமைப்பாக ஆட்டோ சவாரிகள் வளர உறுதி செய்தாக வேண்டும்.

ஆர். முத்துகுமார்

 

Related Posts