நாம் இணையதள அடிமையா?ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள்!

நாம் இணையதள அடிமையா?ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள்!

இணைய பயன்பாடு பற்றிய புள்ளிவிவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யமானவை. இத்தகையை புள்ளிவிவரங்களை தரும் ஆய்வு அறிக்கைகளும் அவ்வப்போது வெளியாகின்றன. இணைய உலகில் ஏற்படும் மாற்றங்களையும் புதிய போக்குகளையும் அறிந்து கொள்ள இவை உதவுகின்றன. இணைய பயன்பாட்டை புரிந்து கொள்ளவும் இவை கைகொடுக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பியூ ஆய்வு மையம் இணைய பயன்பாடு தொடர்பான ஆய்வில் முன்னிலை வகிக்கிறது. எல்லாம் சரி, இந்த ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் பொதுவானவை. இவற்றுக்கு மாறாக தனிநபராக நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் வித்தையும் , உங்கள் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? இந்த ஆர்வத்தை நிறைவேற்றக்கூடிய இணைய சேவைகளும் இருக்கின்றன என்பது தான் உற்சாகம் தரக்கூடிய தகவல்.அத்துடன் நாம் இணைய தளங்களுக்கு அடிமையாகி விட்டோமா? என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளவும் உதவும் தளங்களிது
computer-addiction
இணையதளங்கள் ஆய்வு

முதலில் உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் சேவையான சர்ஃப்கோல்லென் பற்றி பார்க்கலாம். ஸ்வீடன் நாட்டைச்சேர்ந்த இணைய நிறுவனம் வழங்கும் இந்த இணைய சேவை பிரவுசர் நீட்டிப்பாக செயல்படுகிறது. இந்த சேவை , நீங்கள் இணையத்தில் உலாவும் வித்ததை ஆய்வு செய்து அவற்றை புள்ளிவிவரங்களாக அளிக்கிறது.
இந்த சேவையை பயன்படுத்த சர்ஃப்கோல்லென் இணையதளத்திற்கு (http://surfkoll.se/ ) சென்று அதன் பிரவுசர் நீட்டிப்பை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இப்போதைக்கு கூகிள் குரோம் மற்றும் மொசில்லாவின் பயர்பாக்ஸ் ஆகிய பிரவுசர்களில் மட்டுமே இது செயல்படுகிறது.

இதை இன்ஸ்டால் செய்தவுடன், ஒரு வார காலத்திற்கு நீங்கள் இணையத்தில் சென்று பார்க்கும் இணையதளங்களை எல்லாம் கவனித்து, நீங்கள் இணையத்தை பயன்படுத்தும் விதம் தொடர்பான விவரங்களை முன்வைக்கிறது. அழகிய வரைபடமாக அளிக்கப்படும் இந்த விவரங்களில், முதல் தகவல் கடந்த ஒரு வார காலத்தில் நீங்கள் மொத்தம் எத்தனை இணைய பக்கங்களை பார்த்திருக்கிறீர்கள் என்பது தொடர்பாக அமைகிறது. நீங்கள் பார்த்த மொத்த இணைய பக்கங்களின் எண்ணிக்கை தரப்படுவதோடு, இந்த எண்ணிக்கை குறைவானதா, மிதமானதா அல்லது மிகவும் அதிகமானதா எனும் விவரமும் சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் மூலம் நீங்கள் இணையத்தில் எந்த அளவு நேரத்தை செலவிடுகிறீர்க்ள் என்று தெரிந்து கொள்ளலாம்.

இரண்டாவதாக , ஒரு வார காலத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்திய முதல் மூன்று இணையதளங்கள் பட்டியலிடப்படுகிறது. இதன் மூலம் எந்த தளத்தில் நீங்கள் அதிக நேரத்தை செலவிடுகிறீர்கள் என தெரிந்து கொள்ளலாம். இதைப்பார்த்தே உங்கள் நடவடிக்கையில் மாற்றம் தேவையா என்றும் தீர்மானித்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு பேஸ்புக் ,யூடியூப் போன்ற தளங்களை நீங்கள் அதிகம பயன்படுத்தியிருந்தீர்கள் என்றால் உங்கள் இணைய நேரம் பயனுள்ளதாக அமைந்ததா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். அதே போல ஜிமெயிலும் அதில் இடம்பெற்றிருந்தால், நீங்கள் மெயில் பார்ப்பதில் அதிக நேரம் செலவிட்டதாக தெரிந்து கொள்ளலாம். உங்கள் மெயில் பயன்பாடு அலுவலகம அல்லது வேலை சார்ந்ததாக இல்லை என்றால் இதையும் நீங்கள் குறைந்து கொள்ள வேண்டும்.

மூன்றாவதாக , ஒவ்வொரு நாளும் உங்கள் இணைய பயன்பாடு ஒப்பிடப்பட்டு, எந்த நாளில் அதிக நேரம் இணையத்தில் செலவிட்டு இருக்கிறீர்கள் என்று காண்பிக்கப்படும்.ஒரு வார கால இணைய பயன்பாடு மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் , நீங்கள் இணையத்தை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். . இந்த புள்ளிவுவரங்கள் தனித்தனியாக மற்றும் அனைத்தும் ஒரே வரைபடமாகவும் காண்பிக்கப்படுகிறன. உங்கள் இணைய பழக்கத்தை இப்படி வரைபடமாக பார்க்க முடிவதே உற்சாகத்தை தரலாம்.

இந்த அடிப்படையில் உங்கள் இணைய பழக்கத்தில் மாற்றத்தையும் செய்து கொள்ளலாம். ஒவ்வொரு வாரமாக இணைய பயன்பாடு பற்றிய விவரங்களை கொண்டு குறிப்பிட்ட கால அளவில் உங்கள் இணைய செயல்பாட்டையும் அலசி ஆராயலாம். நீங்கள் எந்த இணையதளங்களை அதிகம் பார்வையிடுகிறீர்கள் என்ற விவரம் உங்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் இண்ட சேவை அதை அழகாக கவனித்து சொல்கிறது.
online report
மேலும் இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களையும் நீங்கள் இமெயில் மூலம் அல்லது பேஸ்புக்கிலும் பகிர்ந்து கொள்ளலாம்.உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்யும் இந்த சேவை, நீங்கள் விஜயம் செய்யும் தனிப்பட்ட தளங்களை பற்றிய விவரங்களையோ அல்லது நீங்கள் பகிர்ந்து கொள்ளும் தகவல்களையோ சேமித்து வைக்கவில்லை என்று உறுதி அளிக்கிறது. இணைய கண்காணிப்பு யுகத்தில் இது மிகவும் முக்கியமானது.

இமெயில் ஆய்வு

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்வது போலவே, நீங்கள் இமெயிலை பயன்படுத்தும் விதத்தையும் ஆய்வு செய்து அறிந்து கொள்ளலாம் தெரியுமா? அதற்காக என்றே ஜிமெயில் மீட்டர் இருக்கிறது. ஜிமெயில் மீட்டர், உங்களுக்கு எத்தனை பேரிடம் இருந்து இமெயில்கள் வந்துள்ளன, அவற்றில் முக்கியமானவை மற்றும் நட்சத்திர குறியுடன் சேமிகப்பட்டவை எத்தனை போன்ற விவரங்களை சொல்கிறது. அதே போல் நீங்கள் எத்தனை மெயில்களை அனுப்பியிருக்கிறீர்கள் என்ற விவரத்தையும் தருகிறது. அது மட்டுமா, உங்கள் தினசரி மெயில் பயன்பாடு பற்றிய விவரங்களையும் வரைபடமாக பார்க்கலாம்.

ஜிமெயில் வரும் மெயில்களை வகைப்படுத்திக்கொள்ளும் வசதி இருக்கிறது தெரியுமா?மெயில்களை நீங்கள் நீக்கலாம், இன்பாக்சிலேயே விட்டு வைக்கலாம், குறிப்பிட்ட தலைப்புகளில் சேமிக்கலாம். இவற்றை எல்லாம் கணக்கிட்டு வரைபடமாகவும் அளிக்கிறது இந்த சேவை. அதே போல ஒரு மெயிலுக்கு பதில் அளிக்க நீங்கள் எடுத்துக்கொள்ளும் நேரம், உங்களுக்கு பதில் வர ஆகும் நேரம் , உங்கள் மெயில்கள் எந்த அளவுக்கு நீளமாக இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் இந்த மீட்டர் கண்டறிந்து சொல்கிறது.

இமெயிலில் நீங்கள் உரையால நிகழ்த்துகிறீர்களா என்பதையும் இது கவனிக்கிறது. அதிக மெயில் அனுப்புகிறவர், அதிக மெயில் பெறுபவரையும் இது அடையாளம் காட்டுகிறது.நிச்சயமாக இணைய சேவைகளில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது இமெயிலாக தான் இருக்கும். இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது இமெயில் பயன்பாட்டில் தவறான முன்னுரிமை கொண்டிருக்கலாம். அவற்றை எல்லாம் சரி செய்ய , உங்கள் இமெயில் பயன்பாட்டை அறிக்கையாக அளித்து உதவுகிறது ஜிமெயில் மீட்டர்.

கூகிளின் அனுமதி பெற்ற சேவை இது என்பது குறிப்பிடத்தக்கது. கூகிள் டாக்குமெண்ட்சிற்குள் சென்று அதில் ஸ்பிரெட்ஷீட்டை ஓபன் செய்து ஜிமெயில் மீட்டரை தேர்வு செய்ய வேண்டும். மேலும் விரிவான வழிகாட்டலுக்கு : https://developers.google.com/apps-script/articles/gmail-stats?csw=1

பேஸ்புக் பயன்பாடு

ஜிமெயில் போலவே பெரும்பாலான இணையவாசிகள் அதிகம் பயன்படுத்துவது சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் தான். இணையவாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும் பேஸ்புக் பயன்பாடு குறித்து தான். நீங்களும் பேஸ்புக் பயன்பாடு பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் , மிகச்சிறந்த மாற்று தேடியந்திரமான வோல்பிராம் ஆல்பா , அந்த வசதியை வழங்குகிறது. கணக்கீட்டு இயந்திரம் என பிரபலமாக குறிப்பிடப்படும் வோல்பிராம் ஆல்பாவில் பேஸ்புக் பயன்பாட்டிற்கான தனிப்பட்ட ஆய்வு அறிக்கையை வழங்குகிறது . (http://www.wolframalpha.com/facebook/ ) .

பேஸ்புக் கணக்கை இந்த தேடியந்திரம் அணுக அனுமதி கொடுத்தீர்கள் என்றால் பேஸ்புக்கை நீங்கள் எப்படி பயன்படுத்துக்கிறீர்கள் என்று அழகாக புரிய வைத்து விடுகிறது.
online facebokk report 2
உங்கள் வலைப்பின்னலில் இருக்கும் நண்பர்கள் யார்? ,அவர்கள் உலகில் எங்கு இருக்கின்றனர் ? அதிக தொலைவில் உள்ளவர்கள் யார்? உங்கள் நண்பர்களுக்கு எத்தனை நண்பர்கள் உள்ளனர் ஆகிய விவரங்கள எல்லாம் அறிக்கையாக பெற்றுக்கொள்ளலாம். பேஸ்புக்கில் நீங்கள் என்ன விதமான கருத்தை பயன்படுத்துகிறீர்கள், எப்போது பேஸ்புக்கை அதிகம் பயன்படுத்துகிறீர்கள் உள்ளிட்ட விவரங்களும் அறிகையில் இருக்கும். இன்னும் என்ன வேண்டும் ?

பேஸ்புக்கில் நீங்கள் தெரிவித்த கருத்துக்களில் அதிகம் விவாதிக்கப்பட்டவை, பகிர்ந்து கொண்ட புகைப்படங்களில் அதிகம் விரும்பபட்டவை போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வளவு ஏன் உங்கள் பேஸ்புக் நண்பர்கள் தொடர்பான புதிய புரிதலையும் பெறலாம்.

தகவல் :http://cybersimman.wordpress.com/2014/07/03/internet-28/

error: Content is protected !!