நதிநீர் இணைப்பை எதிர்ப்பது நியாயமா?

புதிய பிரதமர் நரேந்திர மோடி முதன் முதலாகக் கூட்டிய நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதியின் சம்பிரதாய உரை மூலம், புதிய அரசின் எதிர்காலத் திட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் இடம் பெற்ற முதல் மூன்று விஷயங்கள் : கருப்புப் பணத்தை மீட்பது, தேசிய நதிகளை இணைப்பது, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது என்பவையாகும். இதில் இரண்டாவதான தேசிய நதிகளை இணைப்பது என்பது பா.ஜ.க. அரசு அறிவித்துள்ள விவசாயக் கொள்கை எனலாம். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசின் விவசாயக் கொள்கை நதிகளை இணைப்பது அல்ல. அது சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் என்றுகூறி நதிகள் இணைப்பை காங்கிரஸ் கை கழுவி விட்டது. இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை தரவில்லை. காரணம், மாநிலங்களுக்கு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அதே சமயம் தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு மாநில இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் வரவேற்றுள்ளன.
பக்கத்தில் கேரளாவில் ஆட்சி செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு, தேசிய நதிகளை இணைப்பது பற்றிய எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை. மேற்குவங்க இடதுசாரிக் கட்சிகள் அங்கு பாசனநீர் உபரியாக இருப்பதால். நதிகளை இணைப்பதில் அக்கறை காட்டவில்லை. ஆகவே, தேசிய நதிகளான கங்கை – காவிரி இணைப்பு என்பது நீரியல் நிபுணர்களின் நீண்டகாலக் கனவாக அமைந்ததே தவிர, நடைமுறைச் சாத்தியமுள்ளதாக அதனைச் செய்ய காங்கிரஸ் மற்றும் இடதுசாரித் தேசியக் கட்சிகள் தயாராக இல்லை.
1947இல் சுதந்திரம் அடைந்தது முதல் 1999 வரையில் 52 ஆண்டுகளில் நதிகள் இணைப்பைப் பற்றி காங்கிரஸ் பேசவில்லை. பின்னர் 2004 முதல் 2014 வரையான 10 ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நதிகள் இணைப்பு சுற்றுச்சூழலுக்கு எதிரானது என்று கூறப்பட்டது. இவ்வாறு காங்கிரசின் 62 ஆண்டு ஆட்சியில் நதிகள் இணைப்பைப் பற்றிய கோப்பு 50 ஆண்டுகள் அலமாரியில் தூசி படிந்து அப்படியே தூங்கிக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை. ஆனால், 1999 – 2004இல் வாஜ்பாய் ஆட்சியின் 5 ஆண்டுகளில் கடைசி இரண்டு ஆண்டுகளில்தான் அலமாரியிலிருந்த அந்தத் திட்டத்தினைத் தூசி தட்டி எடுத்தார்கள். ஆனாலும், காரியப்பூர்வமாக எதுவும் நடக்கவில்லை. 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடாவது மசோதா அளவுக்குத் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனால் நதிகள் இணைப்புத் திட்டமோ இதுவரை மசோதாவாகக்கூடத் தயார் செய்யப்படவில்லை.
இச்சூழ்நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையுமானால், தேசிய நதிகளை இணைப்பதற்கு பா.ஜ.க. அரசு முன்னுரிமை தருமென்று பேசி வந்தார். தேர்தலில் மோடி வெற்றி பெற்றார், பிரதமரானார். நதிகள் இணைப்பைப் பற்றி நாடாளுமன்ற முதல் கூட்டத்திலேயே அறிவிக்கவும் செய்தார். பிற மாநிலங்களைவிட வறட்சியடைந்து வரும் தமிழ்நாடு மாநிலத்திற்கு பிரதமர் மோடியின் நதிகள் இணைப்புப் பேச்சு, வடகிழக்குப் பருவமழையே வந்தது போல இருந்தது.
சற்று அதிகமான சங்கடத்தோடு நதிகள் இணைப்பு நாட்டுக்குத் தேவையில்லையென்ற ஓர் அபசுரமும் கூடவே கேட்டது. பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ராஜ்பவனின் பச்சைப் பசேலென்ற புல்வெளியில் மூன்று புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்ச்சி சென்ற ஜூன் மாதம் நடந்தது.
அங்கு வந்திருந்த நிருபர்கள் மத்தியில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரும் சிரோன்மணி அகாலிதளக் கட்சியின் தலைவருமான பிரகாஷ்சிங் பாதல் பேசியபோது, “குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள நதிகள் இணைப்புத் திட்டத்தை அகாலிதளம் ஆதரிக்காது’ என்று கூறியுள்ளார். ஜூன் 11 பத்திரிகையில் அச்செய்தி வெளியாகியுள்ளது. அது மட்டுமல்ல, “நதிகளின் நீர் அந்த நதிகளின் கரையோர பூமிகளுக்குத்தான் உரியது. சர்வதேசச் சட்டம் இதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளது’ எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நரேந்திரமோடி சண்டிகருக்குத் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்தபோது, நதிகள் இணைப்பைப் பற்றி அவருடைய பேச்சில் அவர் குறிப்பிட்டது எனக்கு உடன்பாடு இல்லை என்பதை அக்கூட்டத்திலே தெரிவிக்க நான் விரும்பவில்லை. அதன் பிறகு, குடியரசுத் தலைவர் உரையின் மூலம் அதே திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணி ஆட்சியில் நாங்கள் இருந்தாலும் அதை சகித்துக் கொள்ள முடியாது’ என்றும் கூறியுள்ளார்.
மேலும் “அமரர் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோதே அவருக்கும் முந்தைய பஞ்சாப் முதல்வர் லோங்கோவாலுக்கும் இடையே ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி சட்லெஜ் நதியையும் யமுனா நதியையும் இணைக்கும் ஒரு கால்வாய் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அந்த ஒப்பந்தம், பஞ்சாப் மக்களின் தொடர் போராட்டத்தினால் கைவிடப் பட்டதே தவிர, கவனத்தில்கூட அத்திட்டம் எடுத்துக் கொள்ளப்படவில்லை’ என்று கூறிய அவர், நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சு அதிர்ச்சியூட்டத்தக்கது. பஞ்சாபின் செழிப்புக்குக் காரணமே சட்லெஜ் நதியில் கட்டப்பட்ட ஆசியாவிலேயே அன்றைய பெரிய அணையான பக்ராநங்கல்தான். 1966இல் பஞ்சாப் மாநிலத்திலிருந்து ஹரியாணா புதிதாக உருவாக்கப்பட்டது. பஞ்சாபில் ஓடும் ஹரியாணாவின் ரவி நதி, பயஸ் நதி இரண்டையும் சட்லெஜ் நதியில் இணைத்து, பக்ராநங்கல் அணைக்கு நீர் வரத்து அதிகமாக்கப்பட்டது.
அந்த அனுகூலத்திற்காகத்தான் ஹரியாணா மாநிலத்தைப் பிரிக்கவும் பஞ்சாப் ஒப்புக் கொண்டது. நதிகள் இணைப்பு தங்களுக்குச் சாதகமாக இருந்தால் பஞ்சாபியர் பாராட்டுவார்கள், இல்லையென்றால் அதை ஆதரிக்க மாட்டார்கள். சட்லெஜ் நதியையும் யமுனை நதியையும் இணைத்தால் டெல்லி பிரதேசத்திற்குத்தான் பாசன நீர் அதிகம் கிடைக்கும். பஞ்சாபுக்குப் பயன் இல்லை என்பதை கவனதில் கொண்டுதான், சிரோன்மணி அகாலிதளம் நதிகள் இணைப்புத் திட்டத்தை எதிர்க்கிறது.
இதனால் மத்திய அரசின் நதிகள் இணைப்புத்திட்டம் வாஜ்பாய் ஆட்சியில் உருவாக்கப்பட்ட நதிகள் இணைப்புத் திட்டத்தைப் போல, வெறும் பூர்வாங்க வேலைகளை மட்டுமே செய்யுமோ என்ற சந்தேகமும் சிலருக்கு எழுகிறது. நாட்டில் வறட்சியுள்ள மாநிலங்களின் பாசனநீர்ப் பற்றாக்குறையைப் போக்க நதிகள் இணைப்பு திட்டம்தான் உண்மையான தீர்வாகாகும்.
தமிழ்நாட்டிற்கு முழுமையாகச் சொந்தமுள்ள நதிகள் வைகையும், தாமிரபரணியும்தான். இந்த இரண்டும் தமிழ்நாட்டில் தொடங்கித் தமிழ்நாட்டில் பூர்த்தியாகிற நதிகள். இந்த இரண்டு நதிகளின் பாசன நீர் அளவு மிக மிகக் குறைவு. அவற்றின் டெல்டாப் பகுதிகளும் காவிரி டெல்டாப் பகுதிகளைப் போல இல்லை. அதிலும் ஆற்று மணலைக் கொள்ளையடித்து இந்த நதிகளை மரணமடையுமளவுக்கே செய்து விட்டார்கள். இந்தியாவிலுள்ள மாநிலங்களில் பாசன நீர்ப் பற்றாக்குறை உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
இதிலுள்ள கொடுமை என்னவென்றால், தமிழ்நாட்டைச் சுற்றிலும் இருக்கிற மாநிலங்களுக்கு நதிகள் இணைப்புத் திட்டம் அவசியமில்லை. கேரளத்தில் 46 ஆறுகள் கடலில் வீணாகின்றன. ஆந்திரத்திலுள்ள கோதாவரி, கிருஷ்ணா உபரிநீர் கடலுக்குத்தான் போகின்றன. கர்நாடகாவிலோ தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரக்கூடாது என்பதில் ஒற்றுமை எப்போதும் நிலவுகிறது.
முப்போகம் பயிரான காவிரி டெல்டாப் பகுதிகள் பாசனநீர் பற்றாக்குறை காரணமாக, ரத்தக்கண்ணீர் விடுகின்றன. நரேந்திரமோடியைத் தவிர இதைத் துடைப்பார் யாருமில்லை. தமிழ்நாடு மாநிலத்தின் விவசாய வளர்ச்சி 70 சதமல்ல. 44 சதம்தான். தொழில் துறை வளர்ச்சி 5 சதவீதம். அப்படியானால், தமிழ்நாட்டிலுள்ள மீதி 51 சதவீதம் எதனுடைய வளர்ச்சி? சர்வீஸ் செக்டார் எனப்படுகிற இன்சூரன்ஸ், ஐ.டி., ரயில்வே, மத்திய – மாநில அரசுப்பணியாளர், பள்ளி ஆசிரியர் ஆகியோரின் எண்ணிக்கை வளர்ச்சிதான். இதுதான் இன்றைய தமிழ்நாடு மாநிலத்தின் நிலை, நிலவரம், நிஜம்.
பெ. சிதம்பரநாதன்