தோல் உபாதைக்கான காரணமும், ஆயுர்வேத தீர்வும்!

தோல் உபாதைக்கான காரணமும், ஆயுர்வேத தீர்வும்!

தோல் உபாதையால் இன்று பெருமளவில் மனிதர்கள் பாதிக்கப்படுவதற்கான காரணங்களை கீழ்காணும் வகையில் சரகஸம்ஹிதை எனப்படும் ஆயுர்வேத நூல் பட்டியலிடுகிறது.ஒன்றோ டொன்று சேராத உணவுப் பொருட்களைச் சேர்த்துச் சாப்பிடுவது. உதாரணமாக முறுக்கு, மிக்ஸர், உப்பு பிஸ்கட், சாலட், சுண்டல், பீட்ஸா, பர்கர், போண்டா, பஜ்ஜி, பக்கோடா, தயிர்வடை போன்றவற்றைச் சாப்பிட்டு அதன் மேல் சூடாக காபி அல்லது டீ வகையறாக்களைப் பருகுவது-
நீர்ப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட அரிசி, தயிர், மீன், அதிக உப்பு, புளிப்பு, உளுந்து, முள்ளங்கி, மாவு பண்டங்கள், எள்ளு, பால், வெல்லம், எளிதில் செரிக்காத உணவு வகைகளை அதிக அளவில் உட்கொள்ளுதல்-வாந்தி, வயிற்றிலுள்ள வாயு, மலம், சிறுநீர் ஆகியவற்றை வலுக்கட்டாயமாக அடக்குதல்-
ayurvedic
உணவை உண்ட பிறகு அதிக உடல் உழைப்பு, மன உளைச்சலுக்காளாகுதல், குளிர்ச்சியான பதார்த்தங்களை உண்ட பிறகு, உடனே சூடான பொருட்களைச் சாப்பிடுவது-அதிக நேரம் பட்டினி கிடந்து, பிறகு வயிறு முட்டச் சாப்பிடுவது-அதிக வெயிலில் அலைந்து திரிந்து வந்தவுடனும், உடல் உழைப்பினால் உடற்சூடு ஏறிய நிலையிலும், திடீரென்று ஏற்பட்ட பயத்தின்போதும் குளிர்ந்த நீரை குடிப்பதும், குளிர்ந்த நீரில் குளிப்பதும்-உண்ட உணவு ஜீரணமாகாத நிலையில் மேலும் உணவை ஏற்பது-பகலுறக்கம் கொள்ளுதல் ஆகியவையாகும்.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்தான் என்னவென்பதையும் ஆயுர்வேதம் விளக்கிக் கூறுகிறது. மூன்று வகையான தோஷங்களாகிய வாத,
பித்த, கபங்கள் கேடடைந்து, நான்கு வகையான தாதுக்களாகிய தோல், இரத்தம், சதை, நிணநீர் ஆகியவற்றைக் கெடுக்கின்றன. அதனால், இந்த ஏழும் கெட்டுப்போவதின் விளைவாக ஏழுவகையான பெரிய தோல் உபாதைகளும், பதினோரு வகையான சிறுதோல் உபாதைகளும் ஏற்படுவதாக ஆயுர்வேதம் கண்டறிந்துள்ளது.

சர்க்கரை உபாதையினால் முன்குறிப்பிட்ட தோஷங்களும், தாதுக்களும் கேடுற்றநிலையில் நீங்கள் தோல் உபாதையால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அரிப்பும், மருக்களும் உடலில் ஏற்படுவதற்கு இவற்றின் சேர்க்கை இல்லாமல் ஒரு பொழுதும் ஏற்படாது என்பதால் நீங்கள் மேற்குறிப்பிட்ட காரணங்களைத் தவிர்த்து தோஷ தாதுக்களில் ஏற்பட்டுள்ள விஷச் சேர்க்கையை முறித்து, அவற்றை வெளியேற்றி உடல் நலம் பெறுவதே ஒரே வழியாகும்.

சிறந்த தோல் நிவாரண ஆயுர்வேத மருந்துகளாகிய மஞ்சிஷ்டாதி கஷாயம், வில்வாதி
குளிகை, ஆரக்வதாதி கஷாயம், சிலாசத்து, மாணிபத்ரம் லேஹ்யம், கந்தக ரஸாயனம், தினேசவல்யாதி தைலம், நால்பாமராதி தைலம், தூர்வாதி தைலம், திக்தகம் க்ருதம், மஹாதிக்தகம் க்ருதம் முதலியவற்றை ஓர் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி நீங்கள் பயன்படுத்தினால் சர்க்கரையின் தாக்கத்தைக் குறைத்துக் கொள்வதோடு, தோல் உபாதைகளுக்கான ஒரு தீர்வாகவும் இம்மருந்துகள் பயன்படலாம்.

சரக்கொன்றைப்பட்டை, வேப்பம்பட்டை, கருங்காலிக் கட்டை, ஏழிலைப்பாலைப் பட்டை, புங்கம்பட்டை, அரசம்பட்டை ஆகியவற்றை வகைக்கு ஐந்து கிராம் வீதம் பெருந்தூளாக இடித்து சுமார் இரண்டு லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு ஒரு லிட்டர் ஆகும் வரை குறுக்கி வடிகட்டி ஒரு நாளில் பலதடவை சிறிது சிறிதாக பருகி வர குடல் உட்புறச் சுத்தத்தை ஏற்படுத்தித் தரும். இதன்மூலமாக இரத்தம் சுத்தமடைவதுடன் தோல் உபாதைகளும் மறையக்கூடும்.

Rajesh Khanna

error: Content is protected !!