தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டாமா?

ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தல் முடிவும் எதற்கோ ஒரு ஆரம்பமாக இருந்து வருகிறது. தேசிய கட்சிகளின் அஸ்தமனம், மாநில கட்சிகளின் பரிணாம வளர்ச்சி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சரிவு, கூட்டணி ஆட்சி முறை போன்ற திருப்புமுனைகள் நாடாளுமன்ற தேர்தல் முடிவிலிருந்து தொடங்கியவை.நடந்து முடிந்த தேர்தலின் முடிவு, அரசியல் குடும்பங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வருவதற்கான தொடக்கமாக தோன்றுகிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் குடும்ப அரசியலுக்கு வாக்காளர்கள் சாட்டையடி கொடுத்திருக்கிறார்கள்.
edit-cong
அப்துல்லா குடும்பத்தின் ஆதிக்கம் ஒழிந்தது என்று காஷ்மீரிகள் கொண்டாடுகிறார்கள். கருணாநிதி குடும்பத்தின் செல்வாக்கு முடிந்தது என்று தமிழகத்தில் குரல்கள் கேட்கின்றன. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், பிகார், உ.பி போன்ற மாநிலங்களிலும் அப்பா – பிள்ளை, அண்ணன் – தம்பி வேட்பாளர்கள் தோல்வியை தழுவியிருக்கிறார்கள்.

அனைத்துக்கும் சிகரம் வைத்த மாதிரி அம்மா – மகன் – மகள் செல்வாக்கில் கட்டுண்டு கிடந்த காங்கிரஸ் கட்சியை அகில இந்திய அளவில் மக்கள் புரட்டிப் போட்டிருக்கிறார்கள். மூன்றாவது அணியின் உபயத்தில் பிரதமர் நாற்கலியில் அமரலாம் என கனவு கண்ட முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சியை உத்தர பிரதேசத்தில் மண்ணைக் கவ்வ வைத்திருக்கிறார்கள்.

அவரவர் கட்சியின் பிரசாரத்தை தலைமையேற்று நடத்தி வரலாறு காணாத தோல்விக்கு அழைத்துச் சென்றதாக கட்சியினரால் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு இருக்கிறார்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், உமர் அப்துல்லா, மு.க.ஸ்டாலின் முதலானோர். தோல்வி அளித்த அதிர்ச்சியாலும் ஒழுங்கு நடவடிக்கை என்ற ஆயுதத்தின் மேலுள்ள அச்சத்தாலும் கட்சிக்காரர்களின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லையே தவிர, நீருக்கடியில் கிளம்பியுள்ள சலசலப்பு வலுப்பெற்று எந்த நேரத்திலும் பொங்கி வழியலாம் என்ற நிலைமைதான் பெரும்பாலான கட்சிகளில்.

ஒவ்வொரு கட்சியிலும் உள்ள சீனியர் தலைவர்களிடம் பேசும்போது வெளிப்படும் ஆதங்கம் ஒரே மாதிரியாக இருப்பது ஆச்சரியம். ‘வளர்ப்பு சரியில்லை’ என்று பெற்றவர் மீது குற்றம் சொல்கிறார்கள். ‘திடீரென்று இழுத்துவந்து மகனை அரசியல் குளத்தில் தள்ளிவிட்டார். முறையாக நீச்சல் பயிற்சி கொடுக்கவில்லை. அவன் தானாக ஏதோ கற்றுக் கொண்டு நீந்தும்போது, கையை காலை பிடித்து இழுக்க ஆள் அனுப்புகிறார்கள். எப்படி கரை சேர முடியும்?’ என்று கேட்கிறார்கள். ஸ்டாலினை தவிர மற்றவர்களுக்கு இது ரொம்பவே பொருந்தும். சுதந்திரமாக நீந்த முடியாமல் தடுக்கப்படுவதில் அவரும் விதிவிலக்கு அல்ல என்பது வேறு விஷயம்.

முந்தைய இரண்டு தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க சோனியாதான் காரணம் என ஒப்புக் கொள்ளும் தலைவர்கள்கூட, இந்த முறை மொத்தமாக சோனியா மீது பழியை ஏற்றிவைக்க தயங்கவில்லை. ’இப்போதுள்ள கட்சி செட்டப்பில் தலைமை பொறுப்பு எதையும் ஏற்க ராகுலுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. சில துதிபாடிகளின் கோஷத்தில் மயங்கி சோனியா தன் மகன் தலையில் சுமையை தூக்கி வைத்தார். அதன் பலனை அனுபவிக்கிறோம்’ என்றார் ஒரு கர்நாடகா தலைவர்.

இளைஞர் காங்கிரஸை தேர்தல் மூலம் பலப்படுத்தியதை போல கட்சியை பலப்படுத்த அவருக்கு வாய்ப்பு கொடுத்ததில் என்ன தவறு என கேட்டபோது கொந்தளித்தார் அந்த தலைவர்.
‘இளைஞர் காங்கிரஸில் என்ன செய்தார் ராகுல்? புது உறுப்பினர்களை சேருங்கள், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி நிர்வாகிகளை தேர்வு செய்வேன் என்று அறிவித்தார். தேர்தல் என்றால் என்ன என்று தெரியாமலே மேலிட தயவில் காலம் காலமாக பதவிகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் பெருச்சாளிகள் பணத்தை தண்ணீராக செலவிட்டு புது உறுப்பினர்களை சேர்த்தார்கள். அவர்கள் மூலம் தங்கள் ஜால்ராக்களை தேர்வு செய்தார்கள். அதையும் மீறி வெற்றி பெற்ற உண்மையான தொண்டர்களின் தேர்தலையே ரத்து செய்ய வைத்தார்கள். அப்படி வந்த நிர்வாகிகளிடம் ராகுல் கருத்து கேட்டால், பெருச்சாளிகளின் குரல்தானே எதிரொலிக்கும்?’ என்று குமுறினார் அவர்.
கட்சியில் முக்கிய பொறுப்புகள் நீண்டகால உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது இல்லை; வசதி படைத்தவர்கள் புதிதாக கட்சியில்சேர்ந்து முக்கிய பொறுப்புகளை ‘வாங்கி விடுவது’ சமீப ஆண்டுகளாக எல்லா மாநிலங்களிலும் வாடிக்கையாகி விட்டது என்று அழகிரி பாணியில் ஒரு குற்றச்சாட்டை எழுப்புகிறார் கேரளா காங்கிரஸ் தலைவர் ஒருவர்.

ராகுல் தனது நெருக்கமான ஆலோசகர்கள் இரண்டு பேரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஆக்கினார். இருவரும் வேறு கட்சிகளில் இருந்து வந்தவர்கள் என்று அவர் சுட்டிக் காட்டினார். மோகன் பிரகாஷ், மதுசூதன் மிஸ்திரி ஆகியோரின் பெயர்களைக்கூட அவரால் நினைவுகூர இயலவில்லை.

வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதை ராகுல் தடுத்து விட்டதும் தோல்விக்கு ஒரு காரணம் என்று ஆந்திரா தலைவர் ஒருவர் அடித்துச் சொல்கிறார். ‘போன தேர்தலில் வேட்பாளர் செலவுக்கு தொகுதிக்கு ஏற்ற மாதிரி கட்சி 3 முதல் 5 சி கொடுத்தது. இந்த தடவை 1 சி மட்டும்தான் என்று சொல்லி விட்டார்கள். அதையும் இரண்டு தவணையாக தருவதாக சொல்லி, அநேகருக்கு இரண்டாம் தவணை வரவே இல்லை. விசாரித்தபோது, எப்படியும் தோற்கப் போகிறோம்; வீணாக ஏன் செலவிட வேண்டும் என்று ஆலோசகர்கள் சொன்னதை ராகுல் ஏற்றுக் கொண்டார் என்பது தெரிந்தது. ஆனால், உண்மையில் கட்சியிடம் பணம் இல்லை என்று ஹெட் ஆபீசில் சொல்கிறார்கள். கூட்டணி கட்சி சார்பில் மூன்று வருஷம் அமைச்சராக இருந்தவர்களே பலநூறு சி சம்பாதித்து விடுகிறார்கள். நாம் 10 வருஷம் நாட்டையே ஆட்சி செய்தும் இந்த கதி என்றால் அப்படிப்பட்ட அரசியல் நமக்கு தேவையா?’ என்று விரக்தியுடன் கேட்டார் அவர்.

இந்த புகார் குறித்து டெல்லியில் கட்சி தலைமையக நிர்வாகிகளிடம் பேசியபோது வேறு மாதிரி சொன்னார்கள். ‘வேட்பாளர் சொந்த பணத்துடன் சேர்த்து செலவிடத்தான் கட்சி பணம் கொடுக்கிறது. ஆனால், சொந்த காசையும் செலவு செய்யாமல், கட்சி கொடுப்பதையும் செலவு செய்யாமல் ஒதுக்க நினைத்த வேட்பாளர்கள் பட்டியலே எங்களிடம் இருக்கிறது. ஆந்திராவில் இது மிக அதிகமாக நடந்தது. ஆகவே முதல் தவணையுடன் நிறுத்தி விட்டோம்’ என்ற நிர்வாகியிடம், இது ராகுல் உத்தரவா என கேட்டபோது அவர் பதில் சொல்லவில்லை.

தோல்வி நிச்சயம் என்பது தெரிந்தபின் செலவு செய்வது புத்திசாலித்தனம் அல்ல. அந்த அடிப்படையில் ராகுலின் சிக்கன நடவடிக்கையை பாராட்டலாம். ஆனால், பிஜேபி ஆட்சி அமைத்தால் ராபர்ட் வடேரா உட்பட சோனியாவின் குடும்ப உறுப்பினர்கள் பல வழக்குகளை சந்திக்க நேரலாம் என்றும், அந்த வழக்குகளை எதிர்கொள்ள கணிசமாக பணம் தேவைப்படும் என்பதால்தான் தேர்தல் செலவுகளை குறைக்க ராகுல் உத்தரவிட்டார் என்றும் காங்கிரஸ் தலைமையகத்திலேயே ஒரு பேச்சு உலா வருகிறது.

மக்களவையில் காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, சபையின் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பதில்லை என்று ராகுல் முடிவு எடுத்திருக்கிறார். குறைந்தபட்சம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசு ரீதியான அலுவல்கள் எதையும் ஏற்காமல், கட்சியை சீரமைப்பதில் கவனம் செலுத்த ராகுல் விரும்புகிறாராம்.

அப்படியானால் மக்களவை கட்சித் தலைவர் பொறுப்புக்கு தேர்தல் நடத்தி ஒருவரை தேர்வு செய்திருக்கலாம். அதுதான் முறை. அவ்வாறு செய்யாமல், தேசிய அளவிலோ மாநில அளவிலோ அதிகம் அறியப்படாத கர்நாடகா எம்.பி மல்லிகார்ஜுன கார்கேயை சோனியாவும் ராகுலும் நியமனம் செய்துள்ளனர். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கட்சியினருக்கு சோனியா சொன்ன அறிவுரைக்கு முரணான நியமனம் இது.

தொண்டர்கள் தமக்கு இடப்பட்ட வேலையை செய்பவர்கள். தலைவர்கள் கட்டளை இடுபவர்கள். ஆகவே, அவர்கள்தான் முதலில் பாடம் படிக்க வேண்டும். தொண்டர்கள் பலத்தின் கூட்டுத்தொகையே தலைவன் அல்லது தலைவியின் பலம். இதை புரிந்து கொண்டால், காரிய கமிட்டி தொடங்கி மாவட்ட கமிட்டி வரையில் நியமனங்களால் நிரப்பும் ஜனநாயக விரோத அணுகுமுறைக்கு முடிவுகட்டி, வெளிப்படையான தேர்தல் மூலம் மாநில கமிட்டிகளை உருவாக்க காங்கிரஸ் மேலிடம் முன்வரும்.

மக்களிடம் செல்வாக்கு உள்ள பலமான தலைவர்கள் மாநிலங்களில் உருவானால்தான் தேசிய அளவில் அக்கட்சி புத்துயிர் பெற முடியும். இந்திரா காந்திக்கு முன்பு அப்படி இருந்தது. சிண்டிகேட் என்று அழைக்கப்பட்ட சில பெருந்தலைகள் அவரை அடக்க முயன்றதால் எழுந்த கோபத்தில் அதன்பின் மாநில தலைவர்கள் தலைதூக்கவே இந்திரா அனுமதிக்கவில்லை. மோடி ஒருவேளை காங்கிரசில் இருந்திருந்தால் மூன்றாவது முறையாக அவர் முதல்வராகக்கூட வந்திருக்க முடியாது. ஆனால் அவர் குஜராத்தில் இருந்து ப்ரமோஷனில் டெல்லிக்கு வந்திருக்கிறார். அதுபோன்ற சூழலை காங்கிரசில் உண்டாக்க மேலிடம் துணிய வேண்டும்.

அதன் முதல் கட்டமாக தலைவர் துணைத்தலைவர் பதவிகளை தாயும் மகனும் அலங்கரிக்கும் வினோதமான ஏற்பாடு கைவிடப்பட வேண்டும். அவருக்காக இவரோ இவருக்காக அவரோ ஒதுங்கிக் கொள்வதுதான் மரியாதை. வேறு கட்சிகளில் அப்பா தலைவராகவும் மகன் துணை தலைவராகவும் இருப்பதை சுட்டிக் காட்டி காங்கிரஸ் இந்த ஏற்பாடை தொடர நினைத்தால் அது இன்னும் மோசமான தோல்விக்கு வழி வகுக்கும். அவையெல்லாம் குடும்ப கட்சிகளாக மாறி பல காலம் ஆகிறது. காங்கிரஸ் அப்படி அல்ல. எதிர்ப்பு அலையின் நடுவிலும் 10 கோடி பேருக்கு மேல் வாக்களிக்கும் கட்சி இன்னமும் ”பேரியக்கம்” என்று அழைக்கப்படும் தகுதியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

இக்கட்டான நேரங்களில் துணிச்சலான முடிவுகளே கை கொடுக்கும். அந்த சர்ஜரிக்கு காங்கிரஸ் தயாராக தவறினால், இந்த தேர்தலின் முடிவு பல முடிவுகளின் ஆரம்பமாக அமைவதை தடுக்கமுடியாது.
(இழு தள்ளு 35/ கதிர் / குமுதம் ரிப்போர்ட்டர் 15.06.2014)

error: Content is protected !!