தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் அதிகரிக்கும் தனிநபர் தாக்குதல்!

சமீபகாலமாக, தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொள்ளும் பெண்களை இந்துத்துவா அமைப்புகளை சேர்ந்த சக பங்கேற்பாளர்கள் சிலர் பாலியல் ரீதியாகவும், தகாத முறையிலும் பேசி வருகிறார்கள். பொதுவெளியில் பெண்களுக்கு ஏற்கெனவே இருக்கும் இன்னல்கள் போதாதென்று சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் பெண்களுக்கு எதிராக, பொது ஊடகங் களிலேயே இத்தகைய போக்கு தொடர்வது வன்மையாகக் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமல்ல, சட்டப்படி குற்றமாகும்.

“வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கமற்றவர்கள் என்று பேசிய சங்கராச்சாரியார், ஊடகத் துறையில் மேலதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொண்டே பெண்கள் பதவி உயர்வு பெறுகிறார்கள் என முகநூலில் பதிவிட்ட எஸ்.வி.சேகர், இந்தியாவில் 30% பெண்கள் மட்டுமே ‘பெண்மை’ உடையவர்கள் என்று தனது ஆடிட்டிங் அறிவைப் பறைசாற்றிய குருமூர்த்தி ‍ இவர்கள் எல்லாருமே கடைந்தெடுத்த இந்துத்துவவாதிகள் . இந்துத்துவத்தின் பெண்களைப் பற்றிய பிற்போக்கான கருத்துகளையே அவர்கள் எதிரொலிக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

ஜுன் 3ம் தேதி மாலை முரசு தொலைக்காட்சியில், ‘காட்மென்’ இணையத் தொடர் தடை செய்யப் பட்டது தொடர்பான விவாதம் நடை பெற்றது. அதில்‌ இந்து தமிழர் கட்சியைச் சார்ந்த ராம ரவிக்குமார் தனக்கு அடுத்து பேச முற்பட்ட‌ பேராசிரியர் .சுந்தரவள்ளி அவர்களைச் சற்றும் அவை நாகரிகமின்றி பேசவே விடாமல் இடைமறித்ததோடு, நிகழ்ச்சியின் இடையிலேயே மிகவும் தகாத முறையில், பாலியல் ரீதியான வார்த்தைகளால் தாக்கிப் பேசினார். ராம ரவிக்குமாரை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடனே கட்டாயமாக‌ வெளியேற்றி இருக்க வேண்டும். அப்படி ஏதும் நடக்காத பட்சத்தில், தன்னையும், பெண் செயல்பாட்டாளர்களின் மரியாதையையும் பாதுகாக்க வேண்டி, கோபமுற்று சாட வேண்டிய சூழலுக்கு சுந்தரவல்லி தள்ளப்பட்டார்.

அதே நேரம், ஊடகங்கள் என்ன அற உணர்வோடும் நேர்மையோடும் ராம ரவிக்குமார் போன்றோரை விவாதத்துக்கு அழைக்கிறார்கள் என்று நாம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு, ஊரடங்கில் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து நியூஸ்7 தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.ஜோதிமணியை பா.ஜ.கவைச் சேர்ந்த கருநாகராஜன் தகாத முறையில் பேசியதை அடுத்து திருமிகு ஜோதிமணி அவர்கள் வெளிநடப்பு செய்தது நினைவிருக்கலாம்.

பெண் பங்கேற்பாளர்கள் வைக்கும் கருத்துகளைத் தர்க்கரீதியாகவும் ,நேர்மையாகவும் எதிர் கொள்ளும் துணிவின்றி இத்தகைய கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது யார் யாரென்று பார்த்தால் நூறு சதவீதம் இந்துத்துவ அமைப்புகளையும், அவற்றை ஆதரிக்கும் சிலகட்சிகளையும் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளாமல் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் இது போன்றோரைத் தொடர்ந்து அழைப்பதில் ஊடகங்களும் பொறுப்பேற்க வேண்டும்.  பேராசிரியர் சுந்தரவள்ளி மீது மிக மோசமாகத் தனிநபர் தாக்குதலில்  ஈடுபட்ட ராம ரவிக்குமாரை உடனடியாக வெளியேற்றா மல், தொடர்ந்து பேச விட்ட நெறியாளரையும் மாலை முரசு செய்திகள் தொலைக்காட்சியையும் அனைத்துப்பெண்கள் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது..

பெண் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்ணிய குறைவாக பேசும் இந்துத்துவ அரசியல் சக்திகளை அழைத்து விவாத நிகழ்வுகளில் பங்கேற்க வைத்து தங்கள் தொலைகாட்சி நிகழ்வின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் ஒரு உத்தியாக கார்பரேட் ஊடகங்கள் தங்களின் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக கருதுகிறோம்.

எனவே ஊடகங்கள் பெண் அரசியல் செயல்பாட்டாளர்களை கண்ணிய குறைவாக பேசும் அரசியல் சக்திகளை விவாத நிகழ்விற்கு அழைப்பதை உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில் பெண் அரசியல் செயல்பாட்டாளர்கள் அத்தகைய ஊடகங்களை புறக்கணிக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்..

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் தனிநபர் தாக்குதலில் ஈடுபடும் நபர்களின் மீது கொடுக்கப்படும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதில் காவல்.துறையும் அரசும் மெத்தனம் காட்டி வருகின்றன.

இது எந்த வகையிலும் இத்தகைய பெண்கள் விரோத குற்றங்களை குறைக்க உதவாது என்பதை காவல் துறையும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பொதுவாழ்வில் ஈடுபடும் பெண்களை அச்சுறுத்துவதையே நோக்கமாக கொண்டிருக்கும் இந்துத்துவா சூழ்ச்சியை முறியடிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து முற்போக்கு இயக்கங்களும்,ஜனநாயக அமைப்புகளும் இணைந்து போராட அனைத்துப்பெண்கள் கூட்டமைப்பு அறைகூவி அழைக்கிறது.

அனைத்து பெண்கள் கூட்டமைப்பு

Related Posts