திரைப்படத் துறையில் அந்நியநாட்டு நிறுவனங்கள்….!

திரைப்படத் துறையில் அந்நியநாட்டு நிறுவனங்கள்….!

தொடர்ச்சியாக பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ அதிகமான தமிழ் படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். இதே வேலையை முன்னர் சண் தொலைகாட்சி செய்துக்கொண்டிருக்கும்போது எழுந்த எதிர்ப்புக்குரல்கள் கூட, இப்போது எழுவதில்லை. தொடர்ச்சியாக ரிலையன்ஸ் நிறுவனம் திரையரங்குகளை வாங்கிக்கொண்டிருக்கிறது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ் சினிமாக்களை வாங்கி வெளியிடும் வேலையை செய்து வருகிறது. ஒரு நாட்டில் மற்ற எல்லாத் துறைகளும் சீரழிந்தபின்னரும், ஒரு கலகக் குரலாக வெடித்து, அந்த துறைகளை சீர் செய்யும் பேராற்றல் நிறைந்த ஒன்று கலைத்துறை. ஆனால் நாம் கலைத்துறையையே நாசம் செய்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் சில ஆண்டுகளில் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இந்தியாவில் அசைக்க முடியாத ஒரு பெரிய நிறுவனமாக வளர்ந்துவிடும். அதற்கான அடித்தளம்தான் இப்போது நடந்துக்கொண்டிருக்கிறது.
Tortise
பண முதலைகளை எதிர்த்து படமெடுத்தால், ரிலையன்ஸ் திரையரங்கு கொடுக்காது. அந்நிய முதலீடு, உலக மயமாக்கல், அமெரிக்க ஐரோப்பிய நட்டு அரசியல் நிலைப்பாட்டிற்கு எதிராக தமிழ் சினிமா குரல்கொடுத்தால், அத்தகைய சினிமாக்களை தடுத்து நிறுத்துவதற்கு இந்த அந்நிய நாட்டு திரைப்பட நிறுவனங்கள் துணைபோகும். மிக எளிதான ஒரு அரசியல் கருத்தை கூட நமது திரைப்படங்கள் பேசகூடாது என்று இந்த நிறுவனங்கள் மறைமுகமாக நிபந்தனை விதித்தால், இங்கே இருக்கும் ஏதாவது ஒரு திரைப்படக் கலைஞராவது எதிர்த்து பேசுவார் என்கிற நம்பிக்கையே எனக்கு இல்லை. சரிங்க எசமான், நீங்க சொல்றமாதிரியே படமெடுத்து தருகிறோம் என்கிற அடிமை சாசனமே எழுதிக்கொடுத்து விடுவார்கள். நமக்கு திரைப்படங்கள் பணம் சம்பாதிக்கும் ஒரு தொழில்தானே.

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இப்போது வாங்கி வெளியிடும் படங்களை ஒருமுறை அலசிப் பாருங்கள், ராஜா ராணி, முன்டாசுப்பட்டி என நகைச்சுவையும், கேளிக்கையும் மட்டுமே நிறைந்த படங்களைத்தான் அவர்கள் வாங்கி வெளியிடுவார்கள். அமெரிக்க அதிகார மையத்திற்கு எதிராகவோ, உலக மயமாக்கலுக்கு எதிராகவோ நமது படங்கள் பேசும்போது அதனை தடுத்து நிறுத்துவது இந்த நிறுவனத்திற்கு ஒன்றும் பெரிய காரியமல்ல. இன்னமும் அம்பேத்கர் படத்தை வெளியிட முடியாமல் திணறும் சாதாரண செயலிலிகல் நாம். இந்த மாதிரி நிறுவனங்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடுகள் இருக்கிறது என்பதே இன்னமும் தமிழ் திரைப்பட வியாபாரிகளுக்கு தெரியாது.

அவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகள இருந்தாலும், அதனை தகர்த்தெறியும், பண வல்லமை அவர்களிடம் இருக்கிறது. இங்கே பணம் கொடுத்தால் எதுவும் செய்யலாம் என்பதை அறிந்தே அவர்கள் செயல்படுகிறார்கள். கட்டுமானம் போன்ற பெரிய தொழில்களுக்கு எவ்விதத்திலும் குறையாமல் வளர்ந்து வருகிறது சினிமா தொழில். வளர்ச்சியை எப்போதுமே கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துக்கொண்டிருந்தால், அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்கப்போவது நாமல்ல, நமது சந்ததிகள்தான்.

தமிழ் ஸ்டுடியோ அருண்

error: Content is protected !!