32°C

திரு.வி.க. காலமான நாளின்று

admin Published: September 17, 2016 3 நிமிட வாசிப்பு மறக்க முடியுமா
எழுத்து:

எளிய குடும்பத்தில் பிறந்து எளிய வாழ்வு மேற்கொண்டு எளியவர்கள் நலனுக்காக வாழ்ந்து மறைந்த தொண்டறச் செம்மல், தொழிற்சங்க மேதை, இலக்கிய வாதி, தமிழறிஞர், சமயங்களில் பொதுமை வேண்டிய மனிதநேயர், கவிஞர், வரலாற் றாசிரியர், ஆய்வாளர், பத்திரிக்கையாளர் ‘‘தமிழ்த்தென்றல்’’ திரு.வி.கல்யாணசுந்தரம் ஆவார்.

thiru vi ka sep 17

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருவாரூரை பூர்வீகமாகக் கொண்ட திரு.வி.க. 1883ஆம் ஆண்டு தற்போது தண்டலம் (திருப்பெரும்புதூர்) என்றழைக்கப்படும் துள்ளம் என்னும் ஊரில் பிறந்தார்.

அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த அத்தனைத் தலைவர்களிடமும் அரசியல் வேறுபாடின்றி தொடர்பு வைத்திருந்தார்.

இளம் வயதில் சித்த வைத்திய மருந்து சாப்பிட்ட போது சாப்பிட்ட மருந்து பத்தி யம் இல்லாமல் போனதால் பக்கவிளைவு ஏற்பட்டு கை கால்கள் முடமாகிவிட, அதை சரி செய்தவர் அயோத்திதாசப் பண்டிதர்.

காந்தியார் சென்னைக்கு முதன்முத லாய் வந்தபோது அவரின் ஆங்கிலப் பேச்சை மொழி பெயர்த்து அழகுத் தமிழில் விளக்கமளித்து காந்தியாரிடம் நற்பெயர் எடுத்தார்.1921இல் ‘‘மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்’’ என்ற நூலினை எழுதி னார்.

சமயம், அரசியல்,இலக்கியம், கவிதை கள்,வரலாறு, தன் வரலாறு என்று அனைத் துத் தளங்களிலும் மூழ்கி ஆய்வு செய்து எழுதிய நூல்கள் மொத்தம் 56. தமிழக வரலாற்றில் அரிய செய்திகள், சிந்தனை கள் விரவிக் கிடக்கும் அந்த நூல்களை ஆய்வு செய்து பட்டம் பெற்றோர் பல ராவார்.

சட்டசபையில் தமிழில் பேச வற்புறுத்தி அதைத் தன் வாழ்நாளில் கண்ட தமிழறிஞர்.

மேடைப் பேச்சில் தனக்கென ஓர் பாணியை மேற்கொண்டு ஆற்றொழுக் கான தமிழ்ப்பொழிவை நிகழ்த்தியவர். ஒரு மணி நேரம் பேசினால் அதில் கடைசி பத்து நிமிடங்கள் இதுவரை தான் பேசியது என்ன என்பதை சுருக்கமாய்ப் பேசி முடிப்பார்.
திரு.வி.கவின் மேடைத் தமிழ், எழுத்து நடையைப் பலர் பின்பற்றினர்.

தற்போது அண்ணாசாலையில் உள்ள “Spencers” கட்டடத்தில் இருந்த நிறுவனத் தில் கணக்கு வழக்கு எழுதி வாழ்க்கை நடத்திய போது, அந்த உரிமையாளரிடம் ஆங்கில ஆட்சிக்கு எதிராக இவர் நடந்து வருவதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பணியை ராஜினாமா செய்தார்.

20.04.1918இல் வாடியாவுடன் இணைந்து தொழிலாளர்கள் நலன் காக்க திரு.வி.க. உருவாக்கியதே ‘‘சென்னை மாகாணத் தொழிலாளர் சங்கம்’’ என்பதாகும்.

1919 முதல் 1922 வரை எட்டு மணி நேர வேலை மற்றும் வேலைக்கேற்ற ஊதியம் வேண்டி நடந்த பின்னி மில் வேலை நிறுத்தப் போராட்டம்தான் முதல் மாபெரும் தொழிலாளர்கள் போராட்டமாக வரலாறு பதிவு செய்து இருக்கிறது. அதை முன் னின்று நடத்தியவர் திரு.வி.க.

தொழிற்சங்கப் போராட்டம் தீவிரமாதல் கண்டு அவரை நாடு கடத்த ஆங்கில அரசு முற்பட்ட போது, அன்றைய நீதிக் கட்சித் தலைவர்களான சர்.பிட்டி தியாக ராயர். பனகால் அரசர் ஆகியோர் திரு.வி.கவை நாடு கடத்தினால் பதவியை ராஜினாமா செய்து விடுவோம் என்று கூறியதால் நாடு கடத்தும் பேச்சு முடி வுற்றது.

தேசபக்தன், நவசக்தி ஆகிய பத்திரிகை களை நிறுவி அதன் மூலம், தான் கொண்ட கொள்கைகளைப் பரப்பினார்.

1919இல் முதன் முதல் மேடையேறிப் பேசியது “திராவிடரும் காங்கிரசும்” என்ற தலைப்பில்,1925இல் பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கம் காண திரு.வி.க.வும் காரணம். பின்னாளில் பெரியார் கூட்டிய மாநாட்டில் பேசியபோது சுயமரியாதை இயக்கத்தின் தந்தை என் நண்பர் பெரியார் என்றால் தாய் நான்தான் என்றார்.

சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டில் திரு.வி.க. தொழிற்சங்கம் அமைத்துக் கம்யூனிசம் பேசுவார் என்று கருதிய காங்கிரஸ் அரசு, டிசம்பர் 9 வரை அவரை வீட்டுக்காவலில் வைத்தது.

எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெரியாருடன் அவருக்கிருந்த நட்பின் தன்மை மாறாமல் இருந்தது. எனக்காகக் கண்ணீர் சிந்த இருக்கும் ஒரே நண்பர் நாயக்கர் தான் என்றார். அதன் படியே அவர்   இதே நாளான 17.09.1953 இல் மறைந்த போது வெளியூரில் இருந்த பெரியார் ஓடோடி வந்து இரங்கல் கூறி அவருக்குச் செய்ய வேண்டிய அனைத்து இறுதிச் சடங்கு களையும் முன்னின்று அறிஞர் அ.ச.ஞான சம்பந்தம் மூலம் செய்தார்.

‘‘எனக்கு மீண்டும் பிறவி வேண்டும்; பிறந்து தமிழ்ப் பணியும் சமூகப் பணியும் ஆற்றவேண்டும்’’ என்று கூறிய திரு.வி.க., வள்ளலாரின் கொள்கை வழி நின்றவர்.

திரு.வி.க.நடத்திய நவசக்தியில் துணை ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தி அவர் மேல் கொண்ட பற்றால் “கல்கி” என்று அறியப்பட்டார்.

பல்வகையிலும் தமிழுக்கும் தமிழர்க் கும் தொண்டாற்றிய திரு.வி.க வின் நூற்றாண்டை 1983இல் அரசு கொண்டாடி விட்டு மறந்து விட்டது.