June 4, 2023

திமுக பொதுக்குழுவில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றியாச்சு! – வீடியோ

அதிமுக அரசை “பிளாக்மெயிலுக்குட்படுத்தி” – தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கை கண்டிப்பதுடன் மத்திய அரசு நிறுவனங்களில் 90 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்.6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்கள் காரணமாக, பொதுக்குழு கூட்டம் நவம்பர் 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், 3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் திமுக பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டனர். திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, கனிமொழி ஆகியோரும் இதில் பங்கேற்றனர். பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதால் முதல் முறையாக பொதுக்குழுக் கூட்டம் அறிவாலயத்தில் அல்லாமல் வெளியே நடைபெற்றது.

இந்நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் : 1

முத்தமிழறிஞர் கலைஞருக்கு “மணிமகுடம்” சூட்டிய கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

தீர்மானம் : 2

நாடாளுமன்றத் தேர்தலிலும் – சட்டமன்ற இடைத்தேர்தலில்களிலும் ஈடிலா வெற்றியினை ஈட்டித்தந்த கழகத் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு!

தீர்மானம் : 3

வாக்காளர்களுக்கும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும், செயல்வீரர்களுக்கும் நன்றி!

தீர்மானம் : 4

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, தமிழக மக்களை முதலில் எதிர்பார்க்க வைத்து முடிவில் ஏமாற்றி, இன்றைக்கு மாநில உரிமைகளைப் பறிகொடுத்து, மாநிலத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதியையும் பெற முடியாமல், எதிர்ப்போம் என்று கூறிய மத்திய அரசின் திட்டங்களுக்கு எல்லாம் தன்னிச்சையாக இணங்கி, ஆதரவு தெரிவித்து – “இரட்டை வேடமும் கபட வேடமும்” போட்டு அ.தி.மு.க. ஆட்சி தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வஞ்சித்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 5

மக்களின் வரிப்பணத்தைச் சுரண்டிக் கொள்ளையடித்து அரசுக் கருவூலத்தைக் காலி செய்து – “கமிஷன், கரப்ஷன், கலெக்ஷன்” என்ற ஒரே நோக்கத்துடன் அதிமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது.
நாட்டையும் நாட்டு மக்களையும் சுரண்டி மக்கள் நலன் மறந்து, மக்களை வாட்டி வதைத்து வருவதற்கு தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு மிக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 6

அதிமுக ஆட்சியாளர்கள் மீது சரமாரியாக நடைபெற்ற வருமான வரித்துறை ரெய்டுகளை எல்லாம், “துருப்புச்சீட்டாக” அச்சுறுத்தும் ஆயுதங்களாக வைத்துக் கொண்டு – அதிமுக அரசை “பிளாக்மெயிலுக்குட்படுத்தி” – தனது எடுபிடி அரசாக வைத்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசின் போக்கையும்; அடிமைகளாகிவிட்டதால் அதிமுக அமைச்சர்களைக் போர்த்திக் காப்பாற்றும் மத்திய பா.ஜ.க. அரசின் பிற்போக்குத்தனமான செயலையும்; சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய வருமானவரித் துறை, அமலாக்கப் பிரிவு, சி.பி.ஐ. போன்ற அமைப்புகளைத் தலையாட்டிப் பொம்மைகளாக்கி, அவற்றின் மீதான நம்பகத்தன்மைக்கு பேராபத்து ஏற்படுத்தியிருப்பதையும்; இந்தப் பொதுக்குழு ஆழ்ந்த வேதனையுடன் பதிவு செய்வதுடன், மத்திய பா.ஜ.க. அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மைக்குக் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 7

மரக்காணம் முதல் இராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன், காவிரி டெல்டா மாவட்டங்களை வளைத்து பெட்ரோலிய மண்டலம், கதிராமங்கலம் ஆயில் குழாய் பதித்தல், தேனியில் நியூட்ரினோ, சேலம் – சென்னை எட்டு வழிச் சாலை, அனைத்துத் தேர்வுகளையும் இந்தி மொழியில் மட்டும் எழுத அனுமதிப்பது என மத்தியில் உள்ள பா.ஜ.க அரசின் பல்வேறு தமிழ் விரோத – தமிழர் விரோத சூழ்ச்சித் திட்டங்களுக்கு இங்குள்ள அதிமுக அரசு முனுமுனுப்பேதுன்றித் துணை போவதுடன், மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியின் மதவாத, தமிழக விரோத கொள்கைகளுக்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையிலும், ஊழல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கிலும் அதிமுக ஆட்சி நடத்துவதற்கும்; தமிழை, தமிழர்களை, தமிழக நலன்களைப் புறக்கணிக்கும் பா.ஜ.க. அரசுக்கும்; தி.மு.கழகத்தின் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 8

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமடைந்து சந்தி சிரித்து வருவதற்கும், நாளொரு கொலையும், பொழுதொரு கொள்ளையுமாக நடைபெற்று நாட்டையே உலுக்கி வருவதற்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 9

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பின்னரும், தமிழக ஆளுநர், அவர்களை விடுவிப்பதில் ஏன் காலதாமதம் செய்கிறார் என்பது யாருக்கும் புரியாத புதிராக உள்ளது. “அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று தமிழக ஆளுநர் அவர்கள், முதலமைச்சரிடம் கூறிவிட்டதாக வெளிவந்த செய்தியையும் முதலமைச்சர் மறுக்கவில்லை. ஆகவே அதிமுக அரசு உடனடியாக 7 பேர் விடுதலையை வலியுறுத்த வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவின்படி தமிழக ஆளுநர் அவர்கள், 7 பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 10

சென்னை மாநகரமும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் குடிநீர் பஞ்சத்தில் சிக்கும் விதத்தில் அலங்கோல ஆட்சி நடத்தும் அதிமுக அரசுக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 11

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற உயரிய கோட்பாட்டினை உலகிற்குச் சொன்ன அய்யன் திருவள்ளுவருக்கு, “காவி” வண்ணம் பூசி கொச்சைப்படுத்திய பா.ஜ.க.வினருக்கும், தஞ்சை – பிள்ளையார்பட்டியில் அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு அவதூறு ஏற்படுத்தியவர்களுக்கும் – அதன் பின்னணியில் உள்ள மதவாத சக்திகளுக்கும் இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

தீர்மானம் : 12

கடந்த மூன்று வருடங்களாக, பல்வேறு காரணங்களைக் கூறி, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை எல்லாம் அவமதித்து, உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் – “பஞ்சாயத்து ராஜ்” சட்டத்தின் நோக்கத்தைச் சிதறடித்து – உள்ளாட்சி ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அதிமுக அரசுக்கு இந்தப் பொதுக்குழு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இனியும் நீதிமன்றங்களை ஏமாற்றி காலதாமதம் செய்யாமல், விரைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் : 13

கூடங்குளம் அணுமின் நிலையப் பாதுகாப்பின் மீதான அய்யப்பாட்டை மத்திய அரசு தெளிவுபடுத்திட வேண்டும்!

தீர்மானம் : 14

பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுத்திடுக!

தீர்மானம் : 15

நதிநீர் இணைப்புத் திட்டங்களை நிறைவேற்றிடுக!

தீர்மானம் : 16

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்து, மனித உரிமைகளுக்கும், காஷ்மீர் மாநில மக்களின் உணர்வுகளுக்கும், மக்களாட்சி மாண்புகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு வற்புறுத்துகிறது.

தீர்மானம் : 17

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 80 லட்சம் தமிழக இளைஞர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்து சோர்வடைந்திருக்கின்ற நிலையில், மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் பொதுத்துறை நிறுவனங்களிலும் வடமாநிலத்தவருக்கு அத்தனை வேலைவாய்ப்புகளையும் வாரி வழங்கிவரும் பச்சை துரோகத்திற்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், இதர மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் 90 சதவீதத்திற்குக் குறையாமல் தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்றும், மத்திய அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் எழுத்து மற்றும் நேர்முகத்தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பா.ஜ.க. அரசை இந்த பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 18

கீழடி அகழாய்வுப் பணியினை தொய்வின்றி மத்திய மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்!

தீர்மானம் : 19

மூழ்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கவனம் செலுத்திடுக!

தீர்மானம் : 20

புதிய தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தல்!

மேலும் இதில் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. திமுகவில் நிர்வாகிகளைச் சேர்ப்பது, நீக்குவது தொடர்பான எந்த உத்தரவையும் பொதுச் செயலாளர் மட்டுமே பிறப்பிக்க முடியும். மேலும், பொதுக்குழு, செயற்குழு கூடுவது குறித்து பொதுச் செயலாளர் மட்டுமே அறிவிப்பார்.

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பதவியில் இருந்து வருகிறார். வயது மூப்பு மற்றும் உடல்நிலையில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக கட்சிப் பணி களில் கவனம் செலுத்த முடியாமல் அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலை யில் பொதுச் செயலாளர் க.அன்பழகனின் அதிகாரம் திமுக தலைவர் ஸ்டாலினுக்குத் தரப் பட்டது. இனி, திமுக நிர்வாகிகள் சேர்க்கை, நீக்கம் தொடர்பான அறிக்கைகளில் ஸ்டாலின் கையெழுத்திடலாம். இதற்கேற்ப திமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளரின் முக்கிய அதிகாரங்கள் தலைவருக்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி திமுக தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் தலைவர் ஸ்டாலின் மூலமாகவே அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.