திமுக : துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு!

திமுக : துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு!

திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் 4 மணியுடன் நிறைவடைந்த நிலையில், துரைமுருகனும், டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

திமுக பொதுச்செயலாளராக இருந்த க.அன்பழகன் மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த பதவி நீண்ட நாட்களாக காலியாக இருந்தது. அந்த பதவிக்கு ஒருவரை தேர்வு செய்வதற்காக கட்சியின் பொதுக்குழு வரும் 9-ந்தேதி கூடுகிறது.இதையொட்டி தி.மு.க. பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த பதவிகளுக்கான வேட்பு மனு விண்ணப்பங்கள் நேற்று அண்ணா அறிவாலயத்தில் விநியோகிக்கப்பட்டன.

பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. வேட்புமனு தாக்கல் செய்தார். அவரது மனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பெற்றுக் கொண்டார்.இதேபோல் பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் இன்று பிற்பகலில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அண்ணா அறிவாலயத்திற்கு ஆதரவாளர்களுடன் வந்த துரைமுருகன், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், பயம் கலந்த மகிழ்ச்சியுடன் பதவியை ஏற்பதாக கூறினார்.

error: Content is protected !!