June 2, 2023

திமுகவின் 7 அம்சத் திட்டம் கனவா? நனவா? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு

புதிதாக பத்தாண்டுகளுக்குப் பிறகு பதவியேற்கவுள்ள திமுக அரசின் முன்னுள்ள கேள்விகள் ஏராளம். எதிர்க்கட்சியாக இருந்த போது அதை அப்படிச் செய், இதை இப்படிச் செய் என கட்டளையிட்டது எல்லாம் ஆட்சியில் இருக்கும் போது வலிக்கின்ற விவகாரமாகிவிடும். முடியட்டும், விடியட்டும் என்பது பொருளாதார விவகாரங்களுக்கும் பொருந்தும் என்பதால் திமுக நீண்ட கால நோக்கில் ஏழு அம்சங்கள் கொண்டப் பட்டியலை தேர்தலுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி அடுத்தப் பத்தாண்டுகளுக்கான கொள்கைகள் வரையறுக்கப்பட்டு அவற்றைப் படிப்படியாக நிரைவேற்றுவோம் எனக் கூறியுள்ளது அக்கட்சி. சமீபத்தில் ஒரு சேனல் நடத்திய ‘நேர்ப்படப் பேசு’ நிகழ்ச்சியில் பங்கேற்ற கணக்காயர் ஜி சேகர் மாநிலத்தின் வருவாய்க்கும், செலவிற்குமுள்ள வேறுபாட்டைச் சுட்டிக்காட்டி ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார். அதாவது ஆண்டிற்கு ரூ 3,00,000 கோடி தேவைப்படும் நிலையில் அரசுக்கு ரூ.2.25,000 கோடி மட்டுமே வருவாயாக வருகிறது. மீதம் கடன். இந்நிலையில் நீண்ட காலத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் முதலில் கடன் வாங்குவதற்கு முடிவு கட்ட வேண்டும். அதற்கு அரசின் வருவாயை அதிகரிக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை வகுக்க வேண்டும். குறிப்பாக செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அதிலும் அரசின் செலவினங்களில் அரசு ஊழியர் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் கடன், கடனுக்கான வட்டி ஆகியவற்றை நெறிப்படுத்தாமல் நீண்டகாலத் திட்டங்கள் சாத்தியமில்லை. அரசின் செலவினங்களில் சுமார் 50% இவைப் பெற்று விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 3 இலட்சம் அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளார்கள். கொரோனா காலத்தில் அவசரத் தேவைக்காக நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள், பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. எனவே அரசின் செலவினம் கூடுமே தவிரக் குறைய வாய்ப்பில்லை.ஜி எஸ் டி வரி அறிமுக ஆகும் முன்னர் வாட் முறை நடைமுறையில் இருந்தது. அத்துடன் உள்ளூர் வரிகளும், மத்திய அரசின் நிதிப் பகிர்வுகளும் மாநிலத்தின் முக்கிய வரி வருவாய்களாக இருந்தன. ஜி எஸ் டி வந்தப் பிறகு அனைத்து வரிகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இப்போதும் மது பானங்கள், வாகன எரிபொருள் மற்றும் ஒரு சில வரிகளும் விலக்கு கொடுக்கப்பட்டுள்ளன. எனவே மாநில அரசின் வரி வருவாய் பெரும்பாலும் எஸ் ஜி எஸ் டி எனப்படும் மாநிலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்டு நுகரப்படும் பொருட்களின் மீதான வரியிலிருந்தே கிடைக்கிறது. இது தவிர முத்திரைத் தாள் விற்பனை போன்ற கட்டணங்கள், சிறு வரிகள் மாநிலத்தின் வரி வருவாயில் அடங்குபவையாகவுள்ளன.

மாநில அரசுகளுக்கு மதுபானத்திலிருந்தும், வாகன எரிபொருள் மீதான வரியிலிருந்துமே பெரும்பான்மையான வரி கிடைக்கின்றது. தமிழகத்திலும் இதுதான் நிதர்சனம். அதுவும் டாஸ்மாக் அரசைப் பொறுத்தவரை அட்சயப்பாத்திரம். கொரோனா நோய்த் தொற்று கூட அரசை டாஸ்மாக் மதுபான விற்பனைக்கு தடை விதிக்க வைக்க இயலவில்லை. இந்நிலையில் மாநில அரசு தனது சொந்த வரி வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏனெனில் மத்திய அரசு நிதிக்குழுவின் பரிந்துரைப்படி 41% ஐ நிதிப்பகிர்வாக மத்திய அரசின் வரி வருவாயிலிருந்து அளிக்கிறது. ஆனால் ஜி எஸ் டி க்குப் பிறகு மாநில அரசுகளுக்கு வரி இடும் வகைகளின் எண்ணிக்கைக் குறைந்து விட்டது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கனிமம், ஆற்று மணல், சொத்து வரி, நில வரி, கோயில் சொத்துக்களைப் புணரமைத்து அதிலிருந்து வரும் வருவாய் என இன்னும் சில வகைகள் மீதமுள்ளன. புதிய அரசு இது குறித்து என்ன முடிவினை எடுக்கும் என்பது தெளிவாக இல்லை. மேலும் வாகனங்களின் பெருக்கத்தையும், எரிபொருள் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தும் தேவை சூழல் மாசினால் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இதனால் வரி வருவாயும் குறையும். இது அடுத்தப் பத்தாண்டுகளில் நிகழும். மாற்று வாகன எரிபொருட்களான மின் கலங்கள், கதிரவ ஆற்றல் கலங்களின் மீது வரியை நீக்கவே மத்திய அரசு விரும்புகிறது. இதனால் மாற்று வருவாய் வகையும் கிடைக்காது. ஆகையால் மீதமுள்ள வகைகளிலிருந்துதான் வரியைப் பெருக்க வேண்டும்.

மத்திய அரசின் நிதியுதவி இன்றி மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது கடினம். குறிப்பாக நீராதாரப் பெருக்கம், சாலைகள், பொதுப் போக்குவரத்து (கதிரவ ஆற்றல் பேருந்துகள் போன்றவை) மின்சாரம் எனப் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்புத் திட்டங்களை வகுத்து வருகிறது. இதில் மாநில அரசின் பங்கும் தேவை. மேலும் அந்நிய முதலீடு தொடர்பான அனுமதி போன்றவற்றை மத்திய அரசு தான் வழங்க வேண்டும். குறிப்பாக சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசின் அனுசரணைத் தேவை. எனவே நீண்ட கால நோக்கில் சமூக வளர்ச்சிக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டால்தான் ஏழு அம்சத் திட்டத்தின் பலன் தெரிய வரும். இதற்கு மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். மத்திய அரசிடம் அதிக நிதி ஆதாரங்கள், அதிகாரங்கள் கேட்கும் மாநில அரசுகள் உள்ளாட்சித் துறையின் அமைப்புகளுக்கு அதிகார, நிதிப்பகிர்வை வழங்குவதில்லை.

வளர்ச்சி என்பது அனைத்துப் பகுதிகளுக்கும் ஒருசேர நிகழவேண்டும். நகர்ப்புறங்கள் மட்டுமே வளர்வது வளர்ச்சியல்ல. கிராமப் புறங்களுக்கு அதிக நிதியாதாரங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. ஒருகாலத்தில் நிதிநிலை அறிக்கையில் 50% கிராமப்புறங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒரு காலத்தில் எழும்பியது. ஒரேயொரு முறை மது தண்டவாதே நிதியமைச்சராக இருந்தப் போது அது நிறைவேறியது. பின்னர் வேலையுறுதி திட்டம் கொண்டு வரப் பட்டதால் அக்கோரிக்கை மறக்கப்பட்டது. இன்றைக்கு சம வளர்ச்சியின்மை அதிகரித்திருப்பது கிராமப் புறங்களில் வளர்ச்சிக்குறைபாடு இருப்பதால்தான். இரட்டை இலக்க வளர்ச்சியால்தான் சம வளர்ச்சியும் ஏற்படும் என்றால் பொதுத்துறை மட்டுமின்றி தனியார் துறையும் பேரளவில் அனைத்துத் துறைகளிலும் ஈடுபட வேண்டும். எல்லாவற்றையும் அரசே செய்ய வேண்டும் என்கிற வாதம் பொருந்தாத ஒன்று.

அரசின் திட்டங்களை நிறைவேற்ற சமூகத்தின் முன்னுள்ள பொறுப்புக்களில் முக்கியமானது கையூட்டு, ஊழல், ஜாதி/மத பேதம், சுரண்டல் ஆதரவு போன்ற தீமைகளைக் களைய தேவையான செயல்பாடுகளை ஊக்குவிப்பது. அரசின் திட்டங்களோடு இந்த விழுமியங்களும் கலந்தால்தான் சம வளர்ச்சிக் கிடைக்கும்.