தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

டெல்லியில் சொத்து வாங்கியது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதனிடையே வருமான வரி குறித்து விளக்கம் கோருவது வழக்கமான ஒன்று தான் எனவும் இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் வருமான வரித்துறைக்கும் 4 மாதமாக தகவல் பறிமாற்றம் நடைபெற்று வருவதாகவும் தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2011ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் இருந்த தமக்கு சொந்தமான சொத்தை விற்று அதில் கிடைத்த பணத்தில், டெல்லியில் புதிய சொத்து ஒன்றை சம்பத் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு வருமான வரித்துறை , தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இருப்பினும் இது வரி ஏய்ப்பு இல்லை என்றும் சொத்து விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வரி செலுத்தாமல் மறு முதலீடு செய்யும் தகுதி சம்பத்திற்கு உண்டா என்பதை அறியவே நோட்டீஸ் அனுபப்பட்டிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தின் விளக்கத்தை பொறுத்தே வருமான வரித்துறையின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.