தமிழக யூ ட்யூபர்’கள், இன்ஸ்டாக்ராமர்களை ஒருங்கிணைக்கிறோம்!

தமிழக யூ ட்யூபர்’கள், இன்ஸ்டாக்ராமர்களை ஒருங்கிணைக்கிறோம்!

லகம் முழுக்க புத்தக விற்பனையில் சமூகவலைத்தளங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ‘சோஷியல் மீடியா இன்ஃபளூயன்ஸர்’கள் படைப்பாளிகளையும் படைப்புகளையும் பரவலாக எடுத்துச் செல்கின்றனர். சமீபத்தில் கேரளாவில் வெளிவந்த ‘ ஒரு புத்தகம் ‘சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்ஸர்’களால் இரண்டு இலட்சம் பிரதிகள் விற்றதாக நேற்று ஒரு மலையாள பதிப்பாளர் குறிப்பிட்டார். அத்தகைய இலக்கிய ரீதியான செல்வாக்கு செலுத்தும் ‘யூ ட்யூபர்’கள், ‘இன்ஸ்டாக்ராமர்’கள் தமிழிலும் இருக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கையை பெருமளவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவும் இளைஞர்களிடம் நூல் வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற சென்னை மாநகர நூலக வாசிப்புக்குழுவின் முயற்சிகளின் தொடர்ச்சியாகவும் நாங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மாணவர்கள் யூ ட்யூப், இன்ஸ்டாவில் கவிதை வாசிப்பு, நூல் மதிப்புரை, கதை சொல்லல் பயிற்சிக்காக முதல் கட்ட பயிலரங்கில் பங்கேற்றவர்களில் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துப்பேர் இன்று அழைக்கப்பட்டு அவர்கள் கவிதை வாசிப்பு, நூல் மதிப்புரைகள் எப்படி இலக்கியக் காணொளிகள் உருவாக்கவேண்டும் என்பது குறித்த சிறப்புப்பயிற்சி அளிக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் காணொளி பங்களிப்புகளை மிகச்சிறப்பான முறையில் வழங்கினர். அவை பதிவு செய்யப்பட்டுள்ளன. விரைவில் அவை பதிவேற்றம் செய்யப்படும்.

மாணவ மாணவிகளின் உற்சாகமும் ஈடுபாடும் இத்திட்டத்தை மிகவிரிவாக கொண்டு செல்வதற்கான உத்வேகத்தை தருகிறது. இதன் மூலம் இளைஞர்களை சிறந்த இலக்கிய பிரதிகளை வாசிக்கத் தூண்டலாம். அவர்களையே சமூக வலைத்தளங்களில் இலக்கியத்தை பரவலாக கொண்டு செல்லும் இலக்கியத் தூதர்களாகவும் மாற்றலாம். இன்று நாங்கள் மாணவர்களை வாசிக்கச் செய்து பதிவு செய்த இலக்கியப் பிரதிகள் தமிழின் முக்கியமான படைப்பாளிகளுடையவை. எங்கள் குழு அவற்றை தேர்வு செய்து மாணவர்களுக்கு வழங்கியது. இத்தகைய தேர்வும் ஒழுங்குமே சீரிய இலக்கியப் பரவாக்கலுக்கு உதவும்.

இதை தொடர்ந்து செய்யப்போகிறோம். போதுமான resource இருந்தால் இதை ஒரு இயக்கமாக மாற்றலாம்.

ஒரு வருடத்தில் குறைந்தது இலக்கியம் சார்ந்து மிகச்சிறந்த நூறு சோஷியல் மீடியா ஃப்ளுயன்ஸர்களையாவது உருவாக்குவோம்.

மாணவர்கள் மட்டுமல்ல, இலக்கிய ஆர்வமுள்ள திறமை வாய்ந்த எவரும் எங்களுடன் இணைந்துகொள்ளலாம்.

புரவலர்களும் கூட துணை நிற்கலாம்.

– மனுஷ்ய புத்திரன்
தலைவர்
சென்னை மாநகர நூலக ஆணைக்குழு.

error: Content is protected !!