தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் அரெஸ்ட் ஏன்?

தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன்  அரெஸ்ட் ஏன்?

தமிழக ஆம் ஆத்மி தலைமை நிர்வாகியான வசீகரன் திடீரென கைது செய்யப்பட்டார். மன்சூர் அலிகான் பாணியில் 16 பேரை வெட்டுவோம் என பேட்டி கொடுத்ததால் நடவடிக்கை பாய்ந்தது.

ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு தலைவராக இருப்பவர் வசீகரன். இவர் சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்து வந்தார்.இவர், தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில், ‘கமிஷனுக்காகவே ஆட்சியாளர்கள் 8 வழிச்சாலையை போடுகிறார்கள். இல்லாவிட்டால் 4 சாலைகள் இருக்கும்போது 5-வதாக ஒரு சாலையை ஏன் போடவேண்டும். மதுரவாயல் – சென்னை துறைமுகம் இடையிலான பறக்கும் சாலை திட்டம் கிடப்பில் கிடக்கிறதே… அதை போடவேண்டியதுதானே? மக்கள் கருத்தைக் கேட்டு சாலை போட வேண்டும் என எதிர்க்கட்சி கூறுவதும் சரி வராது. மக்களிடம் கருத்து கேட்டதாக இவர்கள் பொய்யாக ஜோடித்து விடுவார்கள். இப்போதே மக்கள் தாங்களாக வந்து இடத்தை தருவதாக எடப்பாடி கூறுகிறார்.

இப்படி வலுக்கட்டாயமாக சாலை அமைப்பதால், மன்சூர் அலிகான் 8 பேரை வெட்டுவேன் என சொன்னதில் என்ன தவறு? நாங்கள் சொல்கிறோம், சேலம்-சென்னை சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவோம். இதற்கெல்லாம் வழக்கா? இது ஒரு ஆதங்கத்தில் சொல்வது! வெட்டுவோம் என சொன்னால், உடனே போய் வெட்டிவிடுவோமா?’ என பேட்டி கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இன்று (ஜூலை 4) அதிகாலையில் சென்னை மதுரவாயலில் வசீகரன் இல்லத்தை போலீஸார் முற்றுகையிட்டனர். அவரை கைது செய்து சேலம் மாவட்டம், காரிப்பட்டிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது பதியப்பட்ட வழக்கு அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.

வசீகரன் கைது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜோசப் ராஜா கூறியிருப்பதாவது: ‘சேலம் எட்டு வழி சாலைக்கு எதிராக அறிக்கையின் வாயிலாக சமூக வலைதளங்கள் மற்றும் சில ஊடகங்கள் வாயிலாகவும் பதினாறு பேரை வெட்டுவேன் என என அரசுக்கு எதிராக கருத்து விதைத்ததாக கூறி இன்று காலை தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் மதுரவாயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விடியற்காலையில் சென்னை அண்ணா நகர் போலீசார் உதவியோடு கைது செய்து சேலம் அழைத்து சென்றனர். வசீகரன் மீது காரிப்பட்டி காவல் நிலையத்தில் 28-06-2018 அன்று கிராம நிர்வாக அலுவலர் லிங்கேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கீழ்கண்ட பிரிவுகளின் கீழ் கைது செய்து உள்ளனர். cr.no.150/2018, 415, 153,183,189,&506 (11)IPC.

அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் அச்சுறுத்தல், பொதுமக்கள் மத்தியில் போராட்டத்தை தூண்டி விடுதல், பொது அமைதிக்கு குந்தகம், கொலைமிரட்டல் உள்ளிட்ட குற்றப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்’ என கூறியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட வசீகரனுக்கு 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி சந்தோஷம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து வசீகரன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Posts

error: Content is protected !!