தமிழகம் முழுவதும் பெண்களின் பயக் குரல்!

தமிழகம் முழுவதும் பெண்களின் பயக் குரல்!

மிழகத்தின் தொழில்நகரமாகப் புகழ்பெற்ற கோவை, இன்று பெண்களின் பயத்தின் கோட்டை ஆக மாறியுள்ளது. சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், பிருந்தாவன் நகர் அருகிலுள்ள பகுதியில் நடந்த பயங்கர சம்பவம், அரசின் அலட்சியத்தை முழுமையாக வெளிப்படுத்துகிறது. 19 வயது தனியார் சட்டக் கல்லூரி மாணவி, மதுரையைச் சேர்ந்தவர், தனது 20 வயது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார். நேற்று (நவம்பர் 2) இரவு சுமார் 11 மணிக்கு, மோட்டார்சைக்கிளில் வந்த மூன்று சமூக விரோதிகள் ஆயுதங்களுடன் காருக்குள் புகுந்து, ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கி மயக்கமடையச் செய்து மாணவியைத் தூக்கிச் சென்று, அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மோட்டார் ரூம்போன்ற கட்டிடத்தில் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமைக்குப் பின், பெண்ணை நிர்வாண நிலையில் தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்து தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு என்பது வெறும் அரசியல் முழக்கமாகவே இருப்பதை உணர்த்துகிறது.

மயக்கத்தில் இருந்து மீண்ட ஆண் நண்பர் வினித், போலீசாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்துள்ளார். பீளமேடு காவல் துறையினர் விரைந்து சென்று, காயமுடன் கிடந்த மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். உடல் ரீதியான பலத்த காயங்களும் மனநலப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகவும், அதிர்ச்சியின் பிடியில் உள்ளதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது, வினித், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீசார் IPC 376D (கூட்டு பாலியல் வன்கொடுமை), 363 (கடத்தல்), 506 (ஆபத்து சூட்டல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். கார் மீது உள்ள விரல் முத்திரைகள், DNA சான்றுகள், சுற்றுப்பகுதி CCTVக்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். குற்றவாளிகள் கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தேடப்பட்டு வருகின்றனர், குற்றவாளிகள் போதைப்பொருளால் தூண்டப்பட்டவர்களாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விமான நிலையம் போன்ற பரபரப்பான இடத்தின் அருகே கூட CCTV கேமராக்கள் இல்லை, விளக்குகள் இல்லை, இரவு நேர Patrol இல்லை இவை அனைத்தும் குற்றவாளிகளுக்கு தைரியம் அளித்துள்ளன. இந்தப் புறநகர் பகுதிகளில் சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் இயங்கி வருவதும், அவை போதைப்பொருள் விற்பனைக்கு மையமாக இருப்பதும் தெரிந்து அறியப்பட்டுள்ளது, அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் குறை.

ந்த வன்கொடுமை, தமிழகத்தில் பெண்கள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியாகும், அது அரசின் சட்டம் ஒழுங்கு சீரழிவின் துல்லிய சான்று. கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும், பாலியல் வன்கொடுமை வழக்குகள் 3,407-ஆல் இருந்து 5,319-ஆக உயர்ந்துள்ளன, அதாவது 56% அதிகரிப்பு. 2025-ஆம் ஆண்டின் முதல் 36 நாட்களிலேயே 95 பாலியல் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன, இது திமுக ஆட்சியின் ‘பெண் பாதுகாப்பு’ வாக்குறுதிகளின் வெட்டித்தன்மையை வெளிப்படுத்துகிறது.

போதைப்பொருள் விற்பனையைத் தடுக்கத் தவறியது, கஞ்சா, போதை மருந்துகள் இளைஞர்களை அழித்து சமூக விரோதிகளை உருவாக்குகின்றன. பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமாணி ராமதாஸ், “திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை, இது போன்ற சம்பவங்கள் அதன் சான்று” எனக் கண்டித்துள்ளார். முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, “திமுக அமைச்சர்கள் முதல் காவல் துறை வரை, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கு நிலவுகிறது. பாலியல் குற்றங்களைத் தடுக்க திமுக தவறிவிட்டது” என விமர்சித்துள்ளார். அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்கள் வேட்டையாடப்படுகின்றனர், தலை குனிய விடமாட்டேன் என்பது வெட்டி வசனம் மட்டுமே” எனக் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை, பொள்ளாச்சி வழக்கு (சமீபத்தில் 9 பேருக்கும் குற்றம் சாட்டப்பட்டது), திருவள்ளூர் 8 வயது சிறுமி வன்கொடுமை ஆகியவை போன்று, இந்தச் சம்பவமும் போலீசின் தடுப்பின்மை, அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துகிறது. 2025-ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களிலேயே பெண்கள் மீதான குற்றங்கள் 8.3% அதிகரித்துள்ளன, குழந்தைத் திருமணங்கள் 55% உயர்ந்துள்ளன. போலீசின் ‘ஏழு அணிகள்‘ என்பது வெறும் கண்காட்சியாகத்தான் தெரிகிறது. உண்மையில், போதைப்பொருள் கடத்தல், இரவு நேரப் பாதுகாப்பின்மை, CCTV பராமரிப்பின்மை ஆகியவற்றைத் தடுக்க அரசு என்ன செய்தது?

‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என்ற வாக்குறுதிகள், வன்கொடுமைக்குப் பின் மட்டுமே வெளியேறுகின்றன. தமிழக மகளிர் கலந்துரையாடல் அமைப்புகள், “இது போன்ற சம்பவங்கள் அதிகரிப்பதன் காரணம் போலீசின் அலட்சியம்” எனக் குற்றம் சாட்டுகின்றன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற 4.5 ஆண்டுகளில், சமூக விரோதிகளுக்கு துணிச்சல் அளிக்கும் போக்கே நிலவுகிறது ரவுடிகள், போதைக்காரர்கள் தாராளமாக உலா வருகின்றனர், போலீசு அரசியல் அழுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. இது சட்டம் ஒழுங்கின் முற்றுப் போக்கு, பெண்கள் இரவு வெளியில் நடக்கத் திகைக்கின்றனர்.

இந்தச் சம்பவம், அரசைத் தட்டி எழுப்ப வேண்டும். உடனடி நடவடிக்கைகள் தேவை: இரவு நேர ரோந்து காவல் அதிகரிப்பு, அனைத்து போக்குவரத்து மையங்களிலும், CCTV மற்றும் விளக்குகள் விமான நிலையம், கல்லூரிகள் அருகில் கட்டாயம், போதைப்பொருள் ஒழிப்பு கஞ்சா கடத்தலைத் தடுக்க கடுமை, விரைவு நீதி கூட்டு வன்கொடுமை வழக்குகளுக்கு ஸ்பெஷல் கோர்ட்டுகள்.

பாஜக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் அறிவித்துள்ளது, அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது, மாணவர்கள் #JusticeForKovaiStudent என்ற ஹேஷ்டேக்கில் போராடுகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் சம்பவ இடத்தில் உள்ள சட்டவிரோத மதுக்குடிப்பகத்தை அடித்து நொறுத்துள்ளனர் இது மக்களின் கோபத்தின் வெளிப்பாடு. இந்தக் குரல்களை அரசு கேட்க வேண்டும். இல்லையெனில், தமிழகத்தின் ‘பெண் நலன்’ முழக்கங்கள் வீணாகும், சட்டம் ஒழுங்கு முற்றுப் போகும்.

இந்த 19 வயது மாணவியின் வலி, ஒரு பெண்ணுடையது மட்டுமல்ல தமிழகம் முழுவதும் உள்ள பெண்களின் பயத்தின் குரல். அவள் மீண்டு வருவாள், ஆனால் சமூகம் மீண்டு வருமா? அரசு, பொறுப்பின்மையை உணர வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலினின், “தமிழகத்தை தலை குனிய விடமாட்டேன்” என்பது வெறும் வாக்குறுதியாக இருக்கக் கூடாது செயல்பாட்டில் இருக்க வேண்டும், இல்லையெனில் மக்கள் உங்களை தலை குனியச் செய்வார்கள்

சந்திராபாரதி

Related Posts

error: Content is protected !!