தமிழகத்தில் தியேட்டர்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை திறப்பு!

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் தியேட்டர்கள், அருங்காட்சி யகங்கள் ஆகியன நாளை திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அதன்பின்பு ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தன. கடந்த அக்டோபர் மாதத்துடன் பெரும்பாலான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. தியேட்டர்கள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களைத் திறப்பதற்கான உத்தரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30ம் தேதி வெளியிட்டார்.
அதன்படி ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்தும் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. 50 சதவீதம் இருக்கைகளுடன் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களை திறப்பதற்கான இறுதிக்கட்டப் பணிகளில் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிருமி நாசினி தெளிப்பது, ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் இடையே இடைவெளி விடும் வகையில், ஸ்டிக்கர் ஒட்டுவது, டிக்கெட் கவுன்ட்டர்கள் முன்பு சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் தரையில் அடையாளக் குறிகள் இடுவது போன்ற அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
வி.பி.எப். கட்டணத்தை ரத்து செய்யாவிட்டால் தியேட்டர்களை திறந்தாலும் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று பாரதிராஜா அறிவித்து இருப்பது புது படங்கள் ரிலீசில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் சமரசம் ஏற்படவில்லை. தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர் கூறும்போது, “அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்” என்றனர்.
இதனால் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விசுவாசம், தனுசின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்து இருப்பதாக தியேட்டர் அதிபர் ஒருவர் தெரிவித்தார்.
அதே சமயம் வி.பி.எப். கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு விடும் என்பதால், தீபாவளி பண்டிகை படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர். சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிஸ்கோத்’, ‘அட்டு’ ரிஷி ரித்விக் நடித்துள்ள ‘மரிஜுவானா’, யோகி பாபுவின் ‘பேய் மாமா’ ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ள ‘களத்தில் சந்திப்போம்’ உள்ளிட்ட படங்கள் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகலாம் எனத் தெரிகிறது. ஆனாலும் பெரிய கதாநாயகர்கள் படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகாது.