சேவை வரியை நீக்கி திரையுலகைக் காப்பாத்துங்கோண்ணா!-மோடிக்கு விஜய் கடிதம்!

சேவை வரியை நீக்கி திரையுலகைக் காப்பாத்துங்கோண்ணா!-மோடிக்கு விஜய் கடிதம்!

சினிமா துறைக்கு எதிராகவும், சினிமா துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கி, அழிந்து வரும் இந்திய திரையுலகைக் காப்பாற்றும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
Vijay Letter_to Modi
அந்தக் கடிதத்தில்,”இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு..

பல அரிய திட்டங்காளலும், அதிரடி நடவடிக்கையாலும் இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல போராடும் உங்களுக்கு பாராட்டுக்கள். மற்றத் துறைகளை போன்று சினிமாத் துறையையும் நீங்கள் நேசிப்பவர் என்பதால், இந்த கோரிக்கையை வைக்கிறேன்.

சினிமா மக்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, அரசுக்கு பலகோடி வருவாயை ஈட்டித் தரும் துறையாகும். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சினிமா கவனிப்பாரின்றி பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. பல திரையரங்கங்கள் கல்யாண மண்டபங்களாகவும், வணிக வளாகங்களாகவும் மாறி வருகின்றன.

மத்திய – மாநில அரசுகளுக்கு சினிமா மூலம் பலவிதமான வரிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செலுத்தப்படுகின்றன. ஆனால் கடந்த ஆட்சியில் புதிதாக சுமத்தப்பட்ட சேவை வரியால் (Service Tax) இந்திய சினிமா பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது.

பல காலங்களாக இந்த தொழிலை மட்டுமே நம்பியிருந்த லட்சக்கணக்கான தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், ஏற்றுமதியாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் என அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.

குறிப்பாக, சினிமா தொழிலில் கொடிகட்டி பறந்த பல முன்னணி நிறுவனங்களும், முக்கிய தயாரிப்பாளர்களும் நஷ்டத்தாலும் விரக்தியாலும் வேறு தொழிலுக்கு செல்லும் மற்றும் பரிதாப நிலை ஏற்பபட்டுள்ளது.

இதே நிலை நீடிக்குமானால் திரைப்படம் எடுக்க முதலீட்டாளர்கள் பயந்து ஒதுங்கி விடுவார்கள். இதனால் சினிமா தொழில் பாதிக்கப்படுவதோடு, இந்த தொழிலை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளார்களும் வேலையில்லாத நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

மேலும் கடந்த ஆட்சியில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், சரத் குமார், மம்மூட்டி, மோகன்லால், பவன் கல்யாண் மற்றும் இந்திய திரைப்பட வர்த்தக சபைகளும், இந்திய தொழிலாளர்கள் சம்மேளமும் சேவை வரியை ரத்து செய்ய போராடினார்கள். மனுக்களும் கொடுத்தார்கள். இருப்பினும் திரையுலகிற்கு எதிராக சேவை வரி உள்ளது.

ஆகவே சினிமாத்துறைக்கு எதிராகவும், சினிமாத்துறையை நசுக்கி வரும் சேவை வரியை நீக்கி அழிந்து வரும் இந்திய திரையுலகை காப்பாற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இதன்மூலம் பல தரமான படைப்புகள் வருவதோடு உலக அரங்கில் இந்திய படைப்புகளும் பேசப்படும். மேலும் பல புதிய முதலீட்டாளர்களும்,புதிய திறமையாளர்களும் இந்திய சினிமாவுக்கு வருவார்கள். உலக அரங்கில் இந்திய சினிமா முதன்மை இடத்தை பிடிக்க உற்சாகமூட்டுமாறு சக கலைஞனாக தங்களை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.”என்று அந்தக் கடிதத்தில் நடிகர் விஜய் கூறியுள்ளார்.

error: Content is protected !!