செய்திகளுக்கான புதிய விக்கி வலை!

செய்திகளுக்கான புதிய விக்கி வலை!

ணைய தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை உங்களுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், விக்கி டிரிப்யூன் பற்றித் தெரியுமா? செய்திகளுக்கான விக்கியாக உருவான இந்தத் தளம், செய்திகளைக் கண்டறிவதற்கான முழு வீச்சிலான சமூக வலைப்பின்னலாக உருவெடுத்திருப்பது தெரியுமா?

டபிள்யூடி.சோஷியல் (https://wt.social/) எனும் இந்தத் தளம், ரெட்டிட் (Reddit) தளத்தை நினைவுபடுத்தினாலும், தன்னளவில் தனித்துவமான சமூக வலைப்பின்னல் தளமாக இருப்பதை உணரலாம். செய்திகளிலும் உலக நடப்புகளிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கான சமூக வலைப்பின்னலாக இந்தத் தளம் விளங்குகிறது.

இந்தத் தளத்தில், பயனாளிகள் தங்களுக்கு ஆர்வம் உள்ள தலைப்புகளில் செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, செய்தி தொடர்பான கருத்துக்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். செய்தி ஆர்வம் சார்ந்த நண்பர்களையும் உருவாக்கிக்கொள்ளலாம்.

முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைகளான ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம் என்றாலும், பெரும்பாலான பயனாளிகள் இந்தத் தளங்களில் செய்திகளைப் பகிர்ந்துகொள்கின்றனர் என்றாலும், டைம்லைனில் செய்திகளை ஃபேஸ்புக் முன்னிறுத்தும் விதம் தொடர்பாக பரவலான அதிருப்தியும் கடும் விமர்சனங்களும் இருக்கின்றன. ஃபேஸ்புக் விளம்பர நோக்கில் செய்திப் பதிவுகளை முன்னிறுத்துவதோடு அல்லாமல், பொய்ச்செய்திகளுக்கும் பிழை செய்திகளுக்கும் துணைபோவதாகவும் புகார்கள் இருக்கின்றன. ஃபேஸ்புக் செய்திகளை கையாளும் விதத்தில் பலருக்கு அதிருப்தி இருப்பது போல, விக்கிப்பீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸும் மிகுந்த அதிருப்தி கொண்டிருந்தார். இந்த அதிருப்திக்குத் தீர்வு காணும் வகையில் அவர் உருவாக்கியதுதான் விக்கி டிரிப்யூன் இணையதளம்.

செய்திகளுக்கான விக்கிப்பீடியாவாகதான் விக்கி டிரிப்யூன் (WikiTribune) தளம் அறிமுகமானது. விக்கிப்பீடியா போலவே இதில் பயனாளிகள் செய்திகளைப் பகிரலாம், விவாதிக்கலாம். அதன் பின்னர் செய்திகள் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளமாக இது உருவானது. விக்கிப்பீடியா போல, நன்கொடை சார்ந்து இயங்கும் தளம் என்பதால் இதில் விளம்பரங்களின் தாக்கம் இல்லை. பயனாளிகள் செய்திகளை, செய்தி மதிப்புக்காகப் பகிர்ந்துகொள்ளலாம். விளம்பரங்கள் மற்றும் அல்கோரிதம் ஆகியவற்றின் நச்சு ஆதிக்கம் இல்லாத தளம் என இது தன்னை வர்ணித்துக்கொள்கிறது.

டபிள்யூடி சோஷியல் தளம், எண்ணற்ற துணை விக்கிகளால் ஆனது. இதில் உறுப்பினர்களாக நுழைந்ததுமே பயனாளிகள், அதில் உள்ள சில துணை விக்கி குழுக்களில் இணைக்கப்படுவார்கள். அந்தக் குழுக்களில் தொடர்வதும் வெளியேறுவதும் உறுப்பினர்களின் விருப்பம். எந்தக் குழுவில் வேண்டுமானாலும் உறுப்புனர்கள் இணையலாம். தங்களுக்கான சொந்தத் துணை விக்கி குழுவையும் உருவாக்கலாம். தங்களைக் கவர்ந்த செய்திகளை இணைப்புடன் பகிர்ந்துகொள்ளலாம். சக உறுப்பினர்கள் அந்தச் செய்தி தொடர்பாகக் கருத்து தெரிவித்து விவாதிக்கலாம். செய்தியுடன், புகைப்படம், வீடியோ போன்றவற்றையும் பகிரலாம். செய்தியைப் பகிர்வதற்கான இடைமுகம் விக்கி பக்கம் போலவே இருக்கிறது. அதில் செய்திகளை டைப் செய்து, இணைப்புடன் பகிரலாம். செய்தியைக் கூட்டாகவும் வெளியிடலாம், தனியாகவும் வெளியிடலாம். இப்படி பகிரப்படும் செய்திகள் உறுப்பினர்களின் டைம்லைனில் தோன்றும். எந்த ஒரு செய்தியையும் எடிட் செய்யலாம் அல்லது மற்ற தளங்களில் பகிர்ந்துகொள்ளலாம். செய்திகள் சார்ந்த கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடலாம்.

செய்திகள், தொடர்புடைய ஹாஷ்டேக் அடையாளங்களைக் கொண்டிருப்பதால் விரும்பிய தலைப்பிலான செய்திகளை எளிதாகக் கண்டறியலாம். பல்வேறு தலைப்புகளில் துணை விக்கி குழுக்கள் இருப்பதால், விரும்பிய குழுவில் இணையலாம். இணைய செய்திக் குழுக்கள், பருவநிலை மாற்ற குழுக்கள், ஏ.ஐ செய்திகள், தொழில்நுட்பம் என எண்ணற்ற குழுக்கள் உள்ளன. இணைய செய்திகள் தொடர்பான தலைப்பின் கீழ், இணைய தேசம், வெப்ஹோஸ்டிக், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் போன்ற துணைக் குழுக்கள் இயங்குவதைக் காணலாம்.

ஒவ்வொரு குழுவின் உறுப்பினர் எண்ணிக்கை, பதிவுகள் எண்ணிக்கை போன்ற தகவல்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. செய்திகளைத் தெரிந்துகொள்வதோடு, சக உறுப்பினர்களை நண்பர்களாக்கிக்கொள்ளலாம், அவர்களைப் பின்தொடரவும் செய்யலாம். ஆர்வத்தின் அடிப்படையில் புதிய நண்பர்கள் பரிந்துரையும் முன்வைக்கப்படுகிறது. உறுப்பினர்களுக்கான அறிமுகப் பக்கத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களையும், எந்தக் குழுக்களில் எல்லாம் உறுப்பினர்களாக உள்ளனர் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். செய்திகளைத் தேடுவதற்கான வசதியும் இருக்கிறது.

செய்திகளுக்கான கருத்துக்களை மறைத்துக்கொள்ளும் வசதி அல்லது நேரடியாகப் பதில் அளிக்கும் வசதியும் இருக்கிறது. பகிரப்படும் செய்திகளுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்யலாம். செய்திகள் மற்றும் செய்தி இணைப்புகள் சார்ந்த விவாதங்களுக்கு ரெட்டிட் தளம் சிறந்தது என்றாலும், விக்கி டிரிப்யூன் சோஷியல் தளம் மாறுபட்ட அனுபவத்தைத் தருகிறது. ஏற்கனவே விக்கிப்பீடியாவின் செயல்முறையை உணர்ந்தவர்களுக்கு இந்தத் தளம் இன்னமும் நெருக்கமாக அமையும்.

ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற தளங்களின் எண்ணிக்கை விளையாட்டிலிருந்து விலகி, செய்தி சார்ந்த உரையாடலில் பங்கேற்க விரும்புகிறவர்களுக்கு இந்தச் சமூக வலைப்பின்னல் தளம் இன்னமும் ஏற்புடையதாக இருக்கும்.

சைபர்சிம்மன்

Related Posts

error: Content is protected !!