சென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு!

சென்னையை சூழும் தண்ணீர் தட்டுப்பாடு!

சென்னையில் நாள் ஒன்றுக்கு 831 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதற்காக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இது தவிர கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும் தண்ணீர் வருகிறது. கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் உள்ள நீர் இருப்பு குறைந்து விட்டது.அதிலும்பூண்டி ஏரியில் 126.56 அடியும், சோழவரம் ஏரியில் 64.50 அடியும், செங்குன்றம் ஏரியில் 50.20 அடியும், செம்பரம்பாக்கம் ஏரியில் 74.80 அடி என மொத்தமாக 3,143 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இந்த வகையில் தற்போது சென்னைக்கு தேவையான 831 மில்லியன் லிட்டரில் 610 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதாலும் மழை இல்லாததாலும் சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்துவிட்டதால்
இங்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு சூழும் என்று தெரிகிறது.
water tape_
மேலும் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. 47.50 அடி உயரம் கொண்ட இந்த ஏரி மூலம் காட்டுமன்னார்கோவில் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுகின்றனர்.ஏரிக்கு சாதாரண காலங்களில் கீழணையில் இருந்து வடவாறு வழியாகவும் மழை காலங்களில் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை வெண்ணங்குழி ஓடை வழியாக நீர் வருகிறது. இந்த ஏரியிலிருந்து சென்னை மக்களின் தேவைக்காக தினமும் வினாடிக்கு 77 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

கடந்த மாதம் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கல்லணை கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்தது. நீர்மட்டம் படிப்படியாக 46.60 கன அடி தண்ணீர் உயர்ந்தது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக ஏரியின் நீர்மட்டம் 46.01 அடியாக குறைந்தது.

வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. கடுமையான வெயிலின் காரணமாக ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 45.01 அடி தண்ணீர் இருந்தது. இந்த நிலை தொடர்ந்தால் அடுத்த 2 மாதங்கள் வரை மட்டுமே சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனிடையே குடிநீருக்காக கிருஷ்ணா நீர் பங்கீட்டு திட்டத்தின்படி தமிழகத்திற்கு ஆந்திர அரசு ஆண்டுதோறும் 12 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். சென்னையில் தண்ணீர் பஞ்சம் தலைதூக்கி உள்ளதால் கிருஷ்ணா நீரை திறந்து விட கோரி தமிழக அரசு ஆந்திர மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதையேற்று கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறந்துவிடப்பட்டது. அங்கிருந்து 450 கன அடி நீர் வந்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இந்நிலையில் கடந்த 31ம்தேதியுடன் கிருஷ்ணா நீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய குறிப்பிட்ட அளவு தண்ணீர் வழங்கப்பட்டுவிட்டது. இனி ஜூலை 1ம் தேதி முதல் மீண்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்து விட்டனர். வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுதவிர மீஞ்சூர் மற்றும் நெம்மேலி ஆகிய இடங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தலா 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருக்கிறது. கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டதாலும் மழை இல்லாததாலும் சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்துவிட்டது. இதனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே தட்டுப்பாடில்லாமல் சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது.

ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைந்து விட்டதால் குடிநீர் குழாய்களில் அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மேடான பகுதிகளுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறுகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய நீர் ஆதாரங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இவற்றில் 11 டிஎம்சி வரை நீரை சேமித்து வைக்கலாம். 6 முதல் 8 டிஎம்சி நீர் இருப்பு இருந்தால் மட்டுமே சீரான குடிநீர் வினியோகிக்க முடியும். தற்போது வெறும் 3.2 டிஎம்சி நீர்தான் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து தண்ணீர் இருப்பு 7 டிஎம்சி வரை உயர்ந்தால் மட்டுமே சீரான குடிநீர் வழங்க முடியும். இருக்கும் குடிநீர் முறையாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.

error: Content is protected !!