சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல் ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

சிதைந்து வரும் பெண் இனத்தின் குரல்  ‘சிட்டுக்குருவி’ ஆல்பம்!

பூமி மாசு பட்டு வருவது குறித்து ‘முத்தமிடும் பூமி’, மழைநீர் சேகரிப்பு குறித்து ‘விரலை நனைத்த மழைத்துளி’, என்று இரண்டு படைப்புகளை உருவாக்கிய விஜய் RR தற்போது இயக்கியுள்ள ஆல்பம் ‘சிட்டுக்குருவி’. ‘மெல்ல மெல்ல அழிந்து வரும் பறவையினம்தான் சிட்டுக்குருவி. தற்போது இந்தியாவில் ஆங்காங்கே நடைபெற்று வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள், பெண்களையும் அந்த சிட்டுக்குருவிகளை போல இல்லாமல் செய்துவிடுமோ என்கிற அச்சம் ஏற்பட்டது. டெல்லி மருத்துவ மாணவிக்கு ஏற்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்திலும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது, ஆண் இனத்திற்கே தீராத அவமானத்தை தேடி தருவதை போல உணர்ந்தேன். எனது வருத்தத்தை ஒரு ஆல்பமாக பதிவு செய்ய வேண்டும் என்று தோன்றியது. செல்வராஜ், S.சசி நீலாவதி இருவரும் தந்த ஊக்கத்தால் உருவானதுதான் இந்த ஆல்பம்’ என்கிறார் இயக்குனர் விஜய் RR. அடிப்படையில் விசில் கலைஞரான செல்வராஜ் இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

வீட்டை விட்டு வெளியேறி ஆசிரமம் ஒன்றில் அநாதை குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தந்தையை பேட்டி காண வருகிறார் ஒரு பெண் பத்திரிகையாளர். ‘என்னை உங்க பெண்ணா நினைச்சு உங்க வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை சொல்லுங்க‘ என்று அவர் கேட்க, சொல்ல தொடங்குகிறார் அந்த தந்தை. அதுவரை உரையாடல் காட்சியாக இருந்த ஆல்பம் பாடலாகிறது திரையில். அவரும் அவரது தாயில்லாத பெண் குழந்தையும் எவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்பது மான்டேஜ் காட்சிகளாக ஓடுகிறது. பள்ளிக்கு கிளம்பி செல்லும் அவளை வழி மறித்து காரில் கடத்தும் ஒரு கும்பல், அவள் மீது பாலியல் வெறியாட்டம் நடத்த… அதுவரை துள்ளி திரிந்த அந்த சிட்டுக்குருவி இந்த உலகத்தை விட்டே மறைகிறாள். பாடல் முடியும்போது அந்த தந்தையும் ஒரு சடலமாக மயங்கி சாய்வதோடு முடிகிறது ஆல்பம்.

இந்த பாலியல் வன்முறையை தடுப்பதற்கு சட்டம் மட்டும் போதாது. மனவியல் ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு முறையும் பாலியல் வன்முறையால் பலியாவது சம்பந்தப்பட்ட பெண் மட்டுமல்ல, ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது என்பதை மனதளவில் பதிய வைக்க வேண்டும். அதற்கான முயற்சிகள்தான் இதுபோன்ற ஆல்பங்கள் என்கிறார் விஜய் ஆர்.ஆர்.

error: Content is protected !!