சாப்பிடுவதற்கு முன்பும்… சாப்பிட்ட பிறகும்!

சாப்பிடுவதற்கு முன்பும்… சாப்பிட்ட பிறகும்!

நாம் உண்ணும் உணவு ஜீரணமாக ஒருவகை திரவக் கசிவு உதவுகிறது. அதிலும் தேங்காய், மாவுப் பண்டங்கள், எண்ணெயில் பொரித்த பட்சணங்கள் போன்றவை கடித்து மென்று சாப்பிடக்கூடியவை. சத்து மாவு போன்ற உமிழ்நீர் சேர்க்கையால் நெகிழ்ந்து உட்சென்றவை. இவை வறண்ட உணவுகள். திரவம் மிக்க உணவும் சில. இவற்றைச் சேர்த்து உண்ணும்போது உணவின் இறுக்கமானது நெகிழ்ந்து கூழ் போன்ற நிலை பெறும்போது தான் ஜீரண திரவங்கள் ஒரே சீராகப் பரவி அவற்றைப் பக்குவப்படுத்த முடியும்.
samaiyal viruthu
இதற்குத் தேவையான அளவில் நீரும், அந்த நீரால் கூழ் போன்ற நெகிழ்ச்சியும் ஏற்படாமல் போனால் உண்ட உணவு செரிக்காமல் கனத்து கல் போலாகி வலியைத் தரும். அதனால் நீரோ அல்லது ஏதேனும் திரவமோ சிறிது சிறிதாக உண்ணும் உணவின் தன்மைக்கேற்ப சூடாகவோ அல்லது உடல் சூட்டிற்கேற்பவோ சாப்பிட வேண்டும். நீங்கள் அதிகமான திரவப் பொருளை சாப்பிடுவதாகத் தோன்றுகிறது.

அது ஜீரண திரவத்தை நீர்க்கச் செய்து செரிமானத்தைக் கெடுத்துவிடும் நிலையில், நீங்கள் குறிப்பிடும் சாப்பிட்ட பின் உமிழ்நீர் போன்று சிறிது வாந்தியாக வெளியேறும். அதனால் நீங்கள் உண்ணும் சமயம் வெதுவெதுப்பான நீரை உணவின் நடுவே ஒரு சிறிய அளவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உண்ட பிறகு நிறைய தண்ணீர் குடிப்பதையோ, உடனே படுத்துக் கொள்வதையோ தவிர்த்துவிடவும்.

உணவிற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாகவே டீ மற்றும் காபி போன்றவற்றைக் குடிப்பதை நீங்கள் தவிர்த்துவிடுவது நலம். உணவிற்கு பிறகும் அவற்றை உடனே சாப்பிடுவதைத் தவிர்ப்பதும் நல்லதே. வயிற்றிலுள்ள பித்த ஊறலை இவை அதிகப்படுத்திவிடுவதால் உணவிற்குப் பிறகு அந்த பித்த சீற்றத்தை உமிழ்நீருடன் வாந்தியாக வெளிப்படுவதற்கு அதுவே காரணமாகலாம்.

அதுபோல உணவிற்கு பிறகும் சுமார் இரண்டு அல்லது மூன்று மணிநேரம் வேறு எதுவும் சாப்பிடாமல் இருப்பதும் நலமே. பொதுவாகவே உணவிற்கு பிறகு வேம்பு இலையை வெந்நீர் போட்டுக் குடிப்பது வழக்கத்தில் இல்லை. ஆனால் வெறும் வயிற்றில் வேப்பிலை வெந்நீர் குடிப்பதால் ஒரு சில நன்மைகளை நீங்கள் பெறலாம். வயிற்றிலுள்ள அல்சர் புண்ணை ஆற்றக் கூடியது. இலைக்காம்புகள் வயிற்றிலுள்ள தேவையற்ற புழு, பூச்சிகளை அழிக்கக் கூடியது. தோல் உபாதையை நீக்கும், பித்த காய்ச்சலைக் குணப்படுத்தக் கூடியது என்று “கைய்யதேவநிகண்டு’ எனும் ஆயுர்வேத புத்தகத்தில் காணப்படுகிறது. பாவப்ரகாசர் எனும் முனிவர் வேப்பிலை கண்களுக்கு நல்லது என்றும், வயிற்றில் பித்த ஊறலைக் குறைப்பதாகவும், ஒவ்வாமை உணவினால் ஏற்படக்கூடிய விஷத்தை கல்லீரல் மற்றும் மண்ணீரல் பகுதியிலிருந்து அழிக்கக் கூடிய சக்தியை அது பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

மேலும் உண்ட பிறகு ஏற்படும் உமிழ்நீர் மற்றும் வாந்தி ஆகியவற்றை ஏற்படுத்தும் கப பித்த தோஷங்களை கட்டுப்படுத்தக் கூடிய ஆயுர்வேத மருந்துகளாகிய, மாதீபலரஸôயனம், ஜம்பீராதி பானகம், ஜீரகாரிஷ்டம், தசமூலாரிஷ்டம் போன்றவை சாப்பிடத் தகுந்தவை. மாதத்தில் ஒருமுறை சிறிது உப்பு கரைத்த வெந்நீரைச் சாப்பிட்டு வாந்தி செய்தும் அதற்கடுத்த மாதம் ஒருமுறை கடுக்காய்தோல், உலர்திராட்சை, சுக்கு ஆகியவற்றை வகைக்கு 5 கிராம் இரவு முழுவதும் வெந்நீரில் ஊற வைத்து மறுநாள் காலை நன்றாகக் கசக்கிப் பிழிந்து அந்தத் தண்ணீரைக் குடித்து நன்றாக மலம் இளகிப் போகுமாறு செய்து கொள்வதன் மூலமாக குடல் சுத்தமடைவதால் உங்களுடைய இந்த பிரச்னைக்கு அதுவொரு தீர்வாக அமையக் கூடும்.

உணவில் முடிந்தவரை எண்ணெய்ப் பொருட்கள் பதனழிந்துபோன முதல்நாள் சமைக்கப்பட்ட உணவு வகைகள் புளிப்பு நிறைந்த தயிர், அதிக உப்பு, புலால் வகைகள் ஆகியவற்றைத் தவிர்ப்பது நலம். நன்றாக வேக வைத்த வெதுவெதுப்பான காய்கறிகள், சூடான புழுங்கலரிசி சாதம், சிறிது நெய் விட்டு சாம்பார், ரசம் என்ற வகையில் சாப்பிடவும். மோர் எந்த வகையிலும் உங்களுக்கு நல்லதே.!

Rajesh Khanna

error: Content is protected !!