சாகித்ய அகடமி விருது பெற்ற இமையம் எழுதிய செல்லாத பணம்- சிறு குறிப்பு!
எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக, அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, 12-ந் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்ணாமலை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1964-ல் பிறந்தவர். ஆசிரியராக விருத்தாசலத்தில் பணிபுரிந்துவரும் இமயம், தீவிர திராவிட இயக்க உணர்வாளர் ஆவார். தான் பார்த்த, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாகச் சித்தரித்து வருகிறவர் இமையம். சாதி ஒடுக்கு முறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு நேரும் பால் பேதத்தின் அடிப்படை யிலான துயரங்களையும், ஆணாதிக்க அவலங்களையும், சமூக ரீதியிலான வக்கிரங்களையும், தொடர்ந்து தனது படைப்புகளில் தோலுரித்துக் காட்டிவருகிறவர் இவர்.
சிறந்த பேச்சாளராகவும் திகழும் இமையம், தான் நினைத்ததை அப்பட்டமாகச் சொல்லும் துணிச்சல் மிக்கவராகவும் இலக்கிய உலகில் வலம் வருகிறார். 94-ல் வெளிவந்த இவரது ’கோவேறு கழுதைகள்’ தமிழ் இலக்கிய உலகின் பார்வையை இவர் பக்கம் திருப்பியது. அதைத் தொடர்ந்து ‘மண்பாரம்’, ‘ஆறுமுகம்’, ‘செடல்’, ‘மாரியம்மன் வீடியோ தொகுப்பு’, ‘கொலை சேவல்’, ‘சாவுச் சோறு’ எனப் பல்வேறு புதினங்களையும் குறு நாவல்களையும் எழுதி பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறார். இவரது படைப்புகள் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பாராட்டுதல்களையும் பெற்றிருக்கின்றன.
இந்த விருதுச் செய்தி கிடைத்த நிலையில் பேசிய அவர், “இந்த விருதை நீதிக்கட்சியைத் தொடங்கிய தலைவர்களுக்கும், திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனென்றால், அவர்களால்தான் நம் மண் நிமிர்ந்தது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், டாக்டர் அம்பேத்கர் ஆகியோருக்கு இந்த விருதைச் சமர்ப்பிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் இவர்கள் ஊட்டிய உணர்வுதான் என்னை எழுதவைக்கிறது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக வாதாட வைக்கிறது. இப்போது கூட கறுப்பு சிவப்பு கரைவேட்டி கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன்.” என்றார்.
எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்!
தமிழில் நாட்டுப்புற வட்டார வழக்குகளில் படைப்புகளை உருவாக்கும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். பள்ளி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் இருந்து வரும் இவர் முன்னதாக எழுதிய “பெத்தவன்” சிறுகதை நாடகமாகவும், குறும்படமாகவும் எடுக்கப்பட்டது. இவர் எழுதிய செடல், வீடியோ மாரியம்மன், சாவு சோறு உள்ளிட்ட நாவல்கள் தமிழக இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ்பெற்றவை. இந்நிலையில்தான் இவர் எழுதிய “செல்லாத பணம்” நாவல் தமிழில் சிறந்த நாவலுக்கான 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதை பெறுகிறது.
220 பக்கங்களைக் கொண்ட இமையத்தின் இந்த நாவல் செல்லாத பணம். பணம் வாழ்க்கைக்கு அவசியமாக இருந்த போதும் கூட அது எல்லாத் தருணங்களிலும் நித்திய வாழ்வில் பயன் படுவதில்லை என்பதையே நாவலின் தலைப்பு சுட்டுவதாக இருந்தபோதும் அந்த நாவல் எங்களுக்கு கடத்தும் வாசிப்பு அனுபவம் பரந்தது. உள்ளத்தை ஊடுருவி அதிலும் முக்கியமாக வாழ்வின் துயர் மிகு தருணங்களில் மனிதர்களுக்கு ஏற்படுத்தும் உணர்வுகளையே இலக்கியமாக்கியுள்ளது என்றே சொல்லத் தோன்றுகிறது.
தமிழ் சமூகத்தில் பெண்கள் எவ்வளவு தூரம் அலட்சியப்படுத்தப்பகிறார்கள், குடும்ப வன் முறைக்கு ஆளாகுகிறார்கள். இருந்தபோதும் குடும்ப கௌரவத்தை காப்பாற்றுவதற்காக அவற்றையெல்லாம் மூடி மறைத்து மௌனம் காக்கிறார்கள். மன்னித்து தன்னை அந்நிலைக்கு ஆளாக்கிய குற்றவாளிகளையே காப்பாற்றியும் விடுகிறர்கள் என்பதை நித்தம் காணமுடிகிறது. ஆனால் இந்த நாவலானது அதற்கும் அப்பால், தீக்குளிப்பிற்கு ஆளான ஒரு பெண்ணின் கதை ஊடாக துயரத்தின் ஆழத்தை ஆணி அடித்தாற்போல காட்சிப் படுத்துகிறது.
எஜ்ஜினியரிங் படித்த வசதியான ஹெட்மாஸ்டரின் மகளான அவள் பர்மா பஜாரைச் சார்ந்த ஆட்டோ ஓட்டினரை காதலிப்பதும், பெற்றோர்கள் மறுப்பதும் அவள் தன் முடிவில் இறுக்கமாக நிற்பதும், அதனால் வேறு வழியின்றி அவளை அவனுக்கு கட்டிக் கொடுப்பதுமான கதையின் முன்பகுதி 20 பக்கங்களுக்குள் முடிந்துவிடுகிறது. மிச்சம் முழுவதும் அவள் மருத்துவ மனையில் கிடக்கும் போது நடக்கும் கதைதான். அதுவும் பெரும்பாலும் உரையாடல் ஊடாக. அதுவும் உணர்வுகள் கொப்பளிக்கும் உரையாடல்கள்.
கதையில் திடீர் திருப்பங்கள் கிடையாது. ஆச்சரியங்கள் காத்திருக்கவி;ல்லை. ஆனால் ஒரு சிறிய கேள்வி கதை முழுவதும் தொக்கிக் கொண்டே நிற்கிறது. தீக்குளிப்பு தற்செயலாக நடந்ததா அல்லது கணவன் மூட்டிவிட்டானா என்பதே அது. இதற்கு எந்த முடிவையும் சுட்டிக்காட்டாமலே நாவல் முடிவடைகிறது. ஆனாலும் கூட ரேவதியினதும் அவளது குடும்பத்தினரதும் கண்ணீரோடு எங்களை கண்ணீரையும் கலக்க வைப்பது நாவலின் இறுதிவரை தொடர்கிறது. இதுவே அப் படைப்பின் வெற்றி எனலாம்.
மருத்துமனையின் தீக்காயப் பிரிவின் வேறு வேறு பகுதிகள், எத்தனை பேர்ச்சன்ட் தீக்காயப் பாதிப்பு, அதன் பாதகங்கள் எவ்வாறானவை போன்ற விபரங்கள். அவசரசிகிச்சை பிரிவு, அதன் செயற்பாடுகள். மருத்துவர்கள் தாதியரின் பணிகள்;, நோயாளிகளின் உறவுவினர்களடானான அவர்களது அணுகுமுறைகள் என அந்த மருத்துமனையின் இயக்கத்தை முழுமையாக அறிந்து கொள்கிறோம். அங்கு மரணங்கள் மலிந்து கிடக்கின்றன. அடிக்கடி தீக்குளிப்புக்கு ஆளானவர் களை அம்புலனஸ் வண்டிகள் ஏற்றி வருவது போலவே, இறந்த உடல்களை எடுத்துச் செல்ல பிரேத காவு வண்டிகள் வருகின்றன. கண்ணீரும் கவலையும் ஆழ்ந்தகன்ற சமுத்திரம் போல நீக்கமற நிறைந்திருந்த போதும் கன்ரீனுக்கு சென்று வந்தே உறவினர்கள் தங்கள் உயிரைத் தக்கவைப்பதையும் உணர முடிகிறது.
நோயாளிகளைப் பார்ப்பதற்கு காத்திருக்கும் உறவினர்களின் உரையடல்கள் ஊடாக பலவித தகவல்கள் வருகின்றன. நோயால் துடிக்கும் பாத்திரங்களின் வாயிலாக அன்றி பார்த்திருப்பவர் களின் கூற்றாக உயிரின் வதை சொல்லப்படும்போது நெருப்பில் போட்ட நெய்யாக மனம் உருகிக் கரைகிறது. இமையத்தின் சொல்லாட்சியால் அந்தக் களத்தில் நாமும் ஒரு பாத்திரமாகவே மாறிவிடும் மாயவித்தை அரங்கேறுகிறது.
கணவனான ரவி, ரேவதியின் மச்சினியான அருள்மொழியுடன் பேசும் பகுதி முக்கியமானது. எல்லோராலும் திட்டப்பட்டு கெட்டவன் என ஒதுக்கப்படும் ரவியின் மனதில் என்ன இருந்தது என்பதைக் காட்டும் அருமையான பகுதி. கெட்டவன் எனத் தூற்றபடுபவன் மனதிலும் பல ஆதங்கங்கள் இருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இமையத்தின் கதை சொல்லும் ஆற்றல் நாம் அறியதது அல்ல. இருந்தபோதும் அதை இந்த நாவலை மிக அடர்த்தியாக அதே நேரம் உணர்வுகள் தோய்ந்ததாக சொல்லியிருப்பது வியக்க வைக்கிறது. காலப்பாய்ச்சல் ஊடாக ஒரு பெரிய களத்தை அங்கும் இங்கும் நகர்த்தி, உயிர்த்துடிப்புடன் வடித்திருப்பது நயக்க வைக்கிறது.