சவுதி-பாகிஸ்தான் கூட்டணி: ஆட்டத்தில் சிக்கியது யார்?
சமீபகாலமாக, சவுதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு புதிய நெருக்கம் ஏற்பட்டிருப்பதாகப் பேசப்படுகிறது. பாகிஸ்தான் தரப்பும், அதன் ஊடகங்களும் இந்த உறவைப் பெரிதாகப் பேசினாலும், சவுதி தரப்பிலிருந்து இதற்குப் பெரிய அளவில் எந்த உறுதிப்படுத்தலும் இல்லை. இதற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.
சவுதி அரேபியா ஒரு முடியாட்சி நாடு, அதன் புவிசார் அரசியல் சூழல் மிகவும் சிக்கலானது. துருக்கி, ஈரான், ஜோர்டான், எகிப்து என அக்கம் பக்கத்தில் இருக்கும் பல நாடுகளை அது எதிரிகளாகவே பார்க்கிறது. இவர்களோடு இஸ்ரேலும் ஒரு பெரிய சிக்கலாக இருக்கிறது. சவுதிக்கு ஏன் இத்தனை எதிரிகள்? 1940களுக்குப் பிறகு, இஸ்லாமியர்களின் புனிதத் தலங்களான மக்கா, மதீனா ஆகியவற்றின் பொறுப்பை சவுதி ஏற்றுக்கொண்டதுதான் இதற்குக் காரணம். துருக்கியின் ஒட்டோமான் சாம்ராஜ்யத்திடம் இருந்து கைமாறிய இந்தப் பொறுப்பைத் தட்டிப் பறிக்க பல நாடுகள் முயன்றன. ஈரானும் இதில் ஒரு முக்கிய அச்சுறுத்தல். எனவே, தங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகச் செயல்படக்கூடிய, இஸ்லாமிய நாடான ஒரு கூட்டாளியைச் சவுதி தேடியது. அப்போது கிடைத்த நாடுதான் பாகிஸ்தான்.

1960களிலிருந்து சவுதியின் முக்கிய பள்ளிவாசல்களைப் பாதுகாப்பதிலும், மன்னரின் பாதுகாப்பிலும் பாகிஸ்தானின் பங்கு அதிகமாக இருந்தது. இங்கு நாம் கவனிக்க வேண்டியது, சவுதியின் மன்னராட்சி முதலில் பிரிட்டனுக்கும், பின்னர் அமெரிக்காவுக்கும் கட்டுப்பட்டது. ஐரோப்பிய வல்லரசுகளின் ஆதரவு இல்லாமல் அரபு மன்னர்களால் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்ற ஒரு நிலை இருந்தது. இது நுட்பமான அரசியல் தந்திரம். 19-ஆம் நூற்றாண்டு வரை உலகை ஆண்ட இஸ்லாமிய சாம்ராஜ்யங்களின் வரலாற்றால், ஐரோப்பிய நாடுகள் செல்வம் மிகுந்த இஸ்லாமிய நாடுகளைத் தங்களின் கண்காணிப்பில் மட்டுமே வாழ அனுமதித்தன. எந்தவொரு பெரிய இஸ்லாமிய சக்தியும் உருவாக அவர்கள் அனுமதிக்கவில்லை.
சவுதி, குவைத், பஹ்ரைன், கத்தார் போன்ற முடியாட்சி நாடுகளின் நிலை இதுதான். இதில் சவுதி எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகிறது. இந்த சூழலை பாகிஸ்தானும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. 1970களில், பாகிஸ்தான் இந்தியாவிடம் போரில் தோல்வியடைந்து, அணு ஆயுதம் அவசியம் என உணர்ந்தபோது, ‘இஸ்லாமியருக்கான அணு ஆயுதம்’ என்ற திட்டத்தை முன்வைத்தது. அப்போது சவுதிதான் அதற்கு நிதியுதவி அளித்தது. ஆனால் அமெரிக்காவின் தலையீட்டால் அந்தத் திட்டம் தடைபட்டது. 1990களுக்குப் பிறகு சதாமின் வீழ்ச்சிக்குப் பின், மீண்டும் சவுதி-பாகிஸ்தான் நெருக்கம் ஏற்பட்டது. 1998-ல் பாகிஸ்தான் அணு குண்டு சோதனை செய்தபோது, சவுதி அதைப் பார்வையிட்டதுடன் சில நிதியுதவிகளையும் வழங்கியது. ஆனால் மீண்டும் அமெரிக்காவின் அழுத்தத்தால் சவுதி பின்வாங்கியது.
இப்போது மீண்டும் சவுதி, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டுவதற்குக் காரணம், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அணுகுமுறையும், ஈரான் மற்றும் ஹவுத்தி இயக்கத்தின் தொடர் அச்சுறுத்தல்களும் தான். உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, சவுதியின் பாதுகாப்புக்காக அமெரிக்கா நிறுத்தியிருந்த பேட்ரியாட் ஏவுகணைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. இதனால், தங்களைத் திடீரென யாராவது தாக்கினால் என்ன செய்வது என்ற அச்சத்தில், சவுதி மீண்டும் பாகிஸ்தானை அணுகியது.
பாகிஸ்தானின் அரசியல் ஒருபுறம், தமிழகத்தின் சவுடால் ஒருபுறம் என இரண்டையும் ஒப்பிடுவது அபத்தமான நகைச்சுவை! பாகிஸ்தானைப் பொருத்தவரை பணம் ஒன்றே பிரதானம். இப்போது சவுதிக்கு ஆதரவாகப் பேசுவதன் மூலம் அந்நாட்டிலிருந்து நிதி பெறுவதையே அது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இந்த கூட்டணி சாத்தியமா என்பது பெரிய கேள்வி. நாளை பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், சவுதி பாகிஸ்தானுக்கு உதவ வருமா? சவுதியிடம் பெரிய படைபலம் இல்லை. அது பாகிஸ்தானுக்கு நிதி கொடுக்கலாம், ஆனால் அது பெரிய அளவில் உதவாது. அதேபோல் சவுதிக்கு ஆபத்து என்றால் பாகிஸ்தான் உதவ முடியுமா? இஸ்ரேலும் அமெரிக்காவும் அங்கே இருக்கும்போது அது சாத்தியமில்லை. துருக்கிக்கும் சவுதி-பாகிஸ்தான் கூட்டணி பிடிக்காது.
ஆக, இப்போதைக்கு பாகிஸ்தான், சவுதியிடமிருந்து கொஞ்சம் பணத்தை அடித்துக்கொண்டு வந்துவிட்டது. அதைத் தாண்டி இந்த உறவில் பெரிய பலன் இல்லை. இந்த உறவு தீவிரமடைந்தால், அது அரபுலகில் புதிய மாற்றங்களை உருவாக்கும். ஈரான் போன்ற நாடுகள் வேறு வடிவம் எடுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, இஸ்ரேல் இதை அனுமதிக்காது. ஆக, பாகிஸ்தான் வசமாக ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
இது இந்தியாவுக்குப் பாதகமா என்றால் இல்லை. சவுதி இப்போதைக்குத் தன்னை காத்துக்கொள்ள ஒரு அடியாளாக பாகிஸ்தானை வைத்திருக்கின்றது. அடியாளுக்கும் பசி அதிகம் என்பதால் இந்தப் புதிய உறவு உருவாகியுள்ளது. இது இந்தியாவின் பிரச்சனை அல்ல, ஆனால் ஈரான், துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு இது ஒரு புதிய சிக்கல். இவர்களில் யாரோ ஒருவரிடம் சிக்கி பாகிஸ்தான் சின்னாபின்னமாகும் என்பதால், இந்தியா இந்த ஆட்டத்தை வெறுமனே தூரத்தில் இருந்து பார்த்தால் போதும்.
பிரம்மரிஷியார்


