சமையல் எண்ணையில் கொழுப்பு அமிலத்தைக் குறைக்க மத்திய அரசு முடிவு!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் (Trans fattyacid) அளவை தற்போதைய அனுமதிக்கப் பட்ட வரம்பான 5 சதவீதத்தில் இருந்து 2021ம் ஆண்டு 3 சதவீதமாகவும் 2022ம் ஆண்டில் 2 சதவீதமாகவும் குறைக்க புதிய திருத்தம் செய்துள்ளது.
டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் மாரடைப்பு மற்றும் இதய நோயோடு நெருக்கமான தொடர்புடையவை. அதனால் மரணத்தின் தூதர்களாக கருதப் படுகின்றன. டிரான்ஸ் ஃபேட்ஸ் அல்லது டிரான்ஸ் ஃபேட்டி அமிலங்கள் என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது அவசியம். எண்ணெய்கள் சாதாரணமான வெப்பநிலையில் திரவ வடிவில் இருப்பவை.ஆனால் இதே எண்ணெய்களில் ஹைடிரஜன் செலுத்தப்படும் பொழுது அவை திடப்பொருள்களாக வழவழப்பான பிசுபிசுப்பான அரைகுறையான திட நிலைக்கு மாற்றப்படுகின்றன. அமெரிக்காவில பார்சியலி ஹைடிரஜினேட்ட்டு ஆயில் PHO- partially hydrogenated oil என்று அமெரிக்காவில் அழைக்கப்படுகின்றன.
திரவமாக உள்ள எண்ணெய்களை ஏன் இப்படி அரைகுறை திடப்பொருளாக மாற்ற வேண்டும்?
திரவமாக இருப்பதைவிட திடப்பொருளாக இருக்கும் பொழுது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வது எளிது, வெவ்வேறான பல்வேறு பயன்பாடுகளுக்கு டிரான்ஸ் ஃபேட்ஸ் பயனபடுகின்றன. உணவுத்துறையில் பேக்கரித்துறையில் பல பொருள்களை தயாரிக்கப்பயன்படுத்துகிறார்கள். அவற்றின் நறுமணத்துக்கும் சுவைக்கும் டிரான்ஸ் ஃபேட்ஸ் தான் காரணம் என்று உணவுத்துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதனால் பேக்கரித்தொழிலுக்கு டிரான்ஸ் ஃபேட்ஸ் வகைகளை பெருமளவில் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏராளமாக வந்துவிட்டன.
இவை செயற்கையாக டிரான்ஸ் ஃபேட்ஸ் வகைகளை தயாரிக்கின்றன. இயற்கையாக கிடைக்கும் டிரான்ஸ் ஃபேட்ஸுகளும் உள்ளன. தயிரிலிருந்து எடுக்கப்படும் வெண்ணெய். அதை உருக்கி உருவாக்கும் நெய் இயற்கையான டிரான்ஸ் ஃபேட்ஸ். அசைபோடும் மிருகங்கள் தரும் பாலில் இருந்து இந்த டிரான்ஸ் ஃபேட்ஸை தயாரிக்க முடியும்.
இவை மிகவும் எளிய கொழுப்பு அமிலங்கள். அதனால் சாதாரணமான அளவுகளில் இவை பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. உணவுக்கு நறுமணத்தையும் நல்ல சுவையையும் தருகின்றன. ஆனால் அளவு மீறும் பொழுது ஆபத்தை உருவாக்குகின்றன.
இந்த டிரான்ஸ் ஃபேட்ஸ் மனிதர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைப்பதை உறுதி செய்ய ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டன, உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிறுவனம் இவற்றை படிப்படியாக கட்டுப்படுத்த பரிந்துரைகளை வழங்கி உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி தொழில்துறை ரீதியாக உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களை உட்கொள்வதால் ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 5.4 லட்சம் மரணங்கள் நிகழ்கின்றன.
இதனால் வரும் 2023 க்குள் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களை உலகளவில் முழுமையாக அகற்ற உலக சுகாதார நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா அறிவிப்பு
முதல்முறையாக கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்தியா எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களின் வரம்பை 10 சதவீதத்தை தாண்டக்கூடாது என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் நிர்ணயித்தது. பின்னர் இந்த அளவு 2015ம் ஆண்டில் 5 சதவீதமாக குறைக்கப்பட்டது.
தற்போது 2020ம் ஆண்டில் எண்ணெய் மற்றும் கொழுப்புகளில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் 2021ம் ஆண்டு 3 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும்.
அதற்கு அடுத்த 2022ம் ஆண்டில் 2 சதவீதமாகவும் குறைக்க வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் புதிய திருத்த விதிகளை அறிவித்துள்ளது.
கூடுதல் முக்கியத்துவம்
இந்த திருத்த விதிகளுக்கான வரைவு 2019ல் வெளியிடப்பட்டது. டிரான்ஸ் ஃபேட்ஸ் உற்பத்தியாளர்கள், பயனபடுத்தும் பேக்கரிகள் பிற தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள், உணவுத்துறை நிபுணர்கள் டிரான்ஸ் ஃபேட்ஸ் அளவு படிப்படியாகக் குறைக்க முடிவு செய்திருப்பது பற்றிக் கருத்துக்கூறும்படி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் (FSSAI) கேட்டுக் கொண்டது.
ஒரு வருடத்திற்கு பின் நாட்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஒழுங்குமுறை அமைப்பு டிசம்பர் 29ம் தேதி இந்த திருத்தத்தை அறிவித்தது.
குடும்பங்களில் சமையலில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள், வனஸ்பதி, வெண்ணெய், பேக்கரியில் திடக்கொழுப்பு மற்றும் காய்கறி கொழுப்பு பரவல்கள் (Vegetable fat spreads) மற்றும் கலப்பு கொழுப்பு பரவல்கள் (mixed fat spreads) போன்றவற்றிலும் 3 மற்றும் 2 சதவீதக் குறைப்புகள் பின்பற்றப்படவேண்டும் என்று இந்த புதிய திருத்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில் இதய நோயாளிகளும் நீரிழிவு நோயாளிகளும் கொரோனாவால் அதிகளவில் உயிரிழந்து வரும் நிலையில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இந்த நடவடிக்கை கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
கோரிக்கை
நுகர்வோருக்கான அமைப்பான கன்ஸ்யூமர் வாய்ஸின் (Consumer VOICE) தலைமை இயக்க அதிகாரி ஆஷிம் சன்யால் இது குறித்து கூறுகையில் : இந்த கட்டுப்பாடு எண்ணெய்கள் மற்றும் கொழுப்புகளுக்கு மட்டும் அல்லாமல் எண்ணெய் வகைகள் டிரான்ஸ் ஃபேட்ஸ் வகைகள் பயன்படுத்தப்படும் எல்லா உணவு வகைகளுக்கும் பொருந்தும் வகையில் ஆணையை விரிவுபடுத்த வேண்டும் வரும் 2022 ஜனவரி மாதத்திற்கு முன்பே இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் இதைச் செய்யும் என்று நம்புகிறேன் என ஆஷிம் சன்யால் தெரிவித்துள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனத்தின் அழைப்பை ஏற்று எண்ணெய்களில் உள்ள டிரான்ஸ் கொழுப்பு அமிலங்களை 3 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுப்பதாக கடந்த 2018 ஆம் ஆண்டில் இந்திய உணவு தொழில்துறை நிறுவனங்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
அந்த உறுதி மொழிக்க்கு இணங்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் திருத்த ஆணையை உளப்பூர்வமாக அமல் செய்ய முன்வரவேண்டும். இந்த திருத்த விதிகளை அமல் செய்ய உணவுத்துறை, உணவு பதப்படுத்தல் துறை, சுகாதாரத்துறை ஆகியவை வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கவேண்டும்.
.