கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!

கேட்டராக்ட் – கண் புரை – கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்!

கேட்டராக்ட் – (கண் புரை )கண்ணுக்குள் பொருத்தும் லென்ஸ்கள் பற்றி சில முக்கியமான விவரங்கள் கேள்வி – பதில்கள்

கேள்வி: கேட்டராக்ட் என்றால் என்ன?

* நமது கண்களில் உள்ள இயற்கையான லென்ஸ் மங்கலான தோற்றத்தை உணர்வது அல்லது தெளிவான தன்மையை இழப்பது கேட்டராக்ட் எனப்படுகிறது.

* தமிழில் கேட்டராக்ட் என்பது புரை என்று சொல்லப்படுகிறது.

* கேட்டராக்ட் என்பது வயோதிகம், பரம்பரை மூலக்கூறியல் குறைபாடு, விபத்துகள், நீரிழிவு போன்ற காரணங்களால் கண்ணில் உள்ள லென்ஸ் ஒளி ஊடுருவும் தன்மையை இழப்பதன் காரணமாக ஏற்படும் நிலை.

* இதன் காரணமாக லென்ஸில் ஒரு படலம் சூழ்ந்தது போன்ற நிலையில் பார்வை தெளிவாக இல்லாமல் மங்கலாகத் தெரிகிறது. நாளடைவில் இந்நிலை அதிகரித்து நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்களை தடுத்து நிறுத்துவதன் காரணமாக முழுமையான பார்வையிழப்பிற்க்கும் காரணமாகிறது. இந்நிலையே கேட்டராக்ட் எனப்படுகிறது.

சாதாரண நிலையில் கேட்டராக்ட் பாதித்த நிலையில்

நமது கண் பார்வை நமது கண் பார்வை

கேள்வி: கேட்டராக்ட் இரண்டு கண்களையுமே பாதிக்குமா?

கேட்டராக்ட் இரண்டு கண்களையுமே பாதிக்கும் என்றாலும் பாதிப்பின் அளவு மற்றும் நிலை இரண்டு கண்களுக்கிடையே வேறுபடலாம்.

கேள்வி: கேட்டராக்ட் ஆபத்தான பிரச்சினையா?

கேட்டராக்ட் ஒருவரது கண்ணில் தோன்றிய நிலையில் அது இயல்பான கண் நலத்திற்க்கு ஆபத்தானதாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

ஆனால் லென்ஸின் மீது படரும் படலமானது லென்ஸை முழுமையாக மறைத்து, வெள்ளை நிறத்தில் அல்லது சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும் நிலையே ”முற்றிய புரை” (matured cataract) எனப்படுகிறது.

முற்றிய புரை கண் பார்வையிழப்பிற்க்கு காரணமாகிறது. அதிகமான கண் வலி, தலைவலி மற்றும் கண்களில் வீக்கம் போன்ற பிரச்சிச்னைகளுக்கும் காரணமாகிறது. எனவே முற்றிய புரையை விரைவில் ஆபரேஷன் மூலம் அகற்றுவது சிறந்தது.

கேள்வி: கேட்டராக்ட் வயதானவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய பிரச்சினையா?

இல்லை. கேட்டராக்ட் பொதுவாக அதிகமாக வயதானவர்களுக்கு வரக்கூடிய பிரச்சினை என்றாலும் எல்லா வயதினரையும் இது பாதிக்கிற்து என்பதே உணமை.

கேள்வி: வயோதிகம் மட்டுமே காரணம் இல்லை என்றால் மற்றவர்களுக்கும் கண்களில் ஏன் கேட்டராக்ட் வளருகிறது?

* சூரிய ஒளியிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமான அளவிற்க்கு இருக்கும் வகையில் பணியாற்றுபவர்களுக்கு விரைவில் புரை வளருகிறது.

* நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கும்,

* கண்களில் ஏதேனும் நோய்த்தொற்றின் காரணமாக வீக்கம் ஏற்பட்டிருந்தாலும்,

* பரம்பரை மூலக்கூறியல் காரணங்களாலும்,

* நாம் பிறப்பதற்க்கு முன்பு நமது தாய்க்கு பிரசவகாலத்தில் ஜெர்மன் மீசில்ஸ் எனப்படும் அம்மை நோய் ஏற்ப்பட்டிருந்தாலும்,

* நீண்ட காலம் ஸ்டீராய்டு மருந்துகளை உபயோகித்திருந்தாலும்,

* ஒருவருக்கு கிட்டப்பார்வைக்கோளாறு நீண்ட காலம் இருந்திருந்தாலும்,

* கண்களில் காயம் ஏதேனும் ஏற்பட்டிருந்தாலும்,

* கண் சார்ந்த மற்ற நோய்கள் ஏதேனும் இருந்தாலும்,

* நம் உடலில் பல்வேறு உயிர்வேதியியல் மாற்றங்கள் காரணமாகவும் கேட்டராக்ட் உருவாகலாம்.

* புரோட்டீன், வைட்டமின்கள் மற்றும் செலினியம் போன்ற நுண்ணிய சத்துக்குறைபாடு இருந்தாலும் கேட்டராக்ட் உருவாகலாம்.

* புகை பிடிப்பதாலும் இளம் வயதினர் உட்பட யாருக்கு வேண்டுமானாலும் கண் புரை வளரலாம்.
cataracts_for kids 1
கேள்வி: கேட்டராக்ட்டின் அறிகுறிகள் யாவை?

கேட்டராக்ட் பிரச்சினை உள்ள ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைப் பெருகிறர்கள். ஆனால் கேட்டராக்ட் பிரச்சினை உள்ள அனைவருமே பொதுவாக கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட அறிகுறிகளை உணர்வது வழக்கம்.

* பார்க்கும் பொருட்கள் யாவும் தெளிவற்றதாகவும் அல்லது மிகவும் புகை படர்ந்த பின்னணியுடன் மங்கலாகவும் தெரிவது.

* நிறங்களை பிரித்தறிவதில் சிரமம் இருப்பது, மற்றும் பார்க்கும் பொருட்கள் யாவும் மஞ்சள் நிறமாகத் தெரிவது.

* சாதாரண வெளிச்சத்தில் பார்வை தெளிவற்று இருப்பதும் மிக அதிகமான வெளிச்சம் தேவைப்படுவது.

* தொலைவில் உள்ள பொருட்களைப் பார்ப்பதில் சிரமம் ஏற்படுவது.

* பொருட்கள் இரண்டு பிம்பங்களாகத் தெரிவது.

* அடிக்கடி கண்ணாடிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுவது.

* சில வெளிச்சங்கள் மிகக் குறைவாகவும், சில வெளிச்சங்கள் மிக அதிகமாகவும் தெரிவது.

* படிப்பதற்க்கும் வாகனம் ஓட்டுவதற்க்கும் சிரமம் எற்படுவது. குறிப்பாக இரவு நேரங்களில் படிப்பதற்க்கும் வாகனம் ஓட்டுவதற்க்கும் அதிகமாக சிரமம் ஏற்படுவது.

* வெளிச்சத்தைச் சுற்றி வானவில்போல தெரிவது, குறிப்பாக வாகன வெளிச்சத்தைச் சுற்றி அவ்வாறு தெரியலாம்.

* நிறங்கள் தெளிவாகத் தெரியாமல் இருக்கலாம்.

கேள்வி: கேட்டராக்ட்டுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது?

அ. ஆபரேஷன் இல்லாத சிகிச்சை:

கேட்டராக்ட் வராமல் தடுப்பதற்க்கோ அல்லது கேட்டராக்ட் வருவதற்க்கான காரணத்தை அகற்றுவதற்க்கோ நிரூபிக்கப்பட்ட மருந்துகள் ஏதும் இல்லை. ஒருவேளை கேட்டாராக்ட் ஆரம்ப நிலையில் அல்லது லேசானதாக இருந்தால் கண்ணாடிகளை மாற்றிக் கொள்வது ஒருவேளை உதவியாக இருக்கலாம். ஆனால் மற்ற சூழ்நிலைகளில் ஆபரேஷன் மட்டுமே சரியான சிகிச்சை ஆகும்.

ஆ. கேட்டராக்ட் ஆபரேஷன் சிகிச்சை:

நமது கண்ணில் உள்ள இயற்கையான புரையால் மறைக்கப்பட்ட லென்ஸை நீக்குவதே கேட்டராக்ட் ஆபரேஷன் சிகிச்சை ஆகும். ஆனால் தற்போதைய ஆபரேஷன் முறையில் புரையால் மறைக்கப்பட்ட லென்ஸை ஆபரேஷன் மூலம் அகற்றிவிட்டு அதற்குப்பதிலாக இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் (Intraocular Lens) எனப்படும் கண்ணுக்குள் பொருத்தப்படும் ஒரு செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது.

கேள்வி: ஒருவர் எப்போது கேட்டராக்ட் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்?

ஒருவரது கண்ணின் உருவாகியுள்ள கண் புரை அவரது அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும்பட்சத்தில் அல்லது அவரது தினசரி வேலைகளை செய்வதற்க்குக் கூட சிரமமாக இருக்கின்ற நிலையில் அவருக்கு கேட்டராக்ட் ஆபரேஷன் அறிவுறுத்தப்படுகிறது.

இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான குறிப்பு என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியடைந்த நிலையில், கண்புரை முற்ற வேண்டும் என்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு வேளை கண் புரை முற்றியிருந்தால், அல்லது கண் புரை கண்ணின் உள்ளே வேறு ஏதேனும் ஆபத்தான சிக்கலை ஏற்படுத்தியிருந்தால்,(ஒரு வேளை அப்படி ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பிருந்தால்)அப்போது ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

சில நேரங்களில் நோயாளிக்கு விழித்திரையில் ஏதேனும் ஆபத்தான அல்லது சிக்கலான பிரச்சினை ஏதும் இருந்தால் அதனை உங்கள் கண் மருத்துவர் கவனிப்பதற்க்கும், விழித்திரை நோயை தடுக்கும் முயற்சிகளுக்கும், ஆபத்தினை ஏற்படுத்தும் விழித்திரை நோய்களை ஒரு நல்ல பயனுள்ள வகையில் கண்டுபிடிப்பதற்க்கும், சரியான சிகிச்சை அளிப்பதற்க்கும் கண் புரை இடையூறாக இருக்கலாம், அத்தகைய சூழ்நிலைகளில் விழித்திரை நோய்களுக்கு சரியான பயனுள்ள வகையில் சிகிச்சை அளிப்பதற்க்காக முற்றாத நிலையிலும் கண் புரைக்கு உடனடியாக ஆபரேஷன் செய்து கொள்ளும்படி உங்கள் மருத்துவர் அறிவுருத்தலாம். அதனை பின்பற்றுவது நல்லது.

கேள்வி: கேட்டராக்ட் ஆபரேஷன்களில் பல முறைகள் இருக்கின்றனவா?

ஆம். தற்போது மூன்று குறிப்பிடத்தக்க முறைகளில் மிக அதிகமான அளவில் கேட்டராக்ட் ஆபரேஷன்கள் செய்யப்படுகிறது. அவை:

a- கண் புரை உரித்தல் எனப்படும் Extracapsular Cataract Extraction (ECCE)

b- சிறு துளையிட்டு கண் புரை நீக்குதல் எனப்படும் Small Incision Cartaract Surgery (SICS).

c-ஃபேக்கோஎமல்சிஃபிகேஷன் (Phacoemulsification) முறை எனப்படும் நவீன தொழில் நுட்ப முறை.

இந்த மூன்று முறைகளிலும் ஆபரேஷன் செய்யும்போது கண் உள்ளே ஒரு செயற்கை லென்ஸ் வைத்து ஆபரேஷன் செய்வதன் மூலம் மிகவும் பயன் தரக்கூடிய அளவில் பார்வையை பெறலாம்.

கேள்வி: ஆபரேஷனின் போது எனக்கு வலிக்குமா? அல்லது எனக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபரேஷன் செய்வார்களா?

* கேட்டராக்ட் ஆபரேஷன் வலியை ஏற்படுத்தாது.

* பொதுவாக கேட்டராக்ட் ஆபரேஷனின் போது உங்களுக்கு வலி தெரியாதபடி இருப்பதற்க்காக ஆபரேஷன் செய்யப்படும் கண்ணில் உணர்வில்லாத நிலை (Local Anaesthesia) கொண்டுவரப்பட்டு ஆபரேஷன் செய்யப்படுகிறது. இது வலி இல்லாத நிலையை ஏற்படுத்தி ஆபரேஷன் செய்யப்படும் இடத்தில் அசைவுகள் ஏதும் இல்லாத நிலையை உருவாக்கி ஆபரேஷன் செய்யப்படும் முறை. ஆனாலும் ஆபரேஷனின் போது நோயாளிகள் சுயஉணர்வோடுதான் இருப்பார்கள்.

* வெகு சிலருக்கு மட்டுமே குறிப்பாக குழந்தைகளுக்கும், ஆபரேஷனின் போது சரியான ஒத்துழைப்பு தர முடியாத நோயாளிகளுக்கும் உடல் முழுவதும் உணர்வில்லாத நிலை (General Anaesthesia)கொண்டுவரப்பட்டு ஆபரேஷன் செய்யப்படுகிறது.

* ஃபேக்கோஎமல்சிஃபிகேஷன் முறை எனப்படும் நவீன தொழில் நுட்ப முறையில் ஆபரேஷன் செய்யும் பொழுது நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்யப்படும் இடத்தை மரத்துப் போகச் செய்வதற்க்காக மேற்ப்பூச்சு மயக்கமருந்துகள் ( Topical Anaesthesia) பயன்படுத்தி ஆபரேஷன் செய்யப்படுகிறது. இருந்தாலும் மிக அதிகமான அளவில் நோயாளியின் ஒத்துழைப்பும் அவசியம் தேவைப்படுகிறது.

கேள்வி: கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ் என்பது என்ன? லென்ஸ் பொருத்தினால் நான் கண்ணாடி அணிய வேண்டியிருக்காது என்கிறார்களே அது சரியா?

* ஐ.ஓ.எல். எனப்படும் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ் பிளாஸ்டிக் அல்லது சிலிக்கான் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது.

* கேட்டராக்ட் ஆபரேஷனின் போது கண்ணுக்குள் ஏற்கெனவே இயற்கையாக இருந்த லென்ஸின் உட்கரு பகுதியை நீக்கிவிட்டு அந்த இடத்தில் இந்த செயற்கை லென்ஸ் பொருத்தப்படுகிறது.

*லென்ஸ் பொருத்தப்பட்டவர்களுக்கு பொதுவான அன்றாட வேலைகளை செய்வதற்கு கண்ணாடி அணிய வேண்டியிருக்காது. தேவைப்படாது. ஆனால் படிப்பது, எழுதுவது போன்ற அருகாமை வேலைகளுக்கு கண்ணாடி அணிய வேண்டும்.

காரணம் செயற்கை லென்ஸ்களுக்கு ஒளிக்கதிர்களை பார்க்கப்படும் பொருளிலிருந்து பெற்று உள்ளே அனுப்பும்போது அருகில் உள்ள பொருட்களுக்கும் தூரத்தில் உள்ள பொருட்களுக்கும் ஏற்றவாறு தன்னை சரி செய்து கொள்ளக்கூடிய தன்மை கிடையாது. எனவே ஒரு சிலருக்கு மட்டும் தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்ப்பதற்க்கும் மெல்லிய கண்ணாடி ஒருவேளை தேவைப்படலாம். ஆனால் அருகிருந்து செய்யக்கூடிய, படிப்பது எழுதுவது போன்ற வேலைகளுக்கு கண்ணாடி அவசியம் தேவைப்படலாம்.

கேள்வி: கேடராக்ட் ஆபரேஷனின் போது கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்களில் பல வகைகள் இருப்பதாகச் சொல்கிறார்களே. அவை என்ன?

செயற்கை லென்ஸ்

___________________

↓ ↓

ஏ.சிலென்ஸ் பி.சி லென்ஸ்

பி சி லென்ஸ்

________________

↓ ↓

நான் ஃபோல்டபில் ஃபோல்டபில் ஸ்பெரிக்கல் /

ஸ்பெரிக்கல் லென்ஸ் ஏஸ்பெரிக்கல்

(மடித்து பொருத்தக்கூடிய லென்ஸ்)

ஸ்பெரிக்கல் / ஏஸ்பெரிக்கல் லென்ஸ்

___________________

↓ ↓

மோனோ ஃபோக்கல் லென்ஸ் மல்டி ஃபோக்கல் லென்ஸ்

டோரிக் / நான் டோரிக் லென்ஸ் ↓

நியூ ஜெனரேஷன் மல்டிஃபோக்கல் லென்ஸ்

ஏ.சி லென்ஸ்:

* சில கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் கருவிழிக்கு முன் புறம் பொருத்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இவை கண் முன் அறை ஐ.ஓ.எல். (Anterior chamber IOL or AC IOL) எனப்படுகின்றன. இந்த வகை லென்ஸ்கள் மிக அரிதாக சில நோயாளிகளுக்கு மட்டுமே கண் புரை உரித்தல் முறை அல்லது ஃபேக்கோ முறைப்படி செய்யப்படும் கேட்டராக்ட் ஆபரேஷனின் போது பொருத்தப்படும். குறிப்பாக வழக்கமாகப் பொருத்தப்படும் கண் பின் அறை லென்ஸ்கள் யாருக்கெல்லாம் பொருத்த முடியாதோ அவர்களுக்கு மட்டுமே இந்த வகை லென்ஸ்கள் பொருத்தப்படுகின்றன.

பி சி லென்ஸ்:

* வழக்கமாக எல்லா நோயாளிகளுக்கும் பொருத்தப்படும் கண் பின் அறை லென்ஸ்கள் (Posterior Chamber IOL or PC IOL) கேட்டராக்ட் ஆபரேஷனின் போது செயற்கை லென்ஸ் இயற்கையான லென்ஸின் உறை போன்ற மென் தோலில் பொருத்தப்படுகிறது. இந்த மென் தோல்கள் செயற்கை லென்ஸ்ஸினை ஆதாராமாகத் தாங்கிக் கொள்கிறது.

சாதாரண லென்ஸ்:

பொதுவாக கண்ணுக்குள்ளே செயர்கை லென்ஸ் பொருத்தி ஆபரேஷன் செய்த பிறகு கண் பார்வை நன்றாக தெரிகிறது தெரிகிறது. ஆனால் ஆபரேஷனின் போது ஏற்படுத்தப்பட்ட காயம் ஆறுவதற்க்கு 4 முதல் 6 வார காலம் ஆகிறது.

ஃபோல்டபில் லென்ஸ் (மடித்து பொருத்தக்கூடிய லென்ஸ்):

புதிய பி சி லென்ஸ்கள் இரண்டாக மடித்து அதிக பட்சம் 2.8 மில்லி மீட்டர் அளவிற்க்கு மட்டுமே கார்னியாவின் மேற்பகுதியில் திறந்து இயற்கையாக இருந்த லென்ஸின் மென்தோலில் பொருத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆபரேஷனின் போது ஏற்படுத்தப்பட்ட காயம் ஆறுவதற்க்கு 1 முதல் 2 வார காலம் மட்டுமே ஆகிறது.

ஸ்பெரிக்கல் லென்ஸ்:

பொதுவாக இந்த கண்ணுக்குள் பொருத்தும் ஃபோல்டபில் செயற்கை லென்ஸ்கள் ஸ்பெரிக்கல் லென்ஸ் வகைகளே. வடிவமைக்க்ப்படுவதில் பலவிதமான செயல்முறைகளைகடந்து வந்துள்ளது. இந்த செயற்கை லென்ஸ்களின் தோற்றம், இதன் பாதுகாப்புத் தன்மை, பார்வையை மேம்படுத்தும் திறன் மற்றும் Posterior Capsule Opasification எனப்படும் இயற்கையான லென்ஸின் பின் தோல் தடிமன் காரணமாக நேரிடக்கூடிய ஒளி ஊடுருவும் தன்மை குறைதல் போன்ற குறைபட்டினை குறைத்தல் போன்ற பல கண்ணோட்டங்களில் தீவிரமான ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு பல நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

* மடிக்கக்கூடிய செயற்கை லென்ஸ்(Foldable Lens)களின் வரவு மிகச் சிறிய அளவில் கார்னியாவிற்க்கு மேலே திறக்கப்பட்டு அதன்வழியே செயற்கை லென்ஸ்களை பொருத்துவதன் மூலமாக, திறக்கப்பட்டதால் ஏற்பட்ட திறப்பு தானாகவே சீக்கிரம் குணமடைவதற்க்கும், பல கண் மருத்துவமனைகளிலும் ஒரே மாதிரியான தரத்தை மேம்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏஸ்பெரிக்கல் லென்ஸ்:

* சமீப காலங்களில் செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்ட நோயாளிகள் பார்வையின் தரத்தை மேலும் முன்னேற்றமடையச் செய்யும் முயற்சிகளில் கவனம் செலுத்தப்பட்டது. வழக்கமாக நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் இருபுறமும் குவிந்த லென்ஸ்கள் (Biconvex)ஆகும்.

நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரும் ஒளிக்கதிர்கள் ஒளிக்கற்றையாக நமது கார்னியாவில் குவிந்து, அவை நமது லென்ஸ் வழியாக விழித்திரையில் பிம்பமாகப் பதிவாகிறது. செயற்கை லென்ஸ் பொருத்தப்பட்டவர்களின் கண்களில் இந்த ஒளிக்கற்றைகள் கோள பிறழ்ச்சி (Spherical Aberration) எனப்படும் ஒளியியல் தோற்றப்பாடு குறையை, ஒளிக்கதிர்கள் கற்றையாக வரும்போது நடைபெறும் ஒளியியல் தோற்றப்பாடினை ஏற்படுத்துகிறது. அதாவது அந்த ஒளிக்கற்றையின் மையப்பகுதியின் தொகுப்பு அல்லது கட்டு, பிம்பம் பதிவாகுமிடத்திற்கு முன்போ அல்லது பின்னரோ ஏற்படுத்துகிறது. இந்த கோள பிறழ்ச்சி பதிவாகும் பிம்பத்தின் தரத்தை குறைக்கிறது. எனவே பலரும் அதிகமான அளவில் பலவிதங்களில் உணரக்கூடிய தன்மை குறைவதை (Loss of contrast sensitivity)அனுபவித்தனர்.

* இந்த குறையை நிவர்த்தி செய்வதற்க்கே Aspheric IOLs எனப்படும் கோள பிறழ்ச்சியை குறைக்கும் லென்ஸ்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இருபுறமும் குவிந்த லென்ஸ்களின் வெளிப்புறத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தி வடிவமைக்கப்பட்டன. பல ஆய்வுக்கூடங்களிலும் மற்றும் மருத்துவ சோதனைகளிலும் இந்த லென்ஸ்கள் கோள பிறழ்ச்சி குறைபாட்டினை குறைக்கும் என்று கண்டறிந்து இந்த வகை செயற்கை லென்ஸ் பயன்படுத்தி இந்த குறைபாட்டினை நிவர்த்தி செய்து வருகின்றனர்.

* டோரிக் செயற்கை லென்ஸ்கள் (Toric IOLs):

வெற்றிக்கரமாக கேட்டராக்ட் ஆபரேஷன்கள் நிறைவேறியிருந்தாலும், வழக்கமாக பயன்படுத்தும் செயற்கை லென்ஸ்களில் கோள பிறழ்ச்சி (Spherical Aberration) எனப்படும் ஒளியியல் தோற்றப்பாடு குறையை மட்டுமே நீகக முடிந்தது. ஆனாலும் சுமார் 40% நோயாளிகளுக்கு சிலிண்ட்ரிக்கல் பவர் (cylindrical power) எனப்படும் உருளைக்கூறு குறைபாடு சரி செய்யப்பட முடியவில்லை. இந்த சிலிண்ட்ரிக்கல் பவர் குறையை ஓரளவு சரி செய்வதற்க்காகவே நோயாளிகளுக்கு கண்ணாடி அறிவுருத்தப்படுகிறது. இந்நிலையை கவனத்தில் கொண்டு டோரிக் செயற்க்கை லென்ஸ், சிலிண்ட்ரிக்கல் பவர் குறைபட்டினை சரி செய்வதோடு மட்டுமல்லாமல் பார்வை சார்ந்த குறைபாடுகளைக் களையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லென்ஸை பயன்படுத்துவதன் மூலம் கேட்டராக்ட் ஆபரேஷனுக்குப் பிறகு நோயாளிகள் கண்ணாடியை சார்ந்து இருக்க வேண்டிய அவசியத்தை குறைக்கலாம்.

* மல்டிஃபோகல் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் (Multifocal IOLs):

பொதுவாகவே மனிதர்களின் கண்கள் அருகில் உள்ள பொருட்களையும், தூரத்தில் உள்ள பொருட்களையும் பார்ப்பதற்க்கு ஏற்றவாறு தன்னை தயார்படுத்தி/நிறுத்திக்கொள்ளும் தன்மையுடையது. ஆனால் பொதுவாகவே கண்புரை ஆபரேஷனுக்குப் பின்னர் இந்த தன்மை இழக்கப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவு ஆகும். வழக்கமாகப் பயன்படுத்தும் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் ஒரு குறிப்பிடத்தக்க தூரம் வரை மட்டுமே ஒளிக்கதிர்களின் குவியத்தூரத்தைப் பொருத்து சரியான பார்க்கும் திறனை வழங்குகிறது. மேலும் கண் மருத்துவர்கள் தூரப் பார்வையைக் கருத்திற்க்கொண்டே வழக்கமான செயற்கை லென்ஸ்களை தேர்வு செய்து கேட்டராக்ட் ஆபரேஷனின் போது தமது நோயாளிகளுக்குப் பயன்படுத்துகிறார்கள். எனவே நோயாளிகள் கேட்டராக்ட் ஆபரேஷனுக்குப் பின்னர் அருகில் உள்ள பொருட்களைப் பார்ப்பதற்க்கு கண்ணாடியை உபயோகிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

* கண் மருத்துவத்தின் சமீபத்திய விஞ்ஞான தொழில் நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக பல்வகைகுவித்திறன் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் எனப்படும் மல்டிஃபோகல் லென்ஸ் (Multifocal IOLs)கள், உபயோகித்து கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்பட்ட நோயாளிகள் அருகில் உள்ள பொருட்களையும் தூரத்தில் உள்ள பொருட்களையும் கண்ணாடியின் உதவியின்றியே பார்க்க முடிகின்றது.

நியூ ஜெனரேஷன் மல்டி ஃபோக்கல் லென்ஸ்:

நீண்ட நாட்களாகவே இவ்வகை மல்டிஃபோக்கல் லென்ஸ்கள் பரவலாக கிடைத்தும்கூட பிரபலமாகவில்லை. காரணம் பார்வைத்திறன் குறித்த சில பக்க விளைவுகளான கண் கூசுதல், ஒளிவட்டம், இரவு நேரங்களில் பார்வையில் சிரமம் போன்றவை ஏற்பட்டன.

*இவ்வகை சிரமங்கள் அனைத்தையும் கருத்திற்க்கொண்டு, இந்த பாதிப்புகள் அனைத்தையும் தவிர்த்திடும் வகையில் வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை பல்வகைகுவித்திறன் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள் (The New Generation Multifocal IOLs)குறிப்பாக Restor, Rezoom எனப்படும் லென்ஸ்கள் குறிப்பிடத்தக்க நோயாளிகளுக்கு கேட்டராட்க் ஆபரேஷனின்போது பயன்படுத்திய பின்னர் கண்ணாடி அணியாமலேயே எத்தகைய பக்க விளைவும் இன்றி மிகவும் சிறப்பான வகையில் பலனளித்திருக்கிறது.

புதிய வகை செயற்கை லென்ஸ்களை பயன்படுத்துகின்ற பட்சத்தில், வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், பகல் நேரங்களில் அதிகம் பயணம் செய்பவர்களுக்கும் புற ஊதாக்கதிர்களின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பினை வழங்க முடியும்.

கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்கள்
artificial lences
கேள்வி: வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட லென்ஸ்கள்தான் சிறந்ததா?

* நமது நாட்டில் தயாராகும் கண்ணுக்குள் பொருத்தும் செயற்கை லென்ஸ்களும் தரமானவையாகவே இருக்கின்றன. அதிகம் பேருக்கு இந்த வகை லென்ஸை கண்புரை ஆபரேஷனில் பயன்படுத்தப்பட்டு அனைவரும் நலமாக இருக்கிறார்கள்.

கேள்வி: எனக்கான செயற்கை லென்சை எப்படி நான் தேர்ந்தெடுப்பது?

* உங்களுக்கு கேட்டராக்ட் எந்த அளவிற்க்கு வளர்ந்துள்ளது?, அதன் தற்போதைய நிலை என்ன?, உங்களுக்கு கண் புரையோடு வேறு கண் சார்ந்த பிரச்சினைகளும் இருக்குமேயானால், அவற்றுக்கும் சேர்த்து கண் புரை நீக்கும் ஆபரேஷனோடு சிகிச்சை அளிக்கப்படுமேயானால் அதற்கு ஏற்றார் போல உங்களுக்கு எந்த லென்ஸ் பயன்படுத்துவது என்பதை உங்கள் நலம் விரும்பும் உங்கள் கண் மருத்துவரே தீர்மானிப்பார்.

* மேற்குறித்த அறிமுகங்களுடனும், ஆராய்ச்சிகளுடனும், சிறந்த முடிவுகளுடனும் இன்று கேட்டராக்ட் ஆபரேஷன் இன்று மிகவும் நாகரிகமான முறையில், முன்னெப்போதும் இல்லாத மிகச்சிறந்த தரத்தில் செய்யப்பட்டு பார்வையை மீட்டுத் தருகிறது.

* எனவே உங்கள் கண் மருத்துவரிடம் நீங்கள் உங்கள் அன்றாட வாழ்க்கை முறையை எடுத்துச் சொல்லி உங்களுக்கான சரியான செயற்கை லென்ஸை தேர்வு செய்து மிகச் சிறப்பான பார்வையை உங்களுக்கு மீட்டுத் தருவதற்க்கு உங்கள் கண் மருத்துவருக்கு நீங்கள் ஒத்துழைப்பது நல்லது.

கேள்வி: கண்ணில் புரை உள்ள ஒருவர் சங்கர நேத்ராலயாவிற்க்கு வரும் போது எவ்வாறு சேவைகள் வழங்கப் படுகின்றன?.

* நீங்கள் கண் மருத்துவ பரிசோதனை செய்ய முன்பதிவு செய்து கொண்ட நாளில், உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட் ஏதாவ்து இருந்தால் அவற்றை உடன் எடுத்துக் கொள்ளவும்.

* நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால் அதற்கான் குறிப்புகள்,மருந்துகள் ஏதாவது எந்த பிரச்சினைகளுக்காகவாவது சாப்பிடுபவராக இருந்தால் அந்த மருத்துவக் குறிப்புகள் அனைத்தையும் கொண்டு வரவும்.

* உங்களுக்கு எந்த மருந்தாவது அலர்ஜி ஆகும் என்று தெரிந்திருந்தால் அதனை உங்களுடைய மருத்துவ குறிப்புகளைக் கேட்கும் ஆப்டோமெட்ரிஸ்ட்களிடமும், மருத்துவரிடமும் தவறாது குறிப்பிடவும்.

* உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நாளில் சரியான நேரத்திற்க்கு சரியாக வந்து உங்கள் வருகையை உங்கள் ரிசப்ஷனில் உறுதிப்படுத்தவும்.

* கண்ணின் புரை இருப்பதாக வரக்கூடிய நோயாளிகளுக்கு ஒரு முழுமையான கண் பரிசோதனை செய்யப்படுகிறது. அந்த பரிசோதனைகளுக்கு சுமார் 2 முதல் மூன்று மணி நேரம் வரை ஆகலாம். ஒருவேளை கேட்டராக்ட் ஆபரேஷன் செய்வதாக தீர்மானித்தால் டி.பி.ஆர்.(DBR) எனப்படும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த பரிசோதனை மூலமே உங்களுக்கு சிறந்த பார்வையை கொடுப்பதற்க்கான, உங்கள் கண்ணுக்குள் பொருத்தப்படும் செயற்கை லென்ஸின் பவர் கணிக்கப்படுகிறது.

* அடுத்து உங்களுக்கு ஆபரேஷன் செய்யும்போது கண்ணில் உணர்வில்லாத நிலை (Local Anaesthesia)யில் ஆபரேஷன் செய்வதற்க்கு உரிய உடற்தகுதி இருப்பதை உறுதி செய்து கொள்வதற்க்காக பொது மருத்துவர் மூலம் முழு உடல் பரிசோதனைகள் மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இவை முழுமை பெறுவதற்க்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தேவைப்படலாம். குழந்தைகளுக்கு உடல் முழுவதிலும் உணர்வில்லாத நிலை (General Anaesthesia)யில் ஆபரேஷன் செய்யப்படுகிறது.

* உங்களுக்கு ஆபரேஷன் அன்று மருத்துவமனைக்கு வந்து அட்மிட் ஆகி ஆபரேஷன் முடிந்தவுடன் சில மணி நேரங்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டு அன்றே வீட்டிற்க்கு திரும்பிச் செல்லும் சிகிச்சை முறை டே கேர் (Day care) அல்லது ஆம்புலேட்டரி சர்ஜரி(Ambulatory surgery) முறை எனப்படுகிறது. இந்த முறையிலேயே கேட்டராக்ட் ஆபரேஷன் செய்யப்படுகிறது.

* ஆபரேஷனுக்கு பின்னரான பரிசோதனைகள் ஆபரேஷன் ஆன மறு நாளும், அடுத்து மீண்டும் மூன்றாவது அல்லது நான்காவது நாளும் செய்யப்படுகின்றன. நிறைவாக ஒரு முழுமையான ஆபரேஷனுக்கு பின்னரான பரிசோதனைகள் ஃபேக்கோஎமல்சிஃபிகேஷன் முறை எனப்படும் நவீன தொழில் நுட்ப முறையில் ஆபரேஷன் ஆனவர்களுக்கு இரண்டு வாரங்கள் கழித்தும், கண் புரை உரித்தல் எனப்படும் Extracapsular Cataract Extraction (ECCE) மற்றும் சிறு துளையிட்டு கண் புரை நீக்குதல் எனப்படும் Small Incision Cataract Surgery (SICS) முறைப்படி ஆபரேஷன் ஆனவர்களுக்கு ஆறு வாரங்கள் கழித்தும் செய்யப்படுகின்றன. அப்போது ஒருவேளை கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருந்தால் அவர்களுக்கு கண்ணாடியும் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு

திரு அ போ இருங்கோவேள்

மேனேஜர் – பேஷண்ட் எஜுகேஷன் அண்ட் கவுன்செலிங்

அறை எண் : 1, மஹிகோ பிளாக் பேஸ்மெண்ட்

சங்கர நேத்ராலயா,

18 கல்லூரி சாலை, சென்னை 600 06

தொலைபேசி எண்: 044 2827 1616 Extn: 1417

இ மெயில்: [email protected], [email protected]

Related Posts

error: Content is protected !!