குற்றாலத்தை காப்பாற்ற கைகொடுத்த ஐகோர்ட் By கதிர்
உலகில் நிறைய அருவிகள் இருக்கின்றன.
பிரமாண்டமானவை. வெனிசுலாவின் 3,212 அடி உயர ஏஞ்சல். வினாடிக்கு பத்து லட்சம் லிட்டர் நீர் கொட்டும் ஜிம்பாவேயின் விக்டோரியா. அமெரிக்கா – கனடாவை இணைக்கும் நயகரா. அர்ஜென்டினாவின் இரண்டு கிலோமீட்டர் அகலமான இகுவாசு. அனைத்தும் பார்ப்போரை பரவசப்படுத்தும் இயற்கையின் அற்புதங்கள். உலக அதிசயங்கள் பட்டியலில் இடம் பெற்ற அருவி விக்டோரியா.
இந்தியாவிலும் கர்நாடகாவின் 829 அடி உயரமான ஜோக் அருவி போன்று பல மாநிலங்களிலும் கண்ணை கவரும் அருவிகள் இருக்கின்றன.
நமது குற்றாலம் அருவிகள் தவிர அநேகமாக உலக புகழ் பெற்ற அருவிகள் அனைத்தையும் பார்க்கலாம், ரசிக்கலாம். அவ்வளவுதான். குளித்து மகிழ்வதற்கென்றே இயற்கை அளித்த கொடை குற்றாலம் அருவிகள் மட்டுமே. உடல் களைப்பை போக்கி மனதுக்கும் புத்துணர்வு தரக்கூடிய அபூர்வமான குணம் அமைந்த்து இந்த அருவிகளில் கொட்டும் தண்ணீர். சில வகை மன நோயாளிகள் ஒரு மாதம் தொடர்ந்து அருவியில் குளித்ததன் விளைவாக குணமாகி வீடு திரும்புகிறார்கள் என்பது கதையல்ல.
இத்தனை சிறப்புகள் கொண்ட குற்றாலம் அருவிகளை அழிவில் இருந்து காப்பாற்ற முனைந்திருக்கும் உயர் நீதிமன்றத்தை தமிழக மக்கள் மனமார பாராட்டுகின்றனர்.
ஆர்.கிருஷ்ணசாமி என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்காக மதுரை கிளையில் இந்த பிரச்னையை கொண்டுவந்தார்.
நீதிபதிகள் கிருபாகரன், வைத்யநாதன் ஆகியோர் விசாரித்தனர். குற்றாலம் அருவிகளின் நிலை பற்றியும், சீசனில் அந்த ஊரின் பரிதாப நிலவரம் குறித்தும் மனுதாரர் விளக்கி இருந்தார். அரசு தரப்பில் அந்த புகார்கள் மறுக்கப்பட்டதால், ஒரு குழு அமைத்து நேரில் ஆய்வுசெய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வெங்கடரமணா, அருணாசலம் ஆகிய வழக்கறிஞர்கள் குழுவாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் ஆய்வு செய்து ஆதாரங்களுடன் அறிக்கை சமர்ப்பித்தனர். வெளிநாட்டில் வாழும் இலங்கை தமிழர் ஒருவர் தாமாக ஆஜராகி, மனுவில் கூறப்பட்டதை எல்லாம் வலியுறுத்தினார். இவ்வளவு அற்புதமான இயற்கை செல்வத்தை பாதுகாக்காமல் அழியவிடுவது இந்தியா தவிர எந்த நாட்டிலும் பார்க்க முடியாத பொறுப்பின்மை என்று குமுறினார். திருநெல்வேலி, தென்காசி அதிகாரிகளை வரவழைத்து விசாரித்த பின்னர் நீதிபதிகள் 33 உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அனைத்தையும் அமல்படுத்திவிட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை கலெக்டருக்கும் போலீஸ் சூப்பிரண்டுக்கும் ஆணையிட்டுள்ளனர்.
மது அருந்திய நிலையில் அருவியில் யாரையும் குளிக்க விடக்கூடாது என்பது முக்கியமான உத்தரவு. அருவிக்கு செல்லும் வழியில் உள்ள மது கடைகளை அகற்றுவது, பொது இடங்களிலும் சாலைகளிலும் அமர்ந்து மது அருந்துவதை தடுப்பது ஆகிய உத்தரவுகளுடன் சேர்த்து செயல்படுத்தும்போது குற்றாலத்தின் பெரும்பாலான பிரச்னைகள் இதிலேயே தீர்ந்துவிடும். பெரும்பாலான குற்றங்களுக்கும் விதி மீறல்களுக்கும் மதுதானே காரணமாக இருக்கிறது.
நவீன கழிப்பறைகள், வலுவான வேலி, உயரமான கம்பங்களில் ஒளி விளக்குகள் ஆகியவை பொருத்தப்படும்போது குற்றங்கள் அடியோடு நின்றுவிட வாய்ப்பு இருக்கிறது. எண்ணெய், ஷாம்பூ, சோப்பு, சீயக்காய் பயன்படுத்தக் கூடாது; பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை என்ற அறிவிப்பு குற்றாலத்தை ஆரோக்ய சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்துக்கு செயல் வடிவம் கொடுக்கும்.
இந்த உத்தரவுகள் கண்டிப்புடன் அமல்படுத்தப் படுமா என்பதுதான் கேள்வி. ஏனென்றால், நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளில் பல ஏற்கனவே அமலில் இருப்பவை. சாலையில் மது அருந்துவது, கண்ட இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, போதையில் குளிப்பது, சோப்பு ஷாம்பூ பயன்படுத்துவது போன்ற செயல்கள் முன்னரே தடை செய்யப்பட்டவை. ஆனால் அதிகாரிகளால் அமல்படுத்தப் படாமல் விடப்பட்டவை. கூடுதல் பணியாளர்களும் காவலர்களும் நியமிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது நிலைமையை சீர்படுத்த ஓரளவு உதவலாம்.
கலெக்டரும் எஸ்.பி.யும் எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறார்களோ அதை பொருத்துதான் நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படும்.
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பல முக்கியமான உத்தரவுகள் கீழ்நிலை அதிகாரிகள், ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்டதை நாம் பார்த்துள்ளோம். ஆக்கிரமிப்புகள் அகற்றம், சாலையோர பேனர்கள் அகற்றம், ஆற்று மணல் அள்ள தடை, ஆட்டோ மீட்டர் கட்டணம், டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல், பார்களில் சுத்தம்… என்று பொதுநலன் குறித்த முக்கியமான உத்தரவுகள் நடைமுறைக்கு வராமல் பேப்பர் அளவில் முடங்கி கிடக்கின்றன. உயர் அதிகாரிகள் ஆர்வம் காட்டாததே காரணம்.
அதே சமயம், பொது நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொது மக்களுக்கு உள்ள பொறுப்பையும் நினைவில் கொள்ள வேண்டும். வெறும் 3 மாதம்தான் குற்றாலம் சீசன். அந்த கால கட்டத்தில் 30 லட்சம் பேருக்கு மேல் குற்றாலம் வருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்தெல்லாம் குடும்பத்துடன் வருகின்றனர். சிறிய நகரான குற்றாலத்துக்கு இது மிகப்பெரிய வரம். ஊரையும் அருவிகளையும் ஒழுங்காக பராமரித்து சட்ட விதிகளை கண்டிப்புடன் அமல் படுத்தினால் உள்ளாட்சி அமைப்புக்கும் உள்ளூர் மக்களுக்கும் வருமானம் பல மடங்கு பெருகும்.
சென்னை போன்ற பெரிய நகரங்களில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்களில் க்ளோரின் கொட்டிக் கலந்த தண்ணீரை ரீசைக்கிள் செய்து செயற்கை பாறைகளில் இருந்து விழச் செய்து அருவி என்ற பெயரில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும்போது, ஏழெட்டு இயற்கையான அருவிகளை கொண்டுள்ள குற்றாலம் சுலபமாக வளம் கொழிக்கும் ஊராக மாற முடியும்.
ஒரு போலீஸ் அதிகாரியுடன் பேசிக் கொண்டிருந்தபோது, வட்டார அரசியல் புள்ளிகள், அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் சீசனில் படையெடுத்து வருவதால் விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்துவது இயலாத காரியம் என்று சொன்னார். நீதித்துறை சம்பந்தப்பட்டவர்களும் விதி விலக்குகளை எதிர்பார்ப்பதாக அவர் ஆதங்கப்பட்டார். ஒரு சிலருக்காக விதிகளை தளர்த்தும்போது, அதை பார்த்துக் கொண்டிருக்கும் மற்றவர்களுக்கு துணிச்சல் வந்து விடுகிறது என்று சில சம்பவங்களை உதாரணம் காட்டினார்.
டெக்னாலஜி உதவியுடன் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். குற்றாலத்தை சுற்றியுள்ள தென்காசி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை பகுதிகளை சேர்ந்த பலர் போகும்போது வரும்போது பார்க்கும் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து சுறுசுறுப்பாக ஃபேஸ்புக்கில் பதிவிடுகிறார்கள். எந்த வகையான விதி மீறல் நடந்தாலும் அதை உடனே படம் பிடித்து இவர் இன்னார் என அடையாளம் காட்டி சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்த பொதுமக்களை உயர் அதிகாரிகள் ஊக்குவிக்க வேண்டும். சாலையில் சென்றவர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற ஒரு மேயர் பற்றி ஃபேஸ்புக்கில் படமும் தகவலும் வெளியானதால் அவர் பதவியை பறிகொடுத்தார். அப்படி குற்றாலம் அத்துமீறல்களால் சில பிரமுகர்களுக்கு இழப்பு நேரும்போது இந்த கொட்டமெல்லாம் அடங்கிவிடும். ஃபேக் ஐடி உருவாக்குவது சகஜமக நடப்பதால் இதில் தற்காப்பு விவகாரங்கள் எழவும் வாய்ப்பு இல்லை.
குற்றாலம் பிரச்னையில் நீதிமன்றம் நல்ல வழி காட்டியுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அரசு எந்திரத்தை முழுமையாக பயன்படுத்தி நீதிமன்ற ஆணையை நிறைவேற்ற அதிகாரிகள் இதய சுத்தியுடன் செயல்பட வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வெற்றி, நதிகள் உள்ளிட்ட இயற்கை வளங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு புதிய உத்வேகம் அளிக்கும்.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் சில
0 எண்ணெய், ஷாம்பூ, சோப்பு, சீயக்காய் தடை
0 பிளாஸ்டிக் கவர், டம்ளர், பொருட்களுக்கு தடை
0 துணி துவைக்க கூடாது
0 அருவி அருகே குண்டு குழி இருக்க கூடாது
0 குளிக்கும் இடத்தை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும்
0 இருட்டுக்கு இடமின்றி விளக்குகள் பொருத்த வேண்டும்
0 நவீன கழிப்பறைகள் கட்ட வேண்டும்
0 பெண்கள் உடை மாற்ற அறைகள் கட்ட வேண்டும்
0 அருவி நீரிலோ ஆற்று நீரிலோ எந்த கழிவும் கலக்கக்கூடாது
0 மது அருந்திய எவரையும் குளிக்க விடக்கூடாது
0 வாகன கட்டணம் கூடுதலாக வசூலிக்க கூடாது
0 வாகனங்களை தாறுமாறக நிறுத்தக் கூடாது
0 துப்புரவு ஊழியர்கள் 50 பேர் நியமிக்க வேண்டும்
0 அருவி அருகே ஆம்புலன்ஸ், மருத்துவ குழு நிறுத்தவேண்டும்
0 ஊரெங்கும் கேமராக்கள் நிறுவி கண்காணிக்க வேண்டும்
0 ஒவ்வொரு குற்றத்துக்கும் உடனே தண்டனை,அபராதம் விதிக்க மொபைல் கோர்ட் அமைக்க வேண்டும்
(இழு தள்ளு 40/ கதிர்/ குமுதம் ரிப்போர்ட்டர் 29.05.2014)