கல்லூரிகளில் சேருவதற்கு விண்ணப்பப்பதிவு: தொடங்குகிறது!

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு வருகிற 27ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது விண்ணப்பப்பதிவுக்கான தேதி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு நாளை (புதன்கிழமை) முதல் தொடங்குகிறது. பதிவு செய்வதற்கான கடைசி நாள் அடுத்த மாதம் (ஜூலை) 7ந்தேதி ஆகும். விண்ணப்பதாரர்கள் www.tngasa.in, www.tngasa.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பப்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒரு கல்லூரிக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.48ம், பதிவு கட்டணமாக ரூ.2–ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பதிவு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044–28260098, 28271911 என்ற எண்களிலும், மேற்சொன்ன இணையதள முகவரிகளிலும் தொடர்புகொள்ளலாம்.
கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.