எம்.பி. தேர்தல் :பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னையில் இன்று எம்.பிதேர்தலில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டு,””தற்போது ‘சமூக ஜனநாயக கூட்டணி” என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் .மக்களை சந்திக்கவே முன்கூட்டியே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது இப்போது தமிழகத்தில் மாற்றம் கொண்டு வரவே மாற்று அணி அமைக்கப்பட்டுள்ளது “என்று ராமதாஸ் கூறினார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது “வரும் 2014ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பாமக தலைமையில் ‘சமூக ஜனநாயக கூட்டணி‘ உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் எந்தெந்த கட்சிகள், எந்தெந்த அமைப்புகள் இடம் பெற்றுள்ளன என்பதை விரைவில் அறிவிப்போம். இந்த புதிய கூட்டணி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதியிலும் போட்டியிடும்.
கூட்டணியில் இடம்பெறும் அணிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பின்னர் அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்களை இப்போது அறிவிக்கிறோம். அதன் விவரம்:
கிருஷ்ணகிரி- பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி, அரக்கோணம்- முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க.வேலு, ஆரணி- முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சேலம்- இளைஞரணி செயலாளர்- அருள், புதுச்சேரி- மாநில செயலாளர் ஆர்.கே.ஆர். அனந்தராமன்.
முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் எந்த கட்சிக்கு ஆதரவு என்பது குறித்து பொதுக்குழு கூடி முடிவு செய்யும். ஏற்காடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்காது.” என்று தெரிவித்தார்