எம்.ஜி.ஆர் 100 – விழாவில் எடப்பாடி + ஓ.பி.எஸ் சொன்ன குட்டி கதைகள்!

எம்.ஜி.ஆர் 100 – விழாவில் எடப்பாடி + ஓ.பி.எஸ் சொன்ன குட்டி கதைகள்!

தேனி அருகே போடிநாயக்கனூர் விலக்கில் தனியார் ஆலை மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதற்கு சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். இதில் எம்.ஜி.ஆர். உருவப் படத்தை திறந்து வைத்தும், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பழனிசாமி பேசிய போது, “எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின். கடும் வறட்சி வந்தாலும் இந்த ஆட்சி கலைக்கப்படும் என்கிறார். மழை பெய்தாலும் கலைக்கப்படும் என்கிறார். ஆக மொத்தம் அவரது மனதில் இருப்பது இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்பதுதான். திமுகவினர் இன்று பல கோஷங்கள் போட்டு மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள். நீங்கள் என்ன நினைத்தாலும் மக்கள் மனதில் இடம்பெற்று ஆட்சி நடத்த முடியாது. இந்தியாவிலேயே தமிழகம் முன்னிலை மாநிலமாக இருக்கிறது என்றால் இதற்கு முன்பு இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள்தான் காரணம்.

ஸ்டாலின் ஐந்து ஆண்டுகள் சென்னை மேயர், ஐந்து ஆண்டுகள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தார். பத்து ஆண்டுகள் சென்னை நகருக்கு அவர் எதுவுமே செய்யவில்லை. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்டபோது இவர்கள்தான் தடையாணை பெற்றார்கள். உள்ளாட்சி தேர்தலை நாங்கள் தடுக்கவில்லை. நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். இரட்டை குழல் துப்பாக்கிபோல் ஆட்சியையும், கட்சியையும் நானும், துணை முதல்வரும் காப்போம்.

குடிமராமத்து திட்டத்தில் ரூ.400 கோடி எங்கே என்கிறார் ஸ்டாலின். இதுவரை இத்திட்டத்தில் ரூ.100 கோடிதான் செலவிடப் பட்டுள்ளது. இன்னும் ரூ.300 கோடி செலவிடப்படவில்லை. நீதிமன்றத்தில் திமுகவினர் போடும் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெறுவோம். இரட்டை இலையும் எங்களுக்குதான் கிடைக்கும் “என்றார்.

மேலும் அவர், “முரடன் ஒருவனிடமும், சான்றோர் ஒருவரிடமும் தலா ஒரு கிளி வளர்கிறது. முரடனிடம் வளரும் கிளி ‘வெட்டு, குத்து’ என்கிறது. ஆனால் சான்றோரிடம் வளரும் கிளியோ ‘வாங்க.. உட்காருங்க’ என்று பண்பாக பேசுகிறது. ஒருவர் எப்படி வளர்க்கப்படுகிறாரோ அப்படித்தான் வளர்வார்கள். இதை சொல்லும்போது ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு சிறுவன் மரத்தின் மீதேறி, கிளையில் அமர்ந்தபடியே, அந்த கிளையை வெட்டுகிறான். அதை வானத்தில் இருந்து பார்த்த பார்வதி தேவி, சிவபெருமானிடம் சென்று, ‘கிளையில் அமர்ந்தபடி வெட்டுவதால், கீழே விழுந்து சிறுவன் இறந்து விடுவான். அச்சிறுவனை காப்பாற்ற வேண்டும்’ என்றாராம்.

சிவபெருமானோ, ‘‘அந்த சிறுவன் கீழே விழும்போது, ‘அம்மா’ என்று அழைத்தால் நீ போய் காப்பாற்று, ‘அப்பா’ என்றால் நான் போய் காப்பாற்றுகிறேன்’’ என்றாராம். அந்த சிறுவனும் சிறிது நேரத்தில் மரக்கிளையிலிருந்து விழும்போது, ‘ஐயோ’ என்றபடி விழுகிறான். இந்த கதை மூலம் என்ன தெரிகிறது என்றால், எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், உயரத்தில் இருப்பவர்கள் நல்ல வார்த்தைகளை பேசி, பண்பை வளர்த்துக் கொள்ளாவிட்டால், எவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்தும் கீழே விழுவார்கள். உதவி கிடைக்காது. இதில் யாரை குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்கே தெரியும்” என்று குறிபிட்டார்

இவ்விழாவிற்கு தலைமையேற்று பேசிய தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் ”அம்மாவின் தன்னலமற்ற ஆட்சியால் 16 லட்சம் உறுப்பினர்களாக இருந்த அ.தி.மு.க ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட எஃகு கோட்டையாக மாறியது. மேலும் அ.தி.மு.க உருவானதிலிருந்து இதுவரை தமிழக மக்களின் பேராதரவோடு 27 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து வருகிறது. அவருடைய மறைவுக்கு பின் அனைவரும் இணைந்து ஒற்றுமையுடன் செயல்படுவது சிலருக்கு தாங்கமுடியவில்லை, சிலருக்கு தூக்கமில்லை ஆட்சியை கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களின் கணக்கு தப்பாகிவிட்டதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றார். பசும்பொன் தேவரின் உருவசிலைக்கு அணிவிக்க தங்க கவசத்தை பெற பிரச்னை செய்தனர். அதனால் அவற்றை மாவட்ட ஆட்சியர் மூலம் அணிவிக்கப்பட்டது. இரட்டை இலை சின்னம் விரைவில் நமக்கு கிடைத்து விடும்” என்றார்.

அத்துடன் , “ஒரு முனிவரிடம் ஒருவர் வந்தார். தனது பாவத்தை போக்க வழி சொல்லுமாறு கேட்டார். முனிவர் என்ன பாவம் செய்தாய் என்று கேட்டார். தான் நிறைய அவதூறு பேசுவதாக கூறினார். உடனே முனிவர் உன் வீட்டில் தலையணை இருந்தால் எடுத்துவந்து நடுவீதியில் நின்று கொண்டு உள்ளிருக்கும் பஞ்சை எடுத்து பறக்கவிட்டு விட்டு வா என்றார். குழம்பியவர் முனிவர் சொன்ன மாதிரி செய்து விட்டு வந்து தன் பாவம் தீர்ந்து விட்டதா என்று ஆர்வமாக கேட்டார். முனிவர் நான் பஞ்சை பறக்க விட்டால் பாவம் தீர்ந்து விடும் என்று சொல்லவில்லையே என்றும், தற்போது பறக்கவிட்ட பஞ்சை மீண்டும் ஒன்று சேர்த்து கொண்டு வா என்றார். நாலாபக்கமும் பறந்து போன பஞ்சை எப்படி கொண்டு வர முடியும் என்று வந்தவர் கேட்க, அதுபோல உன் பாவமும் தீராது என்று முனிவர் தெரிவித்தார். இது யாருக்காக கூறுகிறேன் என்று அனைவருக்கும் தெரியும்” என்று அவர் பேசினார்.

Related Posts

error: Content is protected !!