June 2, 2023

உக்ரைன் விவகாரத்தால் போர் ஏற்படுமா? – ரமேஷ் கிருஷ்ணன் பாபு!

சோவியத் ஒன்றியம் இருந்தவரையில் உக்ரைன் என்பது ஒரு தனி நாடு என்பதே பலருக்கும் தெரியாது. கடந்த 30 ஆண்டுகளில் வரலாறு மாறிவிட்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கும், சோவியத் ஒன்றியத்தின் ‘வாரிசாக’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் ரஷ்யாவும் ஏறக்குறைய ஒரு போரை நடத்திப் பார்த்து விடுவோமா என நினைக்கும் அளவிற்கு மோதல் களமாகிவிட்டது உக்ரைன். விவகாரம் ரஷ்யாவின் விரிவாக்கக் கொள்கை தொடர்புடையது. பழைய சோவியத் ஒன்றியம் போலவே தன்னையும் கருதிக் கொண்டு தனது எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள முயன்று வரும் ரஷ்யாவிற்கும், அதனை தடுக்க நினைக்கும் அமெரிக்காவிற்கும் இடையே தான் பிரச்சினை.

இதில் நகை முரண்பாடு என்னவென்றால் உக்ரைன் அமைந்திருப்பது ஐரோப்பிய பிரதேசத்தில். அந்நாட்டை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டணி அமைப்பில் இணைக்க இதுவரை எந்தவொரு உக்ரைன் அதிபரும் ஆர்வம் காட்டவில்லை. அப்படி யாரும் ஆர்வம் காட்டினால் தனது நெருக்கமான எல்லைப் பகுதியில் அமெரிக்க தலைமையிலான இராணுவக் கூட்டணி செல்வாக்கு செலுத்துவதை ஒருக்காலும் ரஷ்யா விரும்பாது. எனவே அத்தகைய முயற்சி உடனடி போர் ஆபத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை உக்ரைன் அதிபர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும் தாங்கள் இறையாண்மை உள்ள நாடு என்பதையும் அவர்களின் முடிவை யாரும் தடுக்க இயலாது என்பதையும் எடுத்துக்கூறியே வந்தார்கள். கடந்த 2014 ஆம் ஆண்டில் ரஷ்யா கிரீமியா எனும் கிழக்கு உக்ரைன் பகுதியை தனி நாடாக ஆக்குவதாகச் சொல்லி தனது படைகளை அங்கே அனுப்பியது. இன்றும் கிரீமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. அப்பகுதியில் ரஷ்யர்கள் அதிகம். உக்ரைன் வாழ் ரஷ்யர்கள் தங்கள் தாய் நாட்டுடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்கள். அவர்களின் நலனை ரஷ்யா ஒரு போதும் விட்டுக்கொடுக்காது, ஆனால் அது ஒட்டுமொத்த உக்ரைனுக்கும் பொருந்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதுதான் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிடம் பனிக்காலத்தில் உறைந்து போகாத துறைமுகம் ஏதுமில்லை. ஆனால் கருங்கடல் பகுதியிலுள்ள உக்ரைனின் செவஸ்தபோல் துறைமுகம் அக்குறையைப் போக்குகிறது. எனவே ரஷ்யா அங்கு தனது ஆதிக்கம் நிலைக்க வேண்டும் என நினைக்கிறது.

இரண்டாவது ரஷ்யா தனது எல்லைகளை முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் அளவிற்கு விரிவுபடுத்திக்கொள்ளும் விருப்பத்திலும் உள்ளது. அதற்கு தடையாக இருப்பது அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள். ஏனெனில் முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகள் எல்லாமே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமான உறவைப் பேணவே விரும்புகின்றன; அவற்றில் பல நேட்டோ உறுப்பினராகவும் ஆகிவிட்டன. இப்படியே விட்டால் எல்லா நாடுகளும் நேட்டோவில் இணைந்து தங்கள் நாட்டை முற்றுகை இடும்படி ஆகிவிடும் என்று ரஷ்யா நினைப்பதால்தான் சிக்கல் மேலும் அதிகமாகிறது.

ஆயினும் ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் அவசரம் காட்டவில்லை. காரணம், ஐரோப்பாவின் மூன்றில் ஒரு பங்கு எரிசக்தி ஆற்றலை ரஷ்யாதான் வழங்குகிறது. ரஷ்யாவின் எல் என் ஜி வாயு விநியோகம் இல்லையென்றால் முழு ஐரோப்பாவிலும் மக்கள் கிளர்ந்து எழுவார்கள். ஏன்? உள்நாட்டு குழப்பமே ஏற்படலாம். எனவே மாற்று ஏற்பாடுகள் அதுவும் ரஷ்யாவின் எரிசக்தியின் விலைக்கே கிடைக்க ஏற்பாடு செய்யும் வரை போர் ஏற்படுவதை பிரெஞ்சு, ஜெர்மனி உட்பட பல நாடுகள் தள்ளிப்போட விரும்புகின்றன. இதுதான் ரஷ்யாவிற்கு சாதகமாக இருக்கும் ஒரே காரணி. ரஷ்யா உக்ரைன் எல்லையில், கிரீமியாவில் திடீரென ஒரு இலட்சம் துருப்புக்களை குவித்துள்ளதே தற்போதைய நெருக்கடிக்கு காரணம். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே சில தடைகளை ரஷ்யாவிற்கு முந்தைய சக அதிபர்களை விதித்திருந்தாலும் மேலும் அவற்றை தீவிரப்படுத்தவே விரும்புகிறார். ஏன் ரஷ்ய அதிபர் புடின் பயணம் செய்ய தடை விதிக்கவும் தயார் என எச்சரித்துள்ளார். இவற்றுடன் சில ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவின் பணப்பரிமாற்ற தொடர்புகளுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்வாறு நடந்தால் ரஷ்ய-ஐரோப்பிய வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சியடையும். ஏற்கனவே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் மேலும் பாதிப்படையும். எனவே ஐரோப்பிய அரசுகள் இரண்டு பக்கமும் மாறி மாறி பேச்சு வார்த்தைகளை நடத்துகின்றன.

ரஷ்யா பிரச்சினைக்கு தீர்வு காண முன் வைக்கும் சில கோரிக்கைகளில் முக்கியமானது தனது முன்னாள் சோவியத் ஒன்றிய உறுப்பு நாடுகள் தொடர்ந்து நேட்டோவில் இணைவதை அமெரிக்காவும், ஐரோப்பிய அரசுகளும் முற்றிலும் நிறுத்த வேண்டும். அதாவது நேட்டோவின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 1997 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே ரஷ்யாவின் பிரதான கோரிக்கை. தனது எல்லைகளை பாதுகாக்க இவ்வாறு ரஷ்யா கோரிக்கை விடுவது இயல்புதான் என்றாலும் நாளடைவில் இந்த நாடுகளில் உக்ரைனில் செய்தது போல நாட்டைப் பிரிக்கும் அல்லது தனது பொம்மை அரசுகளை அங்கே அமைக்கும் வேலைகளில் ரஷ்யா இறங்காது என்பதற்கு எவ்வித உறுதியையும் ரஷ்யா தராது. அது மட்டுமின்றி தனது அதிகாரத்தையும், செல்வாக்கையும் வேறு வழிகளிலும் ரஷ்யா செயல்படுத்தவே எத்தனிக்கும். குறிப்பாக எரிசக்தி, வர்த்தகம் போன்ற விஷயங்களில் தனது விருப்பங்களையும், நலன்களையும் முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகளின் மீதும் திணிப்பதைச் செய்யும். ஏற்கனவே இது போன்ற நடவடிக்கைகளால் பல முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகளில் உள்நாட்டுப் போரெல்லாம் நடந்துள்ளதை சர்வதேச நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே ரஷ்யா தனது நியாயமான அச்சங்களை போக்கிக்கொள்ள நடைமுறைச் சார்ந்த, அனைவராலும் ஏற்கத்தக்க யோசனைகளை முன் வைத்து ஐரோப்பிய நாடுகளையும், முன்னாள் சோவியத் உறுப்பு நாடுகளையும் அரவணைத்துக் கொண்டு போனால்தான் போர் அபாயங்களைத் தவிர்க்க முடியும். ஒருவேளை அமெரிக்காவோடு மல்லுக்கு நின்று ஜெயித்துக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தால் அது ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் போராக மட்டும் நின்று விடாது. இதுவே இன்றைய உலகை அச்சுறுத்தும் பொருளாக விவாதிக்கப்படுகிறது – கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்படுத்திய தாக்கங்களையும் கடந்து அடுத்த கவலை உலகம் தழுவியதாக ஏற்பட்டுள்ளது என்பதே கசப்பான உண்மை.

ரமேஷ் பாபு