June 1, 2023

இரோம் ஷர்மிளா மேரேஜூக்கு நோட்டீஸ் ஒட்டியாச்சு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலில் நேற்று பதிவு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இரும்புப் பெண்மணி இரோம் ஷர்மிளாவின் திருமணம் பதிவுச் சட்டப்படி ஒரு மாதம் கழித்து நடைபெற உள்ளது.

சமூக உரிமைப் போராளி இரோம் ஷர்மிளா, மணிப்பூர் மாநிலத்தில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை எதிர்த்து 16 ஆண்டுகளாக உண்ணா விரதப் போராட்டம் நடத்தினார். மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர் தலில் தோல்வியடைந்த அவர். சில மாதங்களாக கொடைக்கானலில் தங்கியுள்ளார். அயர்லாந்து நாட்டை சேர்ந்த அவரது காதலர் தேஸ் மாண்ட் ஹட்டின்ஹோவும் உடன் தங்கியுள்ளார்.

கொடைக்கானல் எனக்கு மிகுந்த மன அமைதியைத் தருகிறது. இங்கேயே திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று அவர்களது திருமண விண்ணப்பத்தை பெற்றுக்கொண்ட சார்பதிவாளர், ‘சட்டப்படி உடனடியாக உங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியாது. அறிவிப்பு வெளியிடப்பட்டு, எதிர்ப்பு இல்லாத நிலையில் 30 நாட்கள் கழித்துதான் பதிவு செய்ய முடியும்’ எனத் தெரிவித்தார். இதையடுத்து விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டு 30 நாட்கள் கழித்து வருவதாக கூறி இருவரும் அங்கிருந்து சென்றனர்.

வழியில் நிருபர்களை சந்தித்த போது, “ஷர்மிளா, ”நான் போராட்டக் களத்தில் இருந்து, குடும்ப வாழ்க்கையில் நுழைய இருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் எங்கள் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தைக் கொடைக்கானலில் எளிமையான முறையில் நடத்த இருக்கிறோம். திருமணத்துக்குப் பிறகு கொடைக்கானலில்தான் வசிக்கப்போகிறோம். இங்கு நிலவும் அமைதி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு சராசரி பெண்ணாக வாழ ஆசைப்படுகிறேன். குடும்ப வாழ்க்கையில் நுழைந்தாலும், மீண்டும் போராட்டக் களத்துக்கு வரத் தயங்கமாட்டேன். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் தேவைப்படும்பட்சத்தில் எனது போராட்டத்தைத் தொடர்வேன். காரணம், ஐ லவ் மை பீப்பிள். இனி, துப்பாக்கிக் கலாசாரம் எடுபடாது. அகிம்சை வழியிலான போராட்டங்கள்தான் வெற்றி பெறும்.

எனது போராட்டங்கள் அறவழியிலானதாகத்தான் இருக்கும். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் போராட தார்மீக உரிமையிருக்கிறது. நான் என் மக்களுக்கான போராட்டத்தை எப்போது வேண்டுமானாலும் முன்னெடுப்பேன். வரும் செப்டம்பர் மாதம் புவனேஸ்வரில் நடக்கும் தெற்காசிய இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ள இருக்கிறேன். அதன் பிறகு, சில முக்கிய முடிவுகளை எடுக்க இருக்கிறேன். இப்போது நான் திருமணப் பெண். அந்தப் புது வாழ்க்கையை வாழ்ந்துபார்க்கக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்தார்.