‘இந்த முடிக்கற்றை எனது துன்பங்களை பிரதிபலிக்கிறது’!

கேரளாவில் சமீபத்தில் துவங்கி நடந்து வரும் பன்னாட்டு திரைப்பட விழாவில் ஈரானை சேர்ந்த இயக்குனர் மஹ்னாஸ் முகம்மதி அவர்களுக்கு Spirit of Cinema எனும் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த விருதை அவர் சார்பாக கிரேக்க இயக்குனர் அதினா ரேச்சல் சங்காரி பெற்றுக் கொண்டிருக்கிறார். மஹ்னாஸ் இங்கே இல்லை. காரணம், கட்டாய ஹிஜாப்புக்கு எதிராக அங்கே நடந்து வரும் போராட்டங்களில் மஹ்னாசும் கலந்து கொண்டு ஆதரவு அளித்து வருகிறார் என்பதால் இந்தியா வருவதை ஈரானிய அரசு அனுமதிக்கவில்லை. அவர் வேறு இங்கே வந்து விழாவில் அது பற்றி ஏதாவது பேசி தங்களுக்கு சங்கடம் வேண்டாம் என்று யோசித்திருக்கிறார்கள் போல.
ஆனால் மஹ்னாஸ் வேற லெவல். தன்னால் பயணிக்க முடியாது என்றால் என்ன? ‘இந்த தலைமுடிதானேடா உங்களுக்கு பிரச்சினை!’ என்று தனது கூந்தலின் சிறிய பகுதியை வெட்டி அதை இந்தியாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த கிரேக்க இயக்குனர் அவர் சார்பாக விருதைப் பெறுகையில் மஹ்னாசின் முடிக்கற்றையை பிடித்துக் கொண்டு வாங்கி இருக்கிறார். கூடவே மஹ்னாஸ் எழுதிக் கொடுத்த ஒரு சிறு உரையையும் படித்திருக்கிறார்.
‘இந்த முடிக்கற்றை எனது துன்பங்களை பிரதிபலிக்கிறது. துன்பங்கள் முடிவடையும் நேரம் வந்து விட்டதை குறிக்கிறது. நேற்று ஈரான் அரசு 23 வயது மொஹ்சென் ஷிகாரியை ஹிஜாப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக தூக்கிலிட்டிருக்கிறது. இந்த நேரத்தில் எனது முடிக்கற்றையை அனுப்புவதற்குக் காரணம் உங்கள் அனைவருடைய ஆதரவும் குரலும் எங்களுக்குத் தேவை என்பதினால்தான்,’ என்று பேசி இருக்கிறார். பின்னர் மஹ்னாஸ் வேண்டுகோளுக்கு இணங்க கூடி இருந்தவர்கள் ‘Women, Life, Freedom’ என்ற கோஷத்தை எழுப்பி இருக்கிறார்கள்.
இதற்கு முன்பும் கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட போது அவர் அனுப்பிய கடிதத்தில் ‘நான் ஒரு பெண், நான் ஒரு படைப்பாளி – இந்த தேசத்தில் ஒரு குற்றவாளியாக கருதப்பட இந்த இரண்டு விஷயங்கள் போதுமல்லவா?’ என்று எழுதி இருந்தார். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மஹ்னாஸ். நேரடியாக இருக்க இயலாது எனினும் சிந்தனாரீதியில் இருக்கிறோம். நீங்கள் அனுப்பிய முடியைப் போற்றுகிறோம். ‘எங்கள் தலைமுடிக்கு சமமாகக் கூட உங்கள் சட்டங்களை மதிக்கவில்லை,’ என்று நீங்கள் ஈரானிய அரசைப் பார்த்து சொல்வதாக புரிந்து கொள்கிறோம். விரைவிலேயே உங்கள் துன்பங்கள் தீரும். மதங்களின் மடமைகள் குறித்த புரிதல் சமூகங்களுக்கு வரும். மனிதர்கள் முக்கியமா மதங்கள் முக்கியமா எனும் கேள்விக்கு சமூகங்கள் மனிதர்களைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிப்பார்கள். பெண்கள் வாழ்வு சிறக்கும். விடுதலை பிறக்கும்.