இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்!

இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்!

உலகிலுள்ள பிற வளரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய விவசாயத்தின் இன்றைய நிலை பரவாயில்லை என்ற அற்ப சந்தோஷம் நிறைவுள்ள பேச்சு இல்லை. இந்திய விவசாயம் வழங்கக் கூடிய வாய்ப்புகளை முடிந்தவரை பயன்படுத்தினால் வர்த்தக ரீதியான வளர்ச்சியுடன் மொத்த உற்பத்தி மதிப்பீட்டில் விவசாயத்தின் பங்களிப்பை உயர்த்த முடியும். விவசாய உற்பத்தி மதிப்பு உயர்வதற்குத் தடையாக உள்ள பிரச்னைகள் எவை? அத்தடைகளை உடைத்தெறிய அரசுகள் செய்ய வேண்டியவை எவை? இந்த இரு வினாக்களுக்கும் நாம் பெறக்கூடிய விடைகளில்தான் இந்திய விவசாயத்தின் அடங்கியிருக்கிது.
edit -agri
இந்திய விவசாயம் எதிர்நோக்கிவரும் பிரச்னைகளைப் பட்டியலிட்டால், முதலாவதாக, அசுரத் தனமான நகர்ப்புற வளர்ச்சி. விளைநிலங்கள் மனைக்கட்டுகளாக மாறுவதுடன் நீராதாரங்கள் குப்பைக் கிடங்காகவும், கழிவு நீர்க் குட்டைகளாகவும் மாறிவிட்டன. மனைக்கட்டு வியாபாரம் செய்யும் ரியல் எஸ்டேட் தொழிலில் விதிமுறைகள் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. நீர் நிலைகள் பாதுகாக்கப்பட்டு அங்கு மழைநீர் சேமிக்கப்பட்டு, புதிய குடியிருப்புகளின் குடிநீர்த் தேவையை நிறைவு செய்து கொள்ளலாம். இவ்வாறு நீர் நிலைகள் பாதுகாப்பதின் மூலம் ஆழ்துளைக் கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். அசுத்தமும் குறையும். ஆனால், ஏரிகள் மீதே அடுக்குமாடிகள் கட்டினால் சோகங்கள் தொடரக்கூடிய ஆபத்தும் உள்ளது. மாறிவிட்ட உணவுப் பழக்கங்களை கருத்தில் கொண்டு நுகர்வோர்களின் புதிய தேவைப்படி புதியதோர் உணவுக் கொள்கை தேவை. ஊட்ட உணவுப் பற்றாக்குறையை மனத்தில் கொண்டு இன்று பன்னாட்டு உணவுத் திமிங்கலங்கள் இந்திய உணவுப் பொருளாதாரத்தை வேட்டையாடி வருகின்றன.

வறுமைக் கோட்டில் வாழ்வதாகக் கூறப்படும் கிராமத்துக் கூலிக்காரர்கள் பிரிட்டாணியா பிஸ்கட்டுகளையும் காட்பரீஸ் சாக்லெட்டுகளையும் உண்டு “ஊட்டச்சத்து’ பெறுகிறார்கள். ரேஷன் அரிசியை மாவாக்கி மாட்டுக்கு அடர்தீவனமாக வழங்கிவிட்டு, நல்ல அரிசியை வெளி அங்காடியில் அதிகவிலை கொடுத்து வாங்குகிறார்கள். நகரத்து நடுத்தர வர்க்கம் பாஸ்தாப் பண்பாட்டுக்கு வந்துவிட்டனர். ஹார்லிக்ஸ், காம்ப்ளான், போர்ன்விட்டா, வகைவகையான குளூகோஸ், கார்ன் ஃப்ளேக்ஸ், க்விக்கர் ஓட்ஸ், பலவகையான வறுவல், முறுவல் பாக்கட்டுகள், கோக், பெப்சி என்றெல்லாம் பான வகைகள். இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் பொது வினியோகத்திற்கு நாற்றம் பிடித்த அரிசியையும் ஊத்தை கோதுமையையும் வழங்குவதைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படும் உணவுக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஊட்ட உணவு பற்றிய புதிய சிந்தனை தேவை. விவசாயமும் உணவு உற்பத்தியும் அனைத்துலக வர்த்தகத்துடன் பிணைக்கப்பட்டுவிட்ட நிலையில் உணவு ஏற்றுமதியில் அதிக கவனமும், இறக்குமதி உணவைக் குறைப்பதில் தீவிர கவனமும் வேண்டும்.

உணவுப் பொருள், காய்கறி, பழங்கள் கெடாதவாறு பாதுகாப்பதுதான் உணவுப் பாதுகாப்பு. “பசியை ஒழிப்போம்’, என்ற பெயரில் வெற்று கோஷம் உணவுப் பாதுகாப்பு அல்ல. ஏழை விவசாயகளின் தேவை எளிய வட்டிக் கடன் வசதி, உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்புகள், வருமானத்தில் ஏற்றத்தாழ்வு இல்லாமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். விவசாயத் தொழில்நுட்ப நெறிகளில் நெருக்கமான தீவிர சாகுபடி, வரம்பு மீறிய ரசாயன உரப் பயன்பாடு, சிக்கனமில்லாத பாசன நீர்ச் செலவு ஆகியவற்றால் உணவு உற்பத்தி உயர்ந்து வந்துள்ளது. இதனால் பெரிய அணைக்கட்டுகள் உள்ள ஆயக்கட்டுகள் மட்டும் வளமைத் தீவுகளாகக் காட்சி தருகின்றன. வசதி படைத்த விவசாயிகள் மட்டும் உணவு உபரிகளை விற்று உணவுப் பண வீக்கத்தால் ஏற்படும் விலை உயர்வின் பலனை அனுபவிக்கின்றனர். சிறு – குறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலிகள் உரிய வருமானம் பெறவில்லை. இத்தகைய சாகுபடித் தொழில்நுட்பம், நீடித்த வேளாண்மை நெறிகளுக்கும் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது அல்ல.

மண் வளத்தைக் காப்பாற்றக் கூடிய இயற்கை விவசாய நிபுணத்துவமும் இணைந்து செயல்பட வேண்டும். சரியானபடி வெள்ள நீர்க்கட்டுப்பாடு இல்லாமல் ஒரு பக்கம் நீர் தேங்குவதால் உவர் – களர்ப் பிரச்னைகளும் மண் அரிப்பும் நிகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட வளமிழந்த மண்ணுக்கு வாழ்வைத்தரும் மரநடவுடன் இணைந்த மண் புழு வளர்ப்பு, மரங்களுடன் இணைந்த பயிர்சாகுபடி (அஞ்ழ்ர் – ஊர்ழ்ங்ள்ற்ழ்ஹ்) ஆகியவற்றை உகந்தவாறு பின்பற்றும் வரைவுத் திட்டத்தை உருவாக்குவது அவசியம். ஒரு பக்கம் கூடுதல் நீரால் பிரச்னை, மறுபக்கம் வறட்சியில் பிரச்னை. வறட்சியால் வளமைதரும் சிறுதானிய சாகுபடி உரிய கவனத்தைப் பெற்றாக வேண்டும்.

விவசாய நிலங்களில் மழைநீர் சேமிப்பு செயலற்றுப் போனதால் சாகுபடிக்குரிய நிலங்கள் தரிசாக உள்ளன. தவறான வழியில் வனப்பகுதி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வன நிலப்பரப்பும் குறைந்துவிட்டது. இதனால் உஷ்ணம் அதிகமாகி மழைக்கவர்ச்சி இல்லாமல் வறட்சியால் தள்ளாடும் மாநிலமாகத் தமிழ்நாடு மாறிவிட்டது. பிற மாநிலங்களிலும் ஏறத்தாழ இதேநிலைதான். வறண்ட பகுதிகளான தக்காண பீடபூமியில் அடங்கும் மாநிலங்களில் மானாவாரி சாகுபடிக் குறைந்துவிட்டது.

இதுபோன்ற பல காரணங்களினால் விவசாய உற்பத்தித் திறனை சராசரி அளவுக்கு மேல் உயர்த்த முடியவில்லை. தக்காணத்தில் உள்ள விதர்பா கரிசல் காட்டு விவசாயிகள் கடனாளியாகித் தற்கொலை செய்து கொள்கின்றனர். சிலர் விவசாயத்தை உதறிவிட்டு மாநகரங்களுக்குச் சென்று வேறு பிழைப்பைத் தேடுகின்றனர். பொதுவாகப் பருத்தி சாகுபடியாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம், பருத்தியில் ரசாயன விவசாயம் செய்யும்போது மிகவும் வேகமாக மண்வளம் இழக்கப்படுவதால் மாற்றுப் பயிராக நிலக்கடலை, உளுந்து, பயறு போன்ற பருப்பு வகைப் பயிர்களை சாகுபடி செய்வது அவசியம். பருத்தியைவிட நிலக்கடலைக்கு நல்ல ஏற்றுமதிச் சந்தை உள்ளது. இந்தியா சமையல் எண்ணெய்யில் பற்றாக்குறை நாடு. பாமாயில் எனப்படும் செம்பனை எண்ணெய் இறக்குமதியையும் தவிர்க்கலாம். இந்திய விவசாயத்தில் மகசூலை உயர்த்த இரண்டு துறைகளை நாம் உகந்தவாறு பயன்படுத்தலாம். முதலாவதாக பயோடெக்னாலஜி என்ற உயிர்ப்பொருள் தொழில்நுட்பம். இரண்டாவதாக மைக்ரோ பயாலஜி என்ற நுண்ணுயிரித் தொழில்நுட்பம். உயிர்ப்பொருள் தொழில்நுட்பத்தில் சர்ச்சைக்குரிய பி.ட்டி விதை நுட்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு தேர்வு விதைகள், வீரிய ரகம், ஒட்டு, வீரிய ரகம், ஒட்டு, வீரிய ஒட்டு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தலாம். நுண்ணுயிரியல் என்பது பாக்டீரியா, வைரஸ், காளான், பாசி தொடர்பான உயிரிகள் பற்றியது. மண்ணில் அவை கோடிக்கணக்கில் வாழவேண்டும். வளமான மண்ணின் அடையாளம் நுண்ணுயிரிகளின் பெருக்கமே.

நுண்ணுயிரியல் பண்பாடு மருத்துவத் துறையில் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுகிறது. மருத்துவத்தில் உள்ள அளவுக்கு வேளாண்மையில் நுண்ணுயிரியல் பண்பாடுகள் பரவவில்லை. மண்ணிலிருந்து கண்டு பிடிக்க வேண்டிய நுண்ணுயிரிகள் பல்லாயிரம் வகைகள் உண்டெனினும் நாம் சிலவற்றை மட்டுமே அடையாளப்படுத்தியுள்ளோம்.

அவ்வாறு அடையாளமாயுள்ள நுண்ணுயிரிகளையும்கூட விவசாயிகள் பயன்படுத்தவில்லை. உதாரணமாக அசோஸ்பைரிசம், அட்டோஃபாகடர், ரைசோபியம், பாஸ்போ பாக்டீரியா, வேம், டிரைக்கோ டெர்மா விருடி, சூடோமோனஸ், பாசில்லஸ் சப்மலீஸ், புவேரியா பஸ்ஸினியா, வெர்ட்டி சில்லியம் லகானி, மெட்ரி சிடியம் அளிசோப்னி, பேசிலோமைசிஸ் லைலாசினல், ஈம் என்று சொல்லப்படும் திறமி நுண்ணுயிர்களின் கலவை.

மேற்கூறிய பட்டியலில் உள்ளவை கண்டுபிடிக்கப்பட்டவை. இனி கண்டுபிடிக்க வேண்டியவை நிறைய உண்டெனினும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட உயிரி உரங்களைக்கூட விவசாயத்தில் முழுமையாகப் பயன்படுத்தவில்லை. அண்மையில் வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ள ஒரு செய்தி நம்மைத் துணுக்குற வைக்கிறது. இந்தியாவில் ரசாயன உரங்களை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளதாம். இதனால் தமிழ்நாடு மண்வளம், சுற்றுச் சூழல் பாதிப்புக்கு மேல் சாகுபடிச் செலவும் அதிகமாகும்.

ரசாயன உரத்தின் மாற்றாக மக்கிய தொழு உரம், ஆட்டுப்புழுக்கை, கோழி உரம், மனிதக் கழிவின் உயிரித்திண்மம் ஆகியவற்றுடன் பக்குவமான நிலையில் மேற்கூறிய உயிர்கள் சிலவற்றைக் கலந்து பதனப்படுத்திப் பயன்படுத்தினால் பயிருக்கு வேண்டிய முழுமையான ஊட்டத்தைப் பெறலாம். ரசாயன உரம் தரும் கூடுதல் மகசூலை விடவும் அதிகமாகவே உயிரி உரப்பண்பாட்டில் பெற முடியும்.

இந்திய வேளாண்மையில் சரியான செய்நேர்த்தி அவசியம். மரப்பயிர்களுக்கும் தீவனப்பயிர்களுக்கும் அதிகம் நைட்ரஜன் தழைச்சத்து வேண்டும். பழம் – காய்கறிகளுக்கு அதிகம் பாஸ்பரஸ் தேவை. சில பயிர்கள் நீரில்லாமல் வாடும்; சில பயிர்கள் அதிக நீரால் வாடும். சரியான முறையில் அளவான நீர்ப்பயன்பாடு நல்ல மகசூல் தரும்.

நகர்ப்புறச்சார்புள்ள நிலங்களில் பசுமையகம் – ஹை டெக் பசுமைக் கூடார முறையைப் பயன்படுத்தலாம். இன்று விவசாயத்தில் ஆள்பற்றாக்குறை தலையாய பிரச்னை. அதை இயன்றவரைக் களையவேண்டும். உற்பத்தி உறவுகளில் பொதுத்துறை புறக்கணிக்கப்பட்டுத் தனியார் துறை தூக்கி நிறுத்தப்படும்போது, 100 நாள் வேலைத்திட்டடத்தை உற்பத்தித் தன்மையுள்ளதாக மாற்ற விவசாயகளிடம் ஒப்படைக்கலாமே. விவசாயகளுக்கு ஆள்பற்றாக்குறை ஏற்படும்போது அரசு 100 ரூபாய் கொடுத்தால் மேலும் 100 ரூபாய் விவசாயிகளின் பங்காக ஏற்றுத் தோட்ட வேலைக்கு ஆள் வழங்கலாமே.

இறுதியாக ஒன்று. விவசாயத்துறையோ, விவசாயப் பல்கலைக்கழகமோ விவசாயிகளுக்கு சரியானபடி உதவ முன்வர வேண்டும். விவசாயம் கிராமங்களில் நிகழ்கிறது. விவசாய அலுவலகங்களோ நகரங்களில் உள்ளன. விவசாய அலுவலர்கள் கோப்புகளில் சயனம் செய்கின்றனர். அரசுக்கு பதில் சொல்வது அவர்கள் கடமை. விவசாயிகளுக்கு யார் பதில் சொல்வார்? விவசாய நிபுணத்துவம் குளு குளு அறைகளில் சிறைவாசம் அனுபவிக்கிறது. அந்த நிபுணத்துவம் வயல் வாசத்திற்கும் வனவாசத்திற்கும் வருமானால் இந்திய விவசாயம் எதிர்காலத்தில் ஜெயிப்பது நிச்சயம்!

ஆர்.எஸ். நாராயணன்

error: Content is protected !!