இந்திய இளைஞருக்கு வாட்ஸ் அப் வாயிலாக ​ஐஎஸ் இயக்கத்தில் இணையுமாறு மிரட்டல்!

இந்திய இளைஞருக்கு வாட்ஸ் அப் வாயிலாக ​ஐஎஸ் இயக்கத்தில் இணையுமாறு மிரட்டல்!

மத்திய அரசின் பலத்த கண்காணிப்பையும் மீறி அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்கள் அமைப்புக்காக வேலை செய்யுமாறும், அதற்காக மாதம் 3.5 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும், வாட்ஸ் அப் மூலம் ஐஎஸ் இயக்கத்தினர் வலைவீசி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் மும்பையில் படித்துவிட்டு அங்கேயே பணியாற்றிவருகிறார். கடந்த வெள்ளிகிழமையன்று மதியவேளையில் அந்த இளைஞர், தனது மொபைல் போனில் ஆன்லைனில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் வாட்ஸ் அப் குழு ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த வாட்ஸ் அப் குழுவில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் முகப்பு படம் (Display Picture) இருந்துள்ளதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாக அந்த குழுவில் இருந்து அவர் தானாகவே நீங்கியுள்ளார்.

இருப்பினும் கனடாவைச் சேர்ந்த அந்தக் குழுவின் அட்மின் அந்த இளைஞரை மீண்டும் அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைத்ததோடு, ஐஎஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றுமாறும், இந்திய உளவுத்துறை அமைப்புக்கள் பற்றி தகவல்கள் பறிமாற வேண்டும் எனவும் அதற்கு மாதம் 5,000 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 3.5 லட்ச ரூபாய்) சம்பளமாக தரப்படும் எனவும் ஆங்கிலத்தில் மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அந்த குழுவில் இருந்து அந்த இளைஞர் தானாகவே விலகினாலும் அவரை மீண்டும் மீண்டும் இணைத்து இது போன்று மிரட்டல் விடுக்கப்பட்டதால் தனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்ததோடு இது குறித்து தனது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் இது குறித்து நகர காவல் கண்காணிப்பாளரிடம் அந்த இளைஞர் குடும்பத்துடன் வந்து புகார் அளித்துள்ளார். தற்போது இது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரனையை தொடங்கியுள்ளனர். இது போன்று பிற இளைஞர்கள் யாருக்கேனும் வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரை இதே போன்று ஐஎஸ் இயக்கத்தினர் தங்கள் அமைப்பில் இணைத்துள்ளதாக தகவல் வெளியானது. கடந்த செப்டம்பர் 2015ல் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக இந்தியாவில் இருந்து புறப்பட முயன்ற கேரள இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!