இந்தியாவில் இரண்டாவது அலை வருமா??? அறிவியல் பூர்வமான அனுமானங்கள்!

இந்தியாவில் இரண்டாவது அலை வருமா??? அறிவியல் பூர்வமான அனுமானங்கள்!

கொரோனா பெருந்தொற்று கடந்த ஆண்டு 2020 ஜனவரி மாதம் சீனாவில் இருந்து பரவத் தொடங்கி உலகம் முழுவதையும் ஆட்கொண்டு நமது அன்றாட வாழ்க்கையை ஸ்தம்பிக்க வைத்தது. தற்போது நாம் தொற்றின் தாக்கத்தில் இருந்து விடுபட்டிருக்கிறோம். இந்நிலையில் நம்மிடையே இரண்டாம் அலையாக கொரோனா தொற்றுப்பரவும் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா???

இதுவே பலரது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. நிச்சயமான முடிவாக இப்படித்தான் எதிர்காலம் இருக்கும் என்று யாராலும் கணிக்க இயலாது. ஆருடம் வழங்குவது நமது பணியும் அன்று. இருப்பினும் உலகின் பல்வேறு நாடுகளில் நடக்கும் விசயங்களை நடந்தேறிய விசயங்களை வைத்து புள்ளியியல் விபரங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால் நம்மால் சில அனுமானங்களைக் கட்டமைக்க முடியும்.

ஒரு சைக்கோ பாத் சீரியல் கில்லர் தான் செய்யும் கொலைகளில் ஒரே மாதிரியான வழிமுறையைப் பின்பற்றுவான். அவன் அவ்வாறு செய்வது நாளடைவில் அவன் பிடிபட வழிவகுக்கும் என்பதை அவன் அறிய மாட்டான். புத்திப்பிறழ்வு அடைந்த நிலையிலும் ஒரே மாதிரியான ஆட்களை ஒரே மாதிரியான ஆயுதங்கள் கொண்டு கொல்வான் . இதை PATTERN என்போம். அதே போன்றதொரு PATTERNஐ கொரோனா பெருந் தொற்றும் கொண்டிருக்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது..

இந்த ஆய்வில் நான் இந்தியா உள்ளிட்ட கொரோனா தொற்று எண்ணிக்கையில் உலகின் முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகளை எடுத்துக்கொண்டேன். அந்த நாடுகளில் முதல் கொரோனா அலை ஏற்படும் போது ஒரு நாளில் மிக அதிகமான மரணங்கள் எப்போது நடந்தன என்பதையும் இரண்டாவது அலையில் மிக அதிகமான மரணங்கள் எந்த நாளில் இருந்து தொடங்கின என்பதையும் குறித்துக் கொண்டு அதற்கு இடைப்பட்ட மாதங்களை முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையில் உள்ள இடைவெளியாக கணக்கில் எடுத்துக் கொண்டேன்.

இதோ எனது ஆய்வு முடிவு

1️⃣அமெரிக்க ஒன்றியம்

முதல் அலை இங்கு கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் 2000 மரணங்கள் நடந்தன. தற்போது ஜனவரி மாதம் 2021இல் ஒரு நாளைக்கு 4000 மரணங்கள் நடக்கின்றன இடைப்பட்ட காலம் – 8 மாதங்கள்

2️⃣ பிரிட்டன் ஒன்றிய முடியரசு

முதல் அலை -ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு 1000 மரணங்கள் நடந்து வந்தன. ஜனவரி 2021இல் மீண்டும் ஒரு நாளைக்கு 1000 மரணங்கள் மேல் நடந்து வருகின்றன- இடைவெளி – 8 மாதங்கள் -இடைப்பட்ட ஜூலை, ஆகஸ்ட் , செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் அடுத்த அலைக்கான எந்த அறிகுறியும் தோன்றியிருக்கவில்லை

3️⃣ ரஷ்யா

கடந்த மே 2020 மாதம் முதல் அலையில் ஒரு நாளைக்கு 250மரணங்கள் மேல் பதிவாகின. தற்போது ஜனவரி 2021 இரண்டாம் அலையில் ஒரு நாளைக்கு 500+மரணங்கள் நடந்து வருகின்றன. ஜூலை 2020 முதல் டிசம்பர் 2020 வரை தாக்கம் மிக குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது

4️⃣பிரேசில் ( இந்தியாவுடன் நிகர் சமமாக ஒப்பிடப்படும் நாடு)

இங்கு கடந்த மே 2020 ஒரு நாளைக்கு 1500 மரணங்கள் நடந்து வந்தன. ஜூன் முதல் டிசம்பர் வரை – 7 மாதங்கள் எந்த பெரிய அலையும் வீசவில்லை தற்போது ஜனவரி 2021 ஒரு நாளைக்கு மீண்டும் 1500 மரணங்கள் நிகழத்தொடங்கி இருக்கின்றன.

5️⃣ பிரான்சு குடியரசு

முதல் அலையில் கடந்த மே 2020 ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து வந்தன .ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் , நவம்பர் ஆகிய மாதங்களில் மரணங்கள் வெகுவாக குறைந்தன. ஆனால் தற்போது டிசம்பர் இறுதி முதல் எட்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழத்தொடங்கியிருக்கின்றன.

6️⃣ ஸ்பெயின்

முதல் அலை ஏப்ரல் 2020 மாதத்தில் வீசிய போது ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து வந்தன. பிறகு எட்டு மாதங்கள் ஒரு நாளைக்கு ஒரு இலக்கத்தில் மரணங்கள் நடந்து வந்தன. தற்போது ஜனவரி2021 இல் ஒரு நாளைக்கு 500 மரணங்களுக்கு மேல் நிகழ்ந்து வருகின்றன.

7️⃣ இத்தாலி

முதல் அலை ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்களுக்கு மேல் தொட்டது. ஏழு மாதங்கள் பெரிய தாக்கமின்றி அமைதி நிலவியது அதிலும் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் ஆகிய மாதங்களில் மரணங்கள் வெகுவாக குறைந்தன. ஆனால் டிசம்பர் 2020 மீண்டும் ஒரு நாளைக்கு மரணங்கள் ஆயிரத்தை தொட்டு நிற்கின்றன.

8️⃣ துருக்கி

ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு நூறு மரணங்கள் நிகழ்ந்து வந்ததே முதல் அலையில் அதிகபட்சம் அடுத்த எட்டு மாதங்கள் அமைதி தற்போது ஜனவரி 2021 ஒருநாளைக்கு 250 க்கும் மேல் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன

9️⃣ ஜெர்மனி

முதல் அலை ஏப்ரல் 2020 மாதத்தில் ஒரு நாளைக்கு 250 மரணங்கள் நடந்ததே அதிகபட்சமாக இருந்தது. ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்களில் மரணங்கள் மிக மிக குறைந்தன ஆனால் ஜனவரி 2021இல் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.

🔟 இந்தியா

இந்தியாவில் முதல் அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது செப்டம்பர் மாதம் 2020 இல் ஒரு நாளைக்கு ஆயிரம் மரணங்களுக்கு மேல் பதிவாகின. அதற்குப்பிறகு ஏனைய நாடுகளில் மரணங்கள் குறைந்திருப்பது போலவே குறைந்து தற்போது ஜனவரி மாதம் மிகவும் குறைவான அளவில் மரணங்கள் பதிவாகின்றன.

மேற்கண்ட ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று கடைபிடித்த அதே PATTERNஐத் தொடருமானால் தொற்று மரணங்கள் உச்சத்தில் இருந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து எட்டு மாதங்கள் என்று வைத்தால் ஏப்ரல் கடைசி மே மாதம் ஜூன் மாதங்களில் மீண்டும் தொற்றினால் ஏற்படும் மரணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதை புள்ளியியல் ரீதியாக விளக்கியுள்ளேன்.

ஒருவேளை வெயில் காலம் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தினால் -2020 வருடம் எப்படி குளிர்காலங்களில் முதல் அலை அடித்தததோ அதைப்போன்று 2021இலும் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்கள் வரை கூட இரண்டாம் அலை தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளது.

நமது நாடு குறித்து மேற்சொன்னவை அனுமானங்களே. இதை PROJECTIONS என்பார்கள். இந்த அனுமானங்கள் பொய்யாகிப்போகட்டும் என்றே நானும் விரும்புகிறேன்

இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு பெரிய அளவில் இருக்கும் என்றே கருதுகிறேன்.

அடுத்த ஆறு மாதத்துக்குள் முப்பது கோடி மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் சுகாதாரத்துறையின் முனைப்பும் எனது இந்தக் கணிப்போடு ஒத்துப்போகின்றது.

ஆகவே
மக்களே சொந்தங்களே
கோவிட் நோய் குறித்த அலட்சியம் வேண்டாம்
✅ தொடர்ந்து வெளியிடங்களில் முகக்கவசம் அணியுங்கள்
✅அத்தியாவசியத் தேவையின்றி முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பது சிறந்தது
✅ தொற்று அறிகுறிகள் ஏற்பட்டால் உடனே கோவிட் பரிசோதனை செய்து கொள்ளவும்
✅ தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்
✅ அவசியமற்ற பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்
✅ முன்களப்பணியாளர்கள்/ முதியோர்கள் தடுப்பூசி மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்வது நல்லது.
நம்மையும் காத்து நம்மைச் சார்ந்தோரையும் காப்பது நமது கடமை.
இரண்டாம் அலை குறித்த இந்த எச்சரிக்கை மணி உள்ளுக்குள் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
அலட்சியம் ஆபத்தானது
சிறு அலட்சியம் ; பெரிய பாதிப்பை உண்டாக்கிவிடக்கூடும்

இந்த ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்கு தகவல்கள் தந்து உதவிய கொரோனா வேர்ல்டோமீட்டர் இணையதளத்துக்கு
நன்றி

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

Related Posts

error: Content is protected !!