இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார்!

இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞரானார்!

தமிழகத்தை சேர்ந்த திருநங்கை சத்யஸ்ரீ சர்மிளா (36) தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சிலில் இன்று வழக்கறிஞராக தன்னை பதிவு செய்துகொண்டார். இதன் மூலம் சத்யஸ்ரீ இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ளார்.

பரமக்குடியில் பிறந்த சத்யஸ்ரீ சர்மிளா பள்ளி, கல்லூரி படிப்புக்கு பின் 2004 -2007-ம் ஆண்டு வரை சேலம் அரசு கல்லூரியில் சட்டப் படிப்பு படித்தார்.
பள்ளியில் படித்து கொண்டிருந்தபோது முதன் முதலாக தன் உடலில் பெண்மையை உணர்ந்த சத்யஸ்ரீ கல்லூரி காலத்தில் தான் ஒரு திருநங்கை என்பதை அறிந்தார். அதன் பின் மற்றவர்களின் வெறுப்பை பொருட்படுத்தாமல் திருநங்கையாக வாழ முடிவெடுத்த சத்யஸ்ரீ சர்மிளா குடும்பத்தை விட்டு வெளியேறினார்.

செங்கல்பட்டில் வசிக்கும் சர்மிளா என்ற திருநங்கையை தனது தாயாக ஏற்ற சத்யஸ்ரீ அவருடன் வசித்து வந்தார்.

வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற கனவு கண்ட சத்யஸ்ரீ பல கஷ்டங்களுக்கு மத்தியில் 2007ம் ஆண்டு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார். எனினும், திருநங்கைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வரை வழக்கறிஞராக பதிவு செய்யமாட்டேன் என முடிவெடுத்த சத்யஸ்ரீ 11 ஆண்டுகளாக பார்கவுன்சிலில் பதிவு செய்யாமல் இருந்தார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. மேலும் அரசு பணிகளில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன் பின் திருநங்கைகளின் வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட துவங்கின. அரசின் முக்கிய துறைகளில் திருநங்கைகள் தற்போது கால்பதித்து வருகிறார்கள்.

உதாரணமாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி இந்தியாவிலேயே முதல் காவல் உதவி ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.

பரமக்குடியை சேர்ந்த சத்யஸ்ரீ சர்மிளா இந்தியாவின் முதல் வழக்கறிஞராக இன்று பொறுப்பேற்றார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பொறுப்பேற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக என் திருநங்கை அம்மா ஷர்மிளா, எனது சகோதரிகள், திருநங்கைகளின் நலனுக்காக செயல்படும் பல அமைப்புகள் என பலரும் எனக்கு உதவியுள்ளனர்’’

‘‘பல கஷ்டங்களை கடந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு ஆதரவு அளித்த, உதவி செய்த அனைவருக்கும் நன்றி’’

‘‘இன்று நீதித்துறையில் நான் சேர்த்துள்ளேன். இதேபோல் அனைத்துத் துறையிலும் திருநங்கைகள் சாதிக்க வேண்டும். திருநங்கை ஒருவர் வழக்கறிஞராக பொறுப்பேற்றது பல திருநங்கைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். அவர்கள் தைரியமாக வழக்குகள் பதிய முன்வருவார்கள். அதேபோல பல திருநங்கைகள் சட்டம் படிக்கவும் முன்வருவார்கள்” என்றார் சத்யஸ்ரீ சர்மிளா.

Related Posts

error: Content is protected !!