June 7, 2023

இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.!

பெருவெளியின் பிரம்மாண்டத்தோடு ஒப்பிடுகையில் மனிதன் மிகச்சிறிய வன்தான், ஆனால் அவன்தான் பேரண்டத்தை எதிரொலிக்கிற கண்ணாடி, அழகுற அதனை சித்தரிக்கும் கவிஞன், மனிதன் இல்லையென்றால் ஏது பேரண்டமும், படைப்பும், கடவுளும்? நான் பற்றுதல்களைத் தாண்டி உயிர்களை நேசிக்கிறேன், ஊர்பற்று, சாதிப்பற்று, மதப்பற்று என்பதைப் போலவே நாட்டுப்பற்று என்பதையும் ஒரு விதமான கற்பிதங்களின் கூட்டியக்கமாகவே பார்க்கிறேன். மனிதன் உலகின் குடிமகன், வரலாற்றின் வழியாக உலகின் இயக்கத்தை அடையாளம் காட்டுகிற சாத்தியம் மனிதனிடத்தில் தான் இருக்கிறது.

தனதுயிர் இயக்கத்துக்கான தேவைகளைத் தாண்டி மனிதன் தன் வழியே தொடர்கிற குழந்தைகளை நேசிக்கத் துவங்கி குடும்பம் என்கிற அமைப்புக்குள் வந்தது தான் நாகரீகத்தின் முதல் பயணம், பிறகு குழுக்களாக இணைந்திருந்து சமூக அமைப்பை உருவாக்கினான்.

சமூக அமைப்பிலிருந்து நதிக்கரை நாகரீகங்களால் உலகை ஒப்பணை செய்தான், நாடுகளை உருவாக்கினான், படைகளை உருவாக்கி தனது நிலப்பரப்பின் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். ஒழுங்குகளை உருவாக்கினான். ஒழுங்குகளை சிதைத்து நாடு பிடிப்பவனும் அவனாகவே இருந்தான்.

நாடுகள் உருவான வரலாற்றின் அடி ஆழத்திலிருந்து தான் நாட்டுப்பற்று என்கிற புலப்படாத வெகு நுட்பமான உணர்வு பெருக்கெடுக்கிறது. நாடுகள் நிலப்பரப்பால் உருவாக்கப்படுவதில்லை.

வரலாறு முழுக்க நிறைந்திருக்கும் தனித்தனி மனிதர்களின் கதைகளால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கொலம்பஸ் 14 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்கிற வரலாற்றின் சொற்களை நாம் இப்படி மாற்றிக் கொள்ளலாம். பிற மேற்கு ஐரோப்பியர்களுக்கு அவர் அமெரிக்காவை அறிமுகம் செய்தார் அல்லது கடல் வழியாக அமெரிக்காவை அடைவதற்கான வழியைக் கண்டுபிடித்தார்.

கொலம்பஸ் அங்கு சென்றடைவதற்கு முன்னதாக 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே Pre-Clovis என்றழைக்கப்படுகிற பூர்வீகக் குடிகள் அமெரிக்காவை அடைந்து விட்டிருந்தார்கள், பிறகு Clovis எனப்படுகிற இன்றைய அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்களின் மூதாதையர் அங்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள். அம்மக்கள் அப்போது அமெரிக்காவை அறிந்திருக்க மாட்டார்கள்.

அமெரிக்கா தார்மீகமாக உருவாகி 500 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும். ஆனால் அமெரிக்கர்களின் மனத்திரையில் Clovis, Pre-Clovis மக்கள் இல்லாமல் அந்த நாடு இருக்காது.

கனடாவின் நியூஃபௌண்ட்லேண்ட் (Newfoundland) தீவில் வைக்கிங்குகள் (Vikings) கொலம்பஸ் அங்கு செல்வதற்கு முன்பு 500 ஆண்டுகளுக்கு முன்பாகவே வந்து சேர்ந்து விட்டார்கள், அந்தத் தீவில் இன்னமும் 8 மரத்தாலான வைக்கிங்குகளின் 8 வீடுகள் புற்களால் மேவப்பட்டு யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கிறது.

சைபீரியாவில் பெரிங் லேண்ட் பிரிட்ஜ் (Bering Land Bridge) எனப்படும் கண்டங்களை இணைத்த பனிநிலப்பாதை வழியாக 15000 ஆண்டுகளுக்கு முன்பாக ஆசியாவிலிருந்து இன்றைய அமெரிக்காவின் அலாஸ்காவிற்குள் நுழைந்தவர்கள் தான் அமெரிக்கப் பூர்வீகக் குடிமக்களான Pre-Clovis என்பது நவீன அமெரிக்க வரலாறு.

இப்போது அமெரிக்கர்களின் மூதாதையர்கள் ஆசியர்களா? என்ற ஒரு கேள்வி வரும், அதற்கான விடை இருக்கலாம் என்பதுதான். இந்த சூட்சுமமான விடைதான் நாட்டுப்பற்றைக் கேள்வி கேட்கிற குழப்பம்.

இந்தியாவுக்கு அப்படி ஒரு நிலை இல்லை, நமக்கு மெசபடோமிய நாகரீகத்துக்கும், சுமேரிய நாகரீகத்துக்கும் இணையான நிலம் சார்ந்த வரலாற்றுத் தரவுகள் உண்டு, ஆனால், இந்தியா என்கிற நாடு குறித்த மகத்தான உணர்வுக் குவியல் தோன்றியது வெறும் 150 ஆண்டுகளுக்கு முன்புதான், அதற்கு முன்னதாக எனது பூட்டனார் பாண்டிய நாட்டுக் குடிமகன், தஞ்சையோடு போர் முரசு கொட்டியவர். அவர் தனது நாட்டின் மீது அளப்பரிய பற்றுதல் கொண்டவராக இருந்திருப்பார்.

ஜெய்ப்பூரின் இராஜபுத்திரர்களும் ராணேக்களும் தங்கள் கோட்டைகளில் நாட்டுப்பற்றை வளர்த்தார்கள், அதற்கு முன்னதாக மௌரியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை ஊட்டியிருந்தார்கள், சமஸ்தானங்கள் நாடுகளாக இருந்து போர் புரிந்தன. உழைக்கும் மக்களுக்கு எப்போதும் போல நாடில்லை, வீடுமில்லை. கிழக்கிந்திய நிறுவனம் வளங்களைச் சுரண்டி பிரிட்டனின் கொடியைக் கட்டி அதன் மேல் நின்று கொண்டு ஆட்சி புரியத் துவங்கியபோது தான் இந்தியா உருவானது.

நுட்பமான ஒரு அகண்ட இந்தியாவை அப்போதுதான் நாம் உருவாக்கிக் கொண்டோம், இதே இந்தியர்கள் பரம எதிரிகளாக அடிப்படை இந்துத்துவவாதிகளால் சித்தரிக்கப்படும் பாகிஸ்தானை இதே காலத்தில் தான் மனிதர்களாகிய நாம் உருவாக்கினோம். வங்க தேசத்திலிருந்து பங்களாதேஷை வார்த்தெடுத்தோம்.

நாளை வரலாறு புதிய நாடுகளையும், புதிய கற்பிதங்களையும் மனிதர்களாகிய நமக்கு அறிமுகம் செய்யலாம், அப்போது நாம் வேறொரு நாட்டின் மீது பற்றுக் கொண்டவர்களாக மாறலாம். இந்தியாவை மறந்து போகலாம்.

நாட்டுப்பற்று மிகச்சிறிய குழுக்களாக சிதறிக் கிடந்த மனிதர்களை நவீன உலகில் பரந்துபட்ட நிலப்பரப்புகளின் மீது விரவிக் கிடக்கும் பெரிய சமூகக் குழுவாக உணர வைக்கிற உணர்வு. வரலாற்றுத் தொடர்ச்சி, நாகரீகத்தின் படிநிலைகளில் உருவான மிகப்பெரிய மாற்றம் இன்றைய நாடுகளின் கட்டமைப்பு.

மனிதனின் அடுத்த நகர்வு புவிப்பந்து முழுவதும் இருக்கிற மானுட சமூகத்தைத் தனது ஒற்றை அடையாளமாகப் பார்க்கிற வளர்ச்சி, எல்லைகளைக் கடந்த மானுட சமூகமாக மாற்றமடைகிற படிநிலை தான் மனிதர்களின் வரலாற்றுப் பயணத்தில் அடுத்த இலக்கு.

சிதறிக் கிடக்கிற பேரண்டத்தின் உயிர்ப்பொருள் மானுடன்‌ மட்டும்தான், மானுடன் தான் இந்தப் பேரண்டத்தின் அடையாளம், ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்கிற, பிறரின் வலியைத் தனதாக உணர்ந்து கொள்கிற இலக்கை நோக்கித்தான் நாம் ஓடியாக வேண்டும்.

ஒன்றை ஒன்று பற்றிக் கொள்கிற, ஒன்றில் ஒன்று கலந்து எல்லாமுமாகவும், ஏதுமற்றதாகவும் இருக்கிற பெருவெடிப்பிலிருந்து சிதறித் தனித்தனியே உயிர் வாழ்க்கையை வாழ நேர்ந்தாலும் இறுதியில் பேரண்ட அறிவியலின் கோட்பாடுகளின்படி நாம் இணைப்பை நோக்கியே நகர்ந்தாக வேண்டும்.

இன்றைய பொழுதில் நான் இந்தியன் என்கிற உணர்வு வயப்படுவதற்கான எல்லா வரலாற்று உணர்வுகளும் எனக்குள் இருக்கிறது, நான் பாகிஸ்தானையும் அங்கிருக்கும் குழந்தைகளையும் நேசிக்கிற இந்தியன், நான் மத அடையாளங்களற்ற இந்தியன், நான் சாதி உள்ளீடுகள் இல்லாத இந்தியன்.

அப்படியான உணர்வுகளை வளர்க்கிற அல்லது குறைந்தபட்சம் சிந்திக்கிற இந்தியர்கள் அனைவருக்கும் உளமார்ந்த “விடுதலைத் திருநாள் நல்வாழ்த்து”.

Painting Courtesy : Shwethab [email protected].இன்

கை.அறிவழகன்