இந்தச் சகோதரி தமிழைப் பிழையாக எழுதியிருப்பதற்கு அவர் பொறுப்பில்லை!

இந்தச் சகோதரி தமிழைப் பிழையாக எழுதியிருப்பதற்கு அவர் பொறுப்பில்லை!

ப்படி ஒரு புகைப்படத்தை முகநூலில் பகிர்ந்து நண்பர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அவருக்குப் போதிய கல்வி அறிவும் மொழி அறிவும் இல்லாமல் இருக்கலாம்.ஆனால் தான் சொல்ல வந்த கருத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார். எழுத்துகளில் பிழை இருந்தாலும் கருத்துகளில் பிழை இல்லையே..நாமும் அதை முழுமையாக புரிந்து கொள்கிறோம் அல்லவா?

மொழி என்பது பிறரின் கருத்துகளை நாம் அறிந்து கொள்வதற்கும் நம்முடைய எண்ணங்களை, கருத்துகளை பிறர்க்கு உணர்த்துவதற்கான ஒரு வாயில்..ஒரு கருவி ..அவ்வளவே..மொழி இலக்கணத்திற்கு உட்பட்டது எனினும் இந்தச் சகோதரிக்குத் தன் கருத்தை உணர்த்த இலக்கண அறிவோ மொழி அறிவோ இந்த இடத்தில் தேவையில்லை..தன் கருத்தைப் பிறர்க்கு உணர்த்தினால் போதுமானது..அவர் கல்வியைப் பாதியில் துறந்தவராக இருக்கலாம்.அதற்குக் குடும்பச் சூழல், வறுமை ஏன் பெண் என்பதேகூட காரணமாக இருக்கலாம். சாலையோரங்களில் ‘ அட்டுக்கால் சுப்’ என எழுதிய தள்ளுவண்டி கடையைப் பார்த்ததில்லையா? அது அவரின் வாழ்வாதாரப் பிரச்சினை..அங்கு நாம் அவருக்கு மொழி அறிவு பாடத்தையா எடுக்கிறோம்? இல்லையே.. சூப் குடித்துவிட்டு காசு கொடுத்து விட்டுப் போகிறோம் இல்லையா?

இந்தச் சகோதரி சார்ந்திருக்கும் அரசியல் கட்சியில் நமக்கு எதிர் கருத்து மாறுபாடு இருக்கலாம்.அதை நாம் விமர்சிக்கலாம்.அவர் சொல்வது சரியான கருத்து தானே? அதில் நமக்கு உடன்பாடு இல்லையா? இங்கு கருத்து சரியாக இருந்தாலும், அவர் சார்ந்த அரசியல் கட்சியும் அவர் பிழையாக எழுதியிருப்பதும்தான் தான் நன் கண்களுக்குத் தெரிகின்றன? இது சரியான பார்வையா?

இங்கு முகநூலில் எழுதும் பலருடைய பதிவுகளில் அவ்வளவு எழுத்துப் பிழைகள், சந்திப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருக்கின்றன..என்னுடைய இந்தப் பதிவில்கூட சில சந்திப் பிழைகள் இருக்கலாம்.இதையெல்லாம் நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோமா? இல்லை.ஏனெனில் நாம் படித்தவர்கள்..இந்தச் சகோதரி படிக்காதவர்.அப்படித்தானே நாம் தீர்ப்பெழுதுகிறோம்?

எங்கள் மாணவர்களின் மாத முன்றேற்ற அறிக்கைகளிலும் விடுமுறை விண்ணப்பங்களிலும் பெற்றோர்களின் கையெழுத்து எப்படி இருக்கும் தெரியுமா? மால்லிக, முருகோசண் என்றிருக்கும்..நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்..அவர்கள் கல்வி மறுக்கப்பட்டவர்கள்..அவர்கள் கைநாட்டு வைக்காமல் இவ்வளவு அழகாக கையெழுத்திடுவது மகிழ்ச்சியாகவே இருக்கும்..

ஆக இந்தச் சகோதரி தமிழைப் பிழையாக எழுதியிருப்பதற்கு அவர் பொறுப்பில்லை..அவர் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்தான்.அவருக்கு கல்வியை மறுத்த அல்லது கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தாத சமூகமும் அரசுதான் பொறுப்பு. இதைக் கண்டு நாம் அனைவரும் நாண வேண்டும்.பிழையாகவே எழுதியிருந்தாலும் தன்னம்பிக்கையோடு தன் கருத்தை மக்களின் பார்வைக்கு வைத்த அவரைப் பாராட்டுகிறேன்.

சுகிர்த ராணி

Related Posts

error: Content is protected !!