அறிவாலயம் வந்து ஆதரவுக் கேட்டவருக்கு கை கொடுத்தார் சின்னவர்!

நாட்டின் முதல் குடிமகனான ஜனாதிபதியாக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால்,குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, டெல்லியில் என்சிபி தலைவர் சரத் பவார் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்த ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.
இந் நிலையில், சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜக கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும் அண்மையில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இதை அடுத்து , எதிர்க்கட்சி குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று சந்தித்து ஆதரவு கோரினார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து ஸ்டாலின் வரவேற்பளித்தார்.அதை சின்னவர் என்று தன்னை அழைக்க விரும்பிய உதயநிதி ஸ்டாலின் கை கொடுத்து வரவேற்று வாழ்த்து தெரிவித்து தன் சார்பில் தன் தாத்தா நூலை பரிசளித்தார்.
இதன் பின் கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, மதிமுக, விசிக, கொமதேக, மமக ஆகிய கட்சி நிர்வாகிகளிடம் யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார். அவருக்கு ஆதரவு அளிப்பது இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.